
திருமலையில் நடத்தப்பட்ட காரிசிஷ்டி யாகம்.
திருமலையில் மழை வேண்டி நடத்தப்படும் காரிசிஷ்டி யாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த யாகத்தை திருமலையில் கடந்த 2005 முதல் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. நிகழாண்டில் காரிசிஷ்டி யாகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நாட்டில் மழை பெய்து பஞ்சம், பட்டினி இல்லாமல் மக்கள் வளமுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து யாகம் தொடங்கப்பட்டது. இதற்காக திருமலையில் உள்ள கோகர்ப்பம் நீர்த்தேக்கம் அருகில் உள்ள பார்வேட்டு மண்டபத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த யாகம் நடைபெற்றது. வரும் 18-ஆம் தேதி வரை காரிசிஷ்டி யாகம் திருமலையில் நடைபெற உள்ளது.
வருண ஜபம்: திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி செவ்வாய்க்கிழமை வருண ஜபம் நடத்தப்பட்டது. காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயில் எதிரில் உள்ள திருக்குளத்தில் நின்றபடி வேத விற்பன்னர்கள் காலை 9 மணிமுதல் 12 மணி வரை வருண பகவானை வேண்டி ஜபம் செய்தனர். வரும் 18-ஆம் தேதி வரை கோயிலில் வருண ஜபம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
காரிசிஷ்டி யாகமும், வருண ஜபமும் நடைபெறும் நாள்களில் திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில் தினசரி மாலை வேளையில் அம்ருதவர்ஷினி ராக ஆலாபனை செய்யவும், மகாபாரதத்தில் வரும் விராட பர்வத்தை பாராயணம் செய்யவும் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.