Enable Javscript for better performance
அடியார்களின் இடர்கள் களைய வேண்டுமா? திருநெடுங்களம் சிவன் கோயிலுக்கு வாங்க!- Dinamani

சுடச்சுட

  

  அடியார்களின் இடர்கள் களைய வேண்டுமா? திருநெடுங்களம் சிவன் கோயிலுக்கு வாங்க!

  Published on : 15th May 2019 09:49 AM  |   அ+அ அ-   |  

  16

   

  நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களமே யவனே!

  முதலில் பாடல் பெற்ற தலங்கள் என்றால் என்ன என்று உணர்வோம். நம் நாட்டில் ஏகப்பட்ட சிவாலயங்கள் உள்ளன. சிவத்தை வளர்ந்த பல அடியார்கள் பற்றி நமக்குத் தெரியும். அறுபத்து மூன்று நாயன்மார்கள், நால்வர் என இந்த பட்டியல் நீளும். இவற்றினுள் நால்வர் பெருமக்கள் தரிசித்த சிவாலயங்களில் தரிசனத்தோடு, தேவாரம் போன்ற பாடல்கள் பாடியுள்ளனர். இந்த பாடல்கள் அனைத்தும் தமிழ் மந்திரங்கள் என்றே சொல்லலாம். இதுபோல் அருணகிரிநாதர் பாடி தரிசித்த தலங்கள் திருப்புகழ் தலங்கள் என வழங்கப்படும். இவை தாண்டி பரிகாரத்தலங்கள், சித்தர் கோயில்கள் எனக் கோயில்களைப் பகுத்து அறியலாம். அந்த வரிசையில் நாம் தரிசித்த பாடல் பெற்ற தலத்தை இங்கே தொடர விரும்புகின்றோம்.
   
  திருச்சியை அடுத்த துவாக்குடிக்கு ஐந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது திருநெடுங்குளம். அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் பசுமை படர்ந்த கழனிகளாய் இருந்தன. அதனாலேயே இது திருநெடுங்களம் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு அதுவே மருவிப்போய் திருநெடுங்குளமானது.

  நம்மை வரவேற்கும் ராஜ கோபுரம்

  திருநெடுங்களம் குறித்து ஒரு ஐதீகம் உண்டு. முந்தைய காலத்தில் திருநெடுங்களம், வாழவந்தார் கோட்டை ஜமீனின் கட்டுக்குள் இருந்தது. ஜமீனுக்குச் சொந்தமான காராம் பசு மாடுகள் திருநெடுங்குளம் காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு வருவதுண்டு. அதில் ஒரு பசு தினமும் மாலையில் வீடு திரும்பும் போது பால் வற்றிப்போன மடியோடு திரும்பியது.

  இந்த மாயத்தை அறிவதற்காக ஜமீனின் ஆட்கள் ஒரு நாள் அந்த பசுவை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அது ஒரு புதருக்கு அருகில் போய் நின்று தானாகவே பாலை அந்தப் புதரில் சுரந்தது. ஆச்சரியப்பட்ட ஜமீன் ஆட்கள், பசு பாலைச் சுரந்த இடத்தில் மண்வெட்டி கொண்டு வெட்டினார்கள். பூமிக்குள் சுயம்புவாய் முளைத்திருந்த சிவலிங்கம் மண்வெட்டியால் வெட்டுப்படப் பூமிக்குள்ளிருந்து பால் பீறிட, விவரம் தெரிந்து ஓடிவந்த ஜமீன்தார், அந்த இடத்திலேயே சிவனுக்குச் சிறியதாய் ஒரு ஆலயம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.

  கோயில் கருவறைக்கு மேலே பெரும்பாலும் ஒரு விமானம் இருப்பதே வழக்கம். ஆனால், திருநெடுங்களநாதரின் கருவறைக்கு தட்சண விமானம், கைலாய விமானம் என இரண்டு விமானங்கள். காசிக்கு அடுத்தபடியாக இங்குதான் இந்தச் சிறப்பு என்கிறார்கள்.

  சிவபெருமான் மீது காதல் கொண்ட பார்வதி தேவி, அவரைக் கரம்பிடிப்பதற்காக இந்த இடத்தில் கடுந்தவம் புரிந்தார். தவத்தை மெச்சிக் காட்சிகொடுத்த சிவன், பார்வதி தேவியைக் கைப்பிடித்த இடமும் இதுதான் என்கிறது புராணம். உமையொரு பாகனாகிய ஈசன் கருவறைக்குள் தேவிக்கு தனது இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்து வலது பக்கமாய் சற்றுத்தள்ளி அமர்ந்திருக்கிறார். ஐதீகப்படி இங்கே தேவியும், சிவனுக்குப் பக்கத்தில் ஒப்பில்லாநாயகி அரூபமாய் அமர்ந்திருக்கிறார். அதனால்தான் இருவருக்குமாய் சேர்த்து இரண்டு விமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

  காவிரிக்கு தென்கரையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் எட்டாவது திருத்தலம் இது. ஒருமுறை அகத்தியரே இங்கு வந்து வழிபட்டதாகவும் நம்பிக்கை உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் உள்ள அகத்தியர் சந்நிதிக்கு எதிரே ஒரு கிணறு உள்ளது. இதை அகத்திய தீர்த்தம் என்கிறார்கள். சிவனுக்குப் பூஜை செய்வதற்காக அகத்தியர் தனது கட்டை விரலை பூமியில் அழுத்தியதால் வந்ததாம் இந்தக் கிணறு. இதில், கையால் எட்டித் தொட்டுவிடும் தூரத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். 

  திருநெடுங்களநாதருக்கு மாதுளை முத்துக்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. இத்திருத்தலத்தில் சிற்ப உரல் ஒன்று உள்ளது. சிவபெருமான் தவத்தில் இருந்த போது இந்த உரலில் விரலி மஞ்சள் இடித்து அதைக்கொண்டு உடம்பில் பூசிக் குளித்து சிவபெருமானுக்கு பூஜை செய்தாராம் பார்வதி தேவி. இந்த உரலில் விரலி மஞ்சள் இடித்து ராகு காலத்தில் ஒப்பிலாம்பிகைக்கு அபிஷேகம் செய்தால் பெண்களின் திருமணத் தடைகள் நீங்கும் என்பது இப்போது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.  

  திருநெடுங்களம் என்றால் "சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.

  இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார். அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

  ராஜகோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் ஆலயம் வெளிப்புறம் அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தங்கள் சோமாஸ்கந்தர், விநாயகர், வள்ளி தெய்வயானை உடனாகிய சுப்பிரமணியர் முதலியன சிறப்பாகவுள்ளன. இங்குள்ள வெண்கலக்குதிரை விந்தையான அமைப்புடையது. மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல்உரல் சிறந்த வேலைப்பாடாக அமைந்தது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம், சதுர்ப்புஜம். தவஞ்செய்த அம்பிகையை இறைவன் கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்ற, அச்சமுற்று அம்பிகை ஓடியொளிந்த இடம், ஒளிமதிச்சோலை என்று வழங்குகிறது.

  நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

  திருஎறும்பியூர் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு ஆளுடைய பிள்ளையார் திருநெடுங்களத்தை அடைந்து வழிபட்டு `நின்பால் நேசம் செலாவகைத் தடுக்கும் இடும்பை தீர்த்தருள்வாய்' என வேண்டி 'மறையுடையாய்' என்னும் இத்திருப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.
    

  திருநெடுங்களம்  

  பண் -  பழந்தக்கராகம்      
        
  திருச்சிற்றம்பலம்    
        
      மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்  
      பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்  
      குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்த  
      நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.1
        
      கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்  
      தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை  
      மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்  
      நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.2
        
      நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத  
      என்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்த  
      பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்  
      நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.3
        
      மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்  
      அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூரா  
      தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்  
      நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.4
        
      பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்  
      தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்  
      தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்  
      நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.5
        
      விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து  
      கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்  
      அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்  
      நிருத்தகீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.6
        
      கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்  
      மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்  
      ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த  
      நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.7
        
      குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கை  
      அன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்  
      என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்  
      நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.8
        
      வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்  
      சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்  
      கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்  
      நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.9
        
      வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்  
      தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்  
      துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே  
      நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.    1.52.10
        
      நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்  
      சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்  
      நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்ன    1.52.11
      பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.  
        
      திருச்சிற்றம்பலம் 

  கோயிலுக்கு வெளியே இருந்த திருக்குளம் கண்டோம். மகிழ்ச்சி அடைந்தோம். கதிரவனின் அழகில் ராஜ கோபுர தரிசனம் மீண்டும் பெற்று அங்கிருந்து விடை பெற்றோம்.
   
  நிறையுடையார்
  நினைத்தெழுவார்
  நின்னடியார்
  நிலைபுரிந்தார்
  நீங்கிநில்லார்
  நிருத்தகீதர்
  நீறுகொண்டார்
  நின்றுநைவார்
  நீழல்வாழ்வார்
  நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களமே யவனே. என்று பாடி பரவசம் அடைந்தோம்.

  முதல் திருத்தலத்தில் திருப்புகழ் தலமும் சேர்ந்து விட்டது. ஆக, ஒரே பதிவில் இரண்டு பாடல் பெற்ற தலங்களாய்.. தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.

  மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
   
  - ராகேஷ் TUT 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai