பிரமிப்பூட்டும் விடயபுரம் சிவன் கோயில்!  

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் தரிசனத்தில் இக்கோயில் போன்று ஓர் கோயிலையும்,
பிரமிப்பூட்டும் விடயபுரம் சிவன் கோயில்!  

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் தரிசனத்தில் இக்கோயில் போன்று ஓர் கோயிலையும், இறை வடிவங்களைத் தூய்மையாக வைத்திருந்த ஓர் குருக்களையும், கண்டதில்லை எனப் பதிவு செய்கிறேன்.

ஆம், நீங்கள் காணும் இக்கோயில் கொரடாச்சேரியிலிருந்து பிரியும் பாண்டவையாற்றின் வடகரையில் கொரடாச்சேரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள விடயபுரம் சிவாலயம் தான் அது.

சோழமன்னர்கள் காலத்தில் இக்கோயில் ஏழு பிரகாரம் கொண்டதாக இருந்துள்ளது. காலப்போக்கில் சிதிலமடைந்தது. இப்பகுதியினர் சில பகுதிகளை விடுத்து 1916-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தினர். தொடர்ந்து 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. 1941-ம் ஆண்டு காஞ்சி பெரியவர் நடைப் பயணமாக வந்து மூன்று நாள் தங்கி சிவனை வணங்கியுள்ளார். ஞானமார்க்கத்திற்குச் சிறப்பானது என காஞ்சி முனிவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கோயில் பிரமிப்பூட்டும் வகையில் திகழ்கிறது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் முகப்பு கோபுரமில்லை சுதை வாயிலாக அமைந்துள்ளது, அதில் அர்த்தநாரீஸ்வரர் நின்றகோலம் அற்புதமாக உள்ளது. கோபுர வாயிற்பகுதியில் ஒருபுறம் விநாயகர், மறுபுறம் முருகன் மாடங்களில் உள்ளனர். கோயில் கருவறை முகப்பு மண்டபம் நந்தி மண்டபம் என அனைத்தும் கருங்கல் திருப்பணிகள், முகப்பில் இறைவனின் எதிரில் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. வலது பக்கம் கழுத்தை சாய்த்தபடி நந்தி அமைந்துள்ளது சிறப்பு. 

அதனைக் கடந்ததும் அடுத்துள்ளது பெரிய அளவிலான முகப்பு மண்டபம். அதில் இறைவனின் வலதுபுற சன்னதியில் வலம்புரி விநாயகரின் அழகிய வடிவம், மறுபுற சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத முருகன், முருகன் என்றாலே அழகு அதிலும் இந்த முருகன் அதியுன்னத கலைப்படைப்பு. கம்பீரமாகப் பெரிய திருமேனியராக மூலவர் சுந்தரேஸ்வரர். ஆவுடையார் முதல் லிங்கம் வரை 6 அடி உயரத்திலும், அம்மன் 5 அடி உயரத்திலும் அருள்பாலிக்கிறார்கள். கற்பூர தீபம் பாணத்தில் பிரதிபலிக்கிறது அந்தளவுக்கு வழுவழுப்பான பாணம், அதனைத் தொடர்ந்து சுத்தமாக எண்ணெய்ப் பிசுக்கின்றி குருக்கள் பராமரிக்கிறார். 

கருவறை படிக்கட்டுகளின் மேல் இரட்டை விநாயகர்கள் சுந்தரேஸ்வரர், அவர்தம் மைந்தர்களுமே இத்தனை அழகென்றால் அம்பிகை!! எப்படி இருப்பார்? வந்த ஊர் மறக்க, வந்த நாள் மறக்க, வந்த வேலை மறக்க, வந்த வேண்டுதல் மறக்க முழுமையாய் நம்மை ஆகர்ஷிப்பவளே மீனாட்சி. மெய்மறந்து நிற்கும் வேளையில் ஏந்தி நின்ற கையில் வெற்றிலைபாக்குடன் வாழைப்பழமும் விழுகிறது. ஆம், இங்குள்ள அம்பிகை சன்னதியில் நமக்கு வேறெங்குமில்லாத வகையில் விபூதி பிரசாதத்துடன் வாழைப்பழம், வெற்றிலை பாக்கு கொடுக்கின்றனர். இதனை விடய பிரசாதம் எனக் கூறுகின்றனர். இதனால் இவ்வூருக்கு விடைய புரம் என அழைக்கின்றனர். விடையை வாகனமாகக் கொண்டதாலும் இப்பெயர் வந்திருக்கலாம்.

இம்மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் இரு லிங்கங்கள், அம்பிகை ஆகியன உள்ளன. திருவாரூர் அருகே உள்ள கல்யாண மகாதேவி தலத்தின் கல்யாண மீனாட்சியின் ஆதிமூலத்தோற்றம் விடய புரம். இங்கு மீனாட்சியைத் தரிசித்து, கல்யாண மகாதேவி சிவதலத்தில் கல்யாண மீனாட்சியை வழிபடுவது தொன்றுதொட்டு வரும் ஐதீகமாகும்.

இத்தலத்தில் அருள்பாலிக்கும் மீனாட்சி தேவி, சர்வ மீனாம்பிகை தேவியருக்கும் மூத்த அம்பிகையாய் சதுர்கோடி யுகங்களிலும் துலங்கி அருள் பாலித்துவருகிறார். ராதை, பார்வதி, திருமகள், சரஸ்வதி, சாவித்திரி ஆகிய பஞ்சமா தேவி வழிபாடு முற்காலத்திலிருந்துள்ளது. நதிக்கரை தலமான இப்பகுதியில் கிருஷ்ண பரமாத்மா ராதையுடன் தோன்றி அருள் வழங்கிய இடம் அருகில் உள்ள ராதா நல்லூர். 

கிருஷ்ணர் தோன்றிய நந்தன தமிழ் வருடத்தில் நவராத்திரிக்கான விசேஷத்தலமாக விடயபுரம் குறிப்பிடப்பட்டு சிவ, விஷ்ணு பூமி எனச் சிறப்பிடம் பெறுகிறது. இங்கு ஒன்பது நாட்கள் தங்கி நவராத்திரிப் பூஜைகள் செய்வதால், நம்மையும், மனது சந்ததிகளையும் நன்கு தழைக்க வைக்கும் சிறப்பிற்குரியது. கருவறை கோட்டத்தில் விநாயகர், மற்றும் தென்முகன் மட்டும் உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்கள் உள்ளனர். 

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com