யோகிகளுக்கு ஐம்புலன்கள் செயல்படுவதில்லையாம்..! காரணம்?

விலங்குகளுக்கும் ஐம்புலன்கள் உள்ளன. ஆனால், மனிதன் மட்டுமே ஐம்புல நுகர்ச்சிகளின் மூலம் அறிவை விருத்தி செய்து கொள்கிறான்.
யோகிகளுக்கு ஐம்புலன்கள் செயல்படுவதில்லையாம்..! காரணம்?

விலங்குகளுக்கும் ஐம்புலன்கள் உள்ளன. ஆனால், மனிதன் மட்டுமே ஐம்புல நுகர்ச்சிகளின் மூலம் அறிவை விருத்தி செய்து கொள்கிறான். அதற்கு அவனுக்குச் சொல்(வாக்கு) எனும் தத்துவம் உதவுகிறது. ஆனால், என்னதான் அறிவை விருத்தி செய்து கொண்டிருந்தாலும், மனிதன் பல நேரங்களில் தனக்கோ, பிறருக்கோ தீமை தரும் செயல்களைச் செய்து விடுகிறான். 

இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? என்று ஆராய்ந்து பார்க்கும்பொழுது, அதற்குக் காரணம் குணதோசமே என்பது தெரிய வருகிறது. அதாவது மனிதன் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற ஐந்து புறக் கருவிகளான பொறிகளைப் பெற்றிருக்கிறான். 

அவற்றின் மூலமாக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்கிற ஐம்புலன்கள் தோன்றுகின்றன. இப்புலன்கள் இன்பம் தரும் பொருட்களை அடையுங்கால் இன்பமும், துன்பம் தரும் பொருட்களை அடையுங்கால் துன்பமும் விளைகின்றன. 

இந்தப் பொறிகள் ஐந்தும் இயங்கிப் புலன்கள் தோன்ற உதவி செய்வது மனம், அறிவு (புத்தி), உள்ளம் (சித்தம்), அகங்காரம் (முனைப்பு) என்கிற நான்கு அக்கருவிகளாகும். மனமானது ஒரு பொருளைப் பற்றுகிறது. அறிவு அந்தப் பொருளை இதுதான் என்று முடிவு செய்கிறது. உள்ளம் அந்தப் பொருளைக் குறித்து ஆராய்கிறது. அகங்காரம் (முனைப்பு) அப்பொருளை அறிவேன் என்று முனைந்து எழுகிறது.

இப்படி அறிந்து, ஆராய்ந்து தெளிந்த பின்பும்கூட தவறு செய்துவிடுவது எதனால் என்று ஆராய்ந்தால் தவறோ, சரியோ அவற்றிற்கு அடிப்படையாக அமைவது முக்குணங்களான கிளர்ச்சி (இராட்சதம்), மடிமை (தாமதம்), தூய்மை (சத்துவம்) என்பவையே என்பது விளங்க வரும். 

உடம்பின் புறத்தே அமைந்திருப்பதால் மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றைப் புறக் கருவிகள் என்றும், முனைப்பு, மனம், சிந்தை, அறிவு ஆகிய கருவிகள் உடலுக்குள் இயங்குவதால் அவற்றை அகக் கருவிகள் என்றும், உயிரில் மறைந்து கிடக்கும் முனைப்பு, மடிமை, தூய்மை ஆகிய அடிப்படைப் பண்புகளைக் குணங்கள் என்றும் கூறுவர்.

உதாரணமாக ஒருவன் ஒரு கனியை உண்ண விரும்புகிறான் என்று வைத்துக் கொள்வோம். முதலில் மனம் கனியைப் பற்ற வேண்டும், முனைப்பு என்கிற உட்கருவி கனியை உண்பேன் என்று எழுதல் வேண்டும். 

இது கனிதானா என்று சிந்தை ஆராய வேண்டும். இது உண்ணுவதற்கு ஏற்ற கனிதான் என்று புத்தி உறுதி செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் நாவாகிய புறக் கருவி கொண்டு சுவையாம் புலன் இன்பத்தை அவன் அடைய முடியும். நால்வகை அகக் கருவிகளும் க்ஷணப் பொழுதில் செயல்பட்டு கனியைச் சுவைக்க உதவுகின்றன. 

இவையனைத்திற்கும் மேலாக கனியைச் சுவைத்து இன்புறுவதற்கு முக்குணங்களில் தாமத குணம் கூடாது. தூய்மை எனப்படும் சத்துவ குணம் வேண்டும். இது போலவே இசை எனும் இன்பத்தைப் பெறுவதற்கு காது, சிந்தை, கிளர்ச்சி ஆகிய மூன்று கருவிகள் வேண்டும். காட்சி இன்பத்தைப் பெறுவதற்கு கண், சிந்தை, கிளர்ச்சியும், ஊற்றின்பம் பெற உடல், சிந்தை, கிளர்ச்சியும், மணத்தின் இன்பத்தை நுகர மூக்கு, சிந்தை, கிளர்ச்சியும் வேண்டும். 

ஆறாவது கருவியாகிய அறிவினால் பெறும் நல்லின்பங்களுக்குச் சிந்தை, கிளர்ச்சியோடு தூய்மை குணமும் வேண்டும். ஆகவே இன்பமும் பயனும் விரும்பும் ஒருவன் ஒரே நேரத்தில் ஒரு பொருளில் மனதைச் செலுத்தும் பொழுது, அந்தப் பொருளுக்குரிய ஒரு உட்கருவி ஓர் உட்கருவி, ஒரு குணத்தையே கொண்டிருத்தல் வேண்டும். 

கனியை உண்ணத் தலைப்படுபவன் நா, சுவை, தூய்மை இவற்றிலேயே தன் அறிவை நிறுத்துதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கனியைச் சுவைக்கும் பொழுது வேறு பொறியாகிய காதால் இசையைக் கேட்டுக்கொண்டு, மடிமை உணர்வை மேற்கொண்டிருந்தால் அந்தக் கனியின் சுவையின்பத்தை அவனால் பெற முடியாது. 

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட விரும்பும் ஒருவன் தன் கண்களால் இறைவனின் திருவுருவைக் காணும்பொழுது, அதில் ஈடுபடாது, வேறு காட்சிகளைக் காண்பதோடு, சிந்தையில் இறைவன் அருளைப் பற்றிச் சிந்திக்காமல் மடிமை குணத்தால் சோர்ந்திருப்பானாயின் அவனுக்குப் பக்தி உணர்வு தோன்றாது.

தியானத்தில் திளைத்திருக்கும் யோகிக்கு ஐம்பொறிகள் செயல்படுவதில்லை. அகக்கரணங்கள் நான்கினில் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய மூன்றும் செயல்படுவதில்லை. சிந்தை மட்டுமே பரம்பொருள் இன்பத்தில் திளைத்து நிற்கின்றது. 

முக்குணங்களில் மடிமையும், கிளர்ச்சியும் அடங்கி நிற்கின்றன. தூய்மை மட்டுமே அவர்தம் பண்பில் அமைந்திருக்கின்றது. அந்நிலையில் பரம்பொருள் என்கிற ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மூழ்கித் திளைத்து இடையீடில்லாத தொடர்ந்த பேரின்பத்தை அவர் அடைந்திடுகிறார். 

பல கம்பிகளின் வழியாகப் பாய்கின்ற மின்சாரத்தை ஒரே கம்பியில் செலுத்தும் பொழுது அதன் ஆற்றல் அதிகரித்துவிடுவது போல பல கருவிகள் வழியாக விரயமாகிக் கொண்டிருந்த தன் ஆற்றல்கள் அனைத்தையும் சிந்தையில் கொண்டு போய் செலுத்தும் பொழுது யோகி அடைகின்ற இன்பத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. 

நம் கருவிகள் அனைத்தும் சிற்றறிவைப் பற்றி நிற்பதால் சிற்றின்பத்தையே பெறுகின்றன. யோகியின் கருவிகள் யாவும் பேரறிவினால் அமைந்தவையாதலினால், அப்பேரறிவுக்கேற்ற அளவில் அவருக்குப் பரம்பொருளிடம் இருந்துவந்த இன்பமும் பேரின்பம் ஆயிற்று. 

இந்நிலையில் அவர் தம் கருவிகள் அனைத்தும் ஒடுங்கிய நிலையில் பேரின்பத்தில் நிலைத்திடும் பொழுது, அந்தப் பேரின்பமும் வெள்ளமெனப் பெருகி விடுகின்றது.

"அர்த்தமுள்ள இந்து தர்மம்"

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

- கோவை பாலகிருஷ்ணன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com