Enable Javscript for better performance
உலக நன்மை வேண்டி ஏகாதச ருத்ர பாராயணம்- Dinamani

சுடச்சுட

  
  20190513_103255

   

  ஸ்ரீருத்ரம் என்பது கிருஷ்ண யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய சம்ஹிதையில் நான்காம் காண்டத்தில், சிவனைத் துதித்துச் சொல்லப்படும் பெரும் அதிர்வைக் கொடுக்கக்கூடிய மஹாமந்திரம். பஞ்சாட்சர மந்திரம் (நமசிவாய) இதன் நடுவில் உள்ளது. வேதத்தில் சிறந்தது, கண்ணாய் விளங்குவது ஸ்ரீருத்ரம் ஆகும். இதன் தோற்ற காலம் வரையறுக்கப்படவில்லை. இதனை ருத்ரப்ரஸ்னா, சத்ருத்ரயா, ருத்ரத்யாய என்று பல பெயர்களில் சைவ ஆகமத்தில் குறிப்பிடுகிறார்கள். சைவ ஆகமமோ, வைணவ ஆகமமோ ஒரு கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும்போது அது விக்னமின்றி நடைபெற ருத்ரனை அழைக்கவேண்டும். அதற்கு ஸ்ரீருத்ரம் சொல்லி ஆவாஹனம் செய்வது மரபு. 

  இது இரு பிரிவுகளாக உள்ளது. ஸ்ரீருத்ரம் என்பது நம் முற்பிறவியில் தொடரும் வினைகளை அறுப்பதற்காக சிவனை வேண்டுதல். ச்சமகம் என்பது நமக்கு நன்மையை பெறுவதற்குச் சிவனை வேண்டுதல் ஆகும். ஒவ்வொன்றும் 11 அநுவாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் வேதத்தில் 33 முக்கிய கடவுள்களாகப் பிரித்து அதில் ருத்ரனுக்கு 11ஆம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ருத்ரம் மற்றும் ச்சமகம் இரண்டும் அட்சர பேதமின்றி ஏற்ற இறக்கத்துடன் யார் வேண்டுமானாலும் கூறலாம். 

  ஏகாதஸ ருத்ர பாராயணம் என்பது ஸ்ரீருத்ரத்தை 11 முறை கூறி, தொடர்ந்து ச்சமகத்துடன் மஹன்யாசம் என்பது, எப்போதும் கோபமாய் இருக்கும் ருத்ரனை வர்ணிப்பது ஆகும். இதனை 12 வேதம் பயின்ற நபர்களுக்குக் குறையாமல் (அதிகம் பேர் இருக்கலாம்) கூறவேண்டும். இதற்கு முன் 12 கலசத்தில் சுத்தமான நீரினை ஊற்றி ஏலக்காய், ஜாதிக்காய், பச்சைகற்பூறம் போன்ற வாசனை திரவியங்களை அதில் போட்டு, மாவிலை கொத்து மற்றும் தேங்காயை அதன் நடுவில் வைத்து புஷ்பத்தினால் அலங்கரிப்பார்கள். ருத்ரம் ஆரம்பித்தவுடன் அவரை "நமஸ்தே ருத்ர மன்யவே" அதாவது "உன் கோபத்திற்கு நமஸ்காரம்" என்று அவரை வர்ணித்தும், சந்தோஷபடுத்தியும், தொடர்ந்து ஸ்படிக லிங்கத்தினால் ஆன சந்திர மௌளீஸ்வரருக்கு அபிஷேகமும் தொடரும். இது முடிந்தபின் ருத்ர ஹோமம் (ஏஹோன சப்ததி - பதம் பிரித்து சொல்லுதல்) நடைபெறும்.

  ஹோமகுண்டத்தை சுற்றிலும் வேதம் பயின்றவர்கள் அமர்ந்துகொண்டு ச்சமகத்தை (300 வகையான பிரார்த்தனை) கூறிக்கொண்டு நல்ல நெய்யினால் அந்த குண்டத்தில் ஊற்றுவார்கள் (ஆஹுதி என்று பெயர்). பின் அந்த கலசத்திலுள்ள புனித நீரினை சிவனாருக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனால் அந்த இடமே ஒரு அதிர்வை (வைப்ரேஷன்), தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவருக்கு 60 வயது, 70 வயது மற்றும் 80 வயது பூர்த்தியாகும் நிகழ்வில் முதல் நாள் இந்த முறையில் செய்து அந்த தம்பதிக்கு அபிஷேகம் செய்விப்பது வழக்கம். இதனால் அந்த தம்பதிக்கு உடலில் உள்ள குறைகள் விலகி; சக்தி (எனெர்ஜி) உயரும், நன்மை ஏற்படும் என்பது திண்ணம்.

  இப்படி இந்த ஏகாதஸ(11) ருத்ர ஜப ஹோமத்தை குரோம்பட்டை நேரு நகர் பகுதியில் வசிக்கும் ஸ்ரீ சேகர் தீஷிதர், வேதம் படித்த வைதீகர்கள் ஒருசேரக் கிடைக்க ஏதுவாக அமாவாசைக்குப்பின் வரும் அஷ்டமி, நவமிகளில் ஒவ்வொரு மாதமும் காலை 6.30 மணிக்கெல்லாம் ஆரம்பித்து மதியம் 2 மணி வரை இடைவிடாமல் தொடர்ந்து உலக நன்மை கருதி, செம்மங்குடி சிவகுரு தீஷிதர் ட்ரஸ்ட் மூலம் பெரும் பொருட்செலவில் தொடர்ந்து செய்து வருகிறார். சென்ற 13.5.2019 அன்று 13-வது மாதமாக இந்த நிகழ்வினை தாம்பரம் சானிடோரியத்திலுள்ள தனஸ்ரீஹாலில் நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீஸ்ரீசங்கராச்சாரிய ஸ்வாமிகளின் அநுக்ரஹம் வேண்டி இதில் பூஜிக்கப்பட்ட கலசமானது ஒவ்வொரு மாதமும் அவரிடம் நேரில் சமர்ப்பிக்கப்படுகிறது. 

  தொடர்பு கொள்ள - ஸ்ரீ சேகர் தீஷிதர்

  Mob: 9790958077 cell: 044-22236751

  ஆன்மீக எழுத்தாளர் எஸ்.எஸ். சீதாராமன்
  மொபைல்: 94441 51068

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai