அட்சய திருதியன்று வணங்க வேண்டிய திருத்தலம்!

மகாகல்பம்' என்று சொல்லப்படும் ஒரு பிரம்ம கல்பம் முடிந்து, உலகமெங்கும் பேரூழியால் தண்ணீர் சூழ்ந்து உயிர்கள் அனைத்தும் மூலப்பொருளாக..
அட்சய திருதியன்று வணங்க வேண்டிய திருத்தலம்!

மகாகல்பம்' என்று சொல்லப்படும் ஒரு பிரம்ம கல்பம் முடிந்து, உலகமெங்கும் பேரூழியால் தண்ணீர் சூழ்ந்து உயிர்கள் அனைத்தும் மூலப்பொருளாக விளங்கும் சிவபிரானிடத்தில் ஒடுங்கி இருந்தபின், மீண்டும் இறைவன் உயிர்களைப் படைக்கத் தொடங்கும் நாள் அட்சய திருதியை திருநாள். அட்சய என்ற சொல்லுக்கு "கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது' என்று பொருள். அதாவது "க்ஷயம்' என்றால் கேடு, "அக்ஷயம்' என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும். அந்நாளில் நாம் செய்யும் எந்தச் செயலும் குறைவின்றி வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திருதியைத் திதியே அட்சயத் திருதியை ஆகும். இந்நாளில் வழிபடவேண்டிய திருத்தலம்தான் கீழ்வேளூர் அருள்மிகு வனமுலை நாயகி உடனுறை அருள்மிகு கேடிலியப்பர் (அட்சயலிங்கர்) திருத்தலமாகும். சிலந்திச் சோழனாம் கோட்செங்கட்சோழன் எடுப்பித்த மாடக்கோயில் இந்தக் கீழ்வேளூர் திருக்கோயில்.

"அகத்திய' என்றழைக்கப்படும் வெட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாற்றில், இன்னிசையால் தமிழைப்பரப்பிய திருஞானசம்பந்தப் பெருமானுக்கும், நம்பியாரூரர் என்றழைக்கப்படும் சுந்தரருக்கும் ஓடம் விட்டு திருவருள் புரிந்த காரணத்தால் "ஓடம்போக்கி' எனப் பெயர் பெற்ற ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது கீழ்வேளூர். இது,தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 147 ஆவது திருத்தலமாகும்.

இவ்வாலயத்தின் ராஜ கோபுரம் கற்றளியால் கட்டப்பட்டு ஐந்து நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. ஒருவரது ஜாதகத்தில் 5 ஆம் இடமாகிய பூர்வபுண்ணிய ஸ்தானம் என்பது அவரது முற்பிறவிகளில் செய்துள்ள பாவ புண்ணியங்களையும் அதனால் இப்பிறவியில் அவர் அனுபவிக்கவுள்ள இன்ப துன்பங்களையும் குறிப்பிடுகிறது. இந்தப் பூர்வபுண்ணிய ஸ்தான தோஷமிருப்பவர்கள், இத்தலத்து இறைவனை வழிபட்டால் அந்தத் தோஷம் அடியோடு நீங்கப் பெறுவார்கள் என்பதையே அப்பரடிகள், "கீழ்வேளூராளுங்கோவைக் கேடிலியை நாடுமவர் கேடிலாரே' என்று பாடியுள்ளார்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற அமிர்த கலசத்திலிருந்து விழுந்த ஒரு துளி அமிர்தம் இரண்டாகப்பிரிந்து இந்தப் புண்ணியமான பாரத பூமியின் வடக்கிலும் தெற்கிலும் விழுந்து இலந்தை வனமாக உருவெடுத்தது. வட இந்தியாவில் உருவான இலந்தை வனம் (இலந்தை - பதரி) "உத்ர பதரிகாரண்யம்' என்றழைக்கப்படும் உத்ரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத் திருத்தலமாகும். தென் திசையில் உருவான இலந்தை வனம் "தக்ஷிண பதரிகாரண்யம்' எனப்படும் திருக்கீழ்வேளூராகும்.இத்தலத்தின் இறைவன் சுடரொளியாய், வளரொளியாய், மரகதத்தின்உருவாய், ஆதியந்தமில்லா சுயம்புவாய், மும்மூர்த்திகளும், மூன்று தேவிகளும், அஷ்ட வசுக்களும், நவநிதிகளும் வாசம் செய்யும் சிறப்பு மிக்க அக்ஷய பாத்திரத்துக்கு அதிபதியாய், குறைவில்லாதவராய், அனைத்து ஜீவராசிகளையும் ரட்சித்து அருள்பவராய் கேடிலியப்பர் என்றும், ஸ்ரீ அட்சயலிங்க சுவாமி எனவும் வழங்கப்படுகிறார்.

இவ்வுலக வாழ்வு முடிந்து ஜீவன் "வைவஸ்வதம்' என்னும் விண்ணுலகை அடையும் போது அந்த ஜீவன் பூவுலகில் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப, சொர்க்கம் அல்லது நரகம் சென்று வசிக்க எமதர்மராஜன் உத்தரவிடுகிறார். அந்த ஜீவனது பாவ புண்ணிய கணக்குகளைக் குறித்து வைக்க சித்ரகுப்தருக்கு 12 சிரவணர்கள் உதவி செய்து வருகிறார்கள். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும் அவன் திருக்கீழ்வேளூர் திருத்தலத்து இறைவனின் திருத்தாள்களைப் பற்றிக் கொண்டால், அவனது பாவங்களை நீக்கி அருள்புரிகிறார் அக்ஷயலிங்கப் பெருமான். கருவறைக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் சித்திரகுப்தருக்கு உதவி செய்துவரும் 12 சிரவணர்களும் 12 தூண்களாக இங்கு விளங்குகிறார்கள். இவர்கள் பக்தர்களைக் கண்காணிப்பதால் அவர்கள் தங்கள் பாவங்கள் விலகி நற்கதி அடைகிறார்கள்.

இறைவனுக்கு அருகில் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அம்பிகை வனமுலை நாயகி என்றும் சுந்தர குஜாம்பிகை எனவும் வழங்கப்பெறுகிறார். ஸ்ரீமுத்துசாமி தீக்ஷிதர் தனது "அக்ஷயலிங்கவிபோ' என்ற கீர்த்தனையில் "பதரி வன முல நாயகி' என்றே குறிப்பிடுகிறார். குமரக் கடவுளின் தவத்திற்கு ஏற்பட்ட இன்னல்களைக் களைய வனமுலை நாயகி அம்பாள் பத்ரகாளித் திருவுருவம் கொண்டு இத்தலத்தின் ஈசான்யத்தில் எழுந்தருளியுள்ளார். இந்தக் காளியே அடியார்களால் "அஞ்சுவட்டத்தம்பிகை' எனச் சிறப்பித்துப் போற்றப்படுகிறாள்.

இத்தலத்தில் விநாயகர் "பதரிவிநாயகர்' எனவும், முருகப்பெருமான் வடதிசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் தவமியற்றும் பாலசுப்ரமணியராகவும் திகழ்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் கேடிலியப்பரான அட்சயலிங்கப் பெருமானைத் தொழுதவண்ணம் அருள்செய்கிறார். 

ஸ்ரீகுபேர பகவான். ஒரு அட்சயதிருதியை நன்னாளில் இறைவனை வணங்கித் துதித்ததின் பயனாக, இறைவன் இவரை வடதிசை அதிபதியாக்கி சங்கநிதி, பதுமநிதி, கச்சநிதி, கற்பநிதி, நந்த நிதி, நீலநிதி, மகாநிதி, முகுந்த நிதி, மகாபத்மநிதி என்னும் நவநிதிகளையும் அளித்து அழகாபுரி என்னும் குபேரபுரியை ஆளும் அருளை வழங்கினார்.

சமுத்திர குப்தன் எனும் வணிகன் தீய வழியில் தனது செல்வம் முழுவதையும் இழந்தான். அதன்பின்னர் இரந்துண்ணும் நிலைக்கு வந்த அவன், இவ்வாலயத்தில் பிரசாதம் பெற்றுப் புசிக்கலாம் என்று வந்தான். அப்போது அவன், கொடிமரத்தின் அருகே மயங்கி விழுந்தான். கேடிலியப்பர், குபேரனிடம் அவனுக்கு மீண்டும் வேண்டிய செல்வத்தை அளிக்குமாறு அருளினார். அவன் மயக்கமுற்று கீழே வீழ்ந்திருந்தாலும், விழுந்து வணங்கியதாகவே ஏற்றுக்கொண்டு கருணையுடன் அருளினார்.

தனது பெருத்த பேழை வயிற்றைக் கண்டு பரிகாசம் செய்த சந்திரனின் மீது கோபங்கொண்ட விநாயகர், சந்திரனை பிறர் பழிக்கும்படி கலைகள் குறையும் என சாபமிட்டார். அந்தச் சாபம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் சந்திர தீர்த்தத்தை ஏற்படுத்தி, அதில் மூழ்கி நியமத்துடன் அட்சயலிங்கரை வழிபட்டார் சந்திரன். அதனால் சந்திரனது க்ஷயங்கள் நீங்கியது. இந்த நிகழ்வு ஒரு அட்சயதிருதியை நன்னாளில் நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com