12 பாவத்தில் மும்மூன்று பிரிவுகள் மற்றும் மூன்று சுற்றுகளின் சூட்சமங்கள்!

பூமியின் தன் சுழற்சியால் 24 மணி நேரத்தில் சூரியன் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றிவர..
12 பாவத்தில் மும்மூன்று பிரிவுகள் மற்றும் மூன்று சுற்றுகளின் சூட்சமங்கள்!

பிறப்பு லக்னமும் அதன் சுழற்சியும்

பூமியின் தன் சுழற்சியால் 24 மணி நேரத்தில் சூரியன் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றிவர 365 நாட்கள் ஆகிறது. பூமியின் சுற்றுப்பாதை ஒரு நீள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. ஒரு வட்டம் என்னும் ராசி சக்கரத்தில் 360 ஆகும். 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 அளவுள்ளது. வட்டத்தைப் பூமி சுற்றிவர நாளுக்குத் தோராயமாக 1 வீதம் 365 நாட்களில் 360 பாகைகளைச் சுற்றி விடுகிறது. பூமியின் நகர்வுக்கு இணையான சூரியனின் நகர்வு ஒரு சூரிய உதயம் நேரம் முதல் மறு சூரிய உதய நேரம் வரை கணக்கிடப்பட்டு அது ஒரு நாள் எனப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சூரியன் தோராயமாக 1 பாகை வீதம் ராசி மண்டலத்தில் நட்சத்திர கூட்டத்தில் மேல் நகரும். அதாவது தோராயமாக 2 மணி நேரத்தில் ஒரு ராசியை சூரியன் கடக்கும். பூமி தன்னைத்தானே சுற்றுவதால் நமக்கு மணி, நிமிடம், வினாடி ஆகிய காலங்கள் கிடைக்கின்றன. அதாவது ஒரு குழந்தை பூமியில் பிறந்த இடத்தையும், நேரத்தையும் வான் வட்ட வெளியில் குறிப்பதே லக்னமாகும்.

நாம் பிறக்கும்பொழுது ஜாதகத்தில் சூரியனை அடிப்படையில் வைத்து லக்கினம் என்பது ஒருவகையில் கற்பனை புள்ளி. ஒருவர் பிறக்கும் போது அவர் பிறந்த இடத்தின் கிழக்கின் அடிவானத்தில் என்ன இராசி நட்சத்திரம் பாகை இருக்கிறது என்பதைக் காட்டும் புள்ளியே லக்னமாகும். 

மூன்றின் சூட்சம விதி

இறைவனை வணங்கிய பின் விபூதியைப் பட்டையடிக்கப் பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ரிக்வேதம், நடுவிரல் யஜூர் வேதம், மோதிர விரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. மூன்று என்பதில் ஒரு சூட்சமம் அடங்கி உள்ளது அவை படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை சீர்ப்படச் செய்யும் நம் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன். திருக்குறளின் கூறப்படும் முப்பாலான அறம், பொருள், இன்பத்தில் அடக்கம். சைவத்தின் முத்திற வழிபாடான குரு, லிங்கம், சங்கமம் தனிச் சிறப்பாகும். காலபுருஷ தத்துவத்தின் படி மூன்று பிரிவாகப் பிரிக்கின்றனர். மேஷ மண்டலம், சிம்ம மண்டலம், தனுசு மண்டலம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கம் பின்பு பார்ப்போம்.

ஜாதகர் தன் வாழ்க்கை என்னும் செயல்பாட்டு விளக்கத்தை 12 கட்டத்தில் முடிந்துவிடும் அதாவது பன்னிரெண்டு பாவத்தை மூன்று முறை சுற்றவேண்டும் என்று ஒரு நியதி. அதற்கு உதாரணம் சனி 12 ராசியை ஒரு சுற்றுக்கு 30 வருடம் என்று மூன்று முறை சுற்றும்பொழுது ஜாதகர் நாம் வாழும் வாழ்க்கை ஆயுள் காலம் 120  வருடத்துக்குள் முடிவடையும். அதே கோட்பாட்டில் காலபுருஷ தத்துவம் அமைந்துள்ளது. 

வாழ்க்கை என்பது தோராயமாக முதல் இரண்டு சுற்றுகளில் முடிந்துவிடும் மூன்றாவது சுற்று உயிருடன் இருப்பது கடவுள் சித்தம். நாம் முதல் இரண்டு சுற்றில் நாம் வாழ்க்கையின் சூட்சமம் நல்லது கெட்டது, வெற்றி தோல்வி அனைத்தும் நடந்தேறிவிடும். இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.  

முதலாவது சுற்று 12 கட்டத்தில்

முதலாவது சுற்றான - ஒன்றிலிருந்து நான்காம் பாவம் ( 1st round):

லக்னபடி ஒன்றிலிருந்து நான்காம் பாவம் வரை இளமைப் பருவம் என்று கூறலாம். முதல் லக்ன பாவம் என்பது 12 பாவத்தையும் தன் கட்டுப்பாட்டில் அடக்கி வைத்திருக்கும். இதில் தான் கரு முட்டை வளர்ச்சி முதல் குழந்தை பிறப்பு வரை முக்கிய பாவம் லக்னம், அழகு, அறிவு, உடலின் எதிர்ப்புச் சக்தி அளவு கணக்கிடல், ஐம்புலனையும் மூளையின் மூலம் செயல்படுதல் (பார்த்தால், பேசுதல், கேட்கும் திறன், சுவைத்தல், உணர்தல்), ஞாபக திறன், கற்பனை, தைரியமாக நடை பழகுதல், குடும்ப அந்தஸ்து, தன் குடும்ப உறுப்பினரைக் கண்டறிதல், அடுத்த அடி வைக்க முயற்சி செய்தல், தாயின் அரவணைப்பு, மூத்த இளைய சகோதரன் மற்றும் முக்கியமான மாமன் நிலையைக் கூறல், கஞ்சத்தனம் (சேர்க்கும் தன்மை ஆரம்ப நிலை), இயல் இசையில் ஆர்வம் அறிதல், வாகனத்தில் ஆர்வம், ஆரம்பக் கல்வி, தரமான உயர்கல்விக்கான அடுத்த கட்டம், மகிழ்ச்சி நிலை, கௌரவம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

முதலாவது சுற்றான - ஐந்திலிருந்து எட்டாம் பாவம் வரை - 1st round:

இந்த கட்டம் சொல்லுவது ஒரு திருப்புமுனை (Turning point) அல்லது இயந்திர வாழ்க்கை (mechanical life) என்றும் சொல்லலாம். ஆறாம் அறிவுக்கான வேலை இந்த பாவத்திலிருந்து ஆரம்பம், சரியா தவறா என்று உணர்தல், உணர்வுப்பூர்வமாகச் சிந்தித்தல், இஷ்ட தெய்வம் தேர்ந்தெடுத்தல், தந்தைவழி பாட்டன், காதலில் வெற்றி தோல்வி, சட்டப்படியான கணவன் மனைவி, களத்திரம் பற்றிய விவரம், சரியான நட்பு, நண்பர்கள் ஆதாயம், அழகு படுத்திக்கொள்ளல், இடம் மற்றம், பாண்டு அடமானம், கடன் வாங்குதல், விளையாடல், மன நோய் முற்றிய நிலை, அலைச்சலில் சோர்வு மற்றும் பிணி, பகைவர்கள், விபத்து, ஆபத்து, குழந்தை, தத்துப் பிள்ளை, நிர்வாகத் திறன், கூட்டுத் தொழிலா அல்லது தொழில் சேவையா (service oriented job),  நாத்திகம் பேசுதல், கேளிக்கை கொண்டாட்டம், சூதாட்டம், சினிமா, உயர் கல்வி, கூட்டாளிகள் பங்கு லாபம், வெற்றி நோக்கிய பார்வை இருக்கும்.

முதலாவது சுற்றான - ஒன்பதிலிருந்து பன்னிரெண்டாம் பாவம் வரை - 1st round:

இந்த பாவம் முதுமை பருவம் என்று கூறலாம். முக்கிய பகுதி பொறுப்புகள் மற்றும் ஆசைகளை முடிவடைய வைக்கும் திருப்தி நிலை என்று கூறலாம். குழந்தைகளின் திருமணம், நாம் சேர்த்து வைத்த கர்மாவின் லாப நஷ்டங்கள், கடவுளை மற்றும் ஞானிகளைத் தேடல், தொழில், லாபம், நம்பிக்கை, குலசாமி வணங்குதல் பக்தி ஆரம்பம், குருபக்தி, அயராது கல்வி கற்றல், வெளியூர் செல்லுதல், களத்திரத்தால் திருப்தி சந்தோஷம், தந்தையைப் பற்றிய உயர்வு நிலை, மூன்றாவது குழந்தை, சித்தப்பா உறவுகள் பற்றிய விவரம், முன்னோர்களின் சொத்து அடைதல், கண்டம், நாடுவிட்டு நாடு செல்லல், நிறைவேறும் காதல், ஊதிய உயர்வு, முன்பு உழைத்ததிற்கு திடீர் வருமானம் அல்லது இழப்பு, சுப மற்றும் அசுப செலவுகள் என்று அடுக்கிக்கொண்ட செல்லலாம். 

இரண்டாவது சுற்று - 12  கட்டத்தில்

இரண்டாவது சுற்றான - ஒன்றிலிருந்து நான்காம் பாவம் - 2nd round:

இந்த பாவத்தில் தரத்தை உயர்த்திக்கொள்ளும் நிலைக்கு ஜாதகர் மாறுவார். தலைமை மற்றும் தலை என்று சொல்லும் அந்தஸ்து கிட்டும் நாள், சுய சிந்தனை முயற்சி, ஆரோக்கியம், கௌரவமான வழக்கை, வேலையில் ஓய்வு, பேரன் பேதி மூலம் சந்தோசம், அழகான வீடு, வாகனம் என்று கடன் இல்லாமல் சொந்தமாக்கிக் கொள்ளுதல், நிலம் மற்றும் வீட்டின் மூலம் லாபம், உடலில்  கண்பார்வை மங்குதல், காது மூக்கு குறைபாடு, பற்கள் வாயில் பிரச்னை, நுரையீரல், இருதயம், சிறுநீரகம் பாதிப்பு, வயதானவர்களுக்கான பிணி, மனைவிக்குக் கண்டம், உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைதல், தான் என்ற எண்ணம், பணத்தை விடக் கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தல், கையிருப்பு பணம் சேர்தல், இளைய சகோதரரின் லாபம், ஷேர் மார்க்கெட் லாபம், அரசியலில் ஆர்வம், ஆன்மீக பயணம் மற்றும் பல இந்த பாவத்தில் அடங்கி இருக்கும்.

இரண்டாவது சுற்றான - ஐந்திலிருந்து எட்டாம் பாவம் வரை - 2nd round:

மனைவியால் லாபம், ஜாதகருக்கு அடுத்த ஆயுளுக்கு பங்கம் விளைவிக்கும் கண்டம், விருந்தோம்பல், பாச உணர்வு, நாடகம், இசைக்கச்சேரி, மிகப்பெரிய இலக்கியப் படைப்புகள், மந்திரம் ஜெபித்தல், தெய்வீக பாசுரம், எதையும் அளவுக்கு அதிகமாக வர்ணனை செய்தல், புண்ணியம் அல்லது பாவம் போன்றவற்றை வேறுபடுத்தி உணர்தல், அன்னதானம், பென்ஷன், இன்சூரன்ஸ் தொகை, பூர்விக சொத்து பெறுதல், உடை தானம், மருந்து தானம், தாயாரின் சொத்து, சமூகம் அரசியல் பற்றிய அறிவு.

இரண்டாவது சுற்றான - ஒன்பதிலிருந்து பன்னிரெண்டாம் பாவம் வரை = 2nd round:

பேரன் பேத்தி திருமணம், தடுமாறும், தூக்கமின்மை, அபரிமிதமான ஆன்மீக ஆர்வம், முக்தியைத் தேடல், யாத்திரைக்காக நாடு விட்டு நாடு செல்லுதல் பாவம், சிலரை நோயால் படுக்க வைத்துவிடும், முறையான செலவு செய்தல், அதிக மருத்துவச் செலவு, வயதானவர்களுக்கான பந்த பாச ஏக்கம் அல்லது தேடல் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். 

முதல் சுற்றுக் கொஞ்சம் கடினம் ஆனால் நம்மால் செய்ய முடியும். இரண்டாம் சுற்று நமக்குக் கொடுத்த பொறுப்பு நிறைவேற்றல், சமூக நலனில் அக்கறை காட்டும் சுற்று. கடவுள் அனுக்கிரகத்தில் மூன்றாம் சுற்றுக்கான வழி இருந்தால் அதைக் கடவுளுக்குப் பிடித்தவற்றை அவரவர் மதத்தில் சொல்லப்பட்ட முறையில் அனைத்து நற்காரியத்தை செய்து நம் ஆத்மாவைக் கடவுளின் பாதம் சேர்க்கவும்.
  
- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

சென்னை. தொலைபேசி : 8939115647
மின் அஞ்சல் : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com