சுடச்சுட

  

  பல்வேறு சிரமங்களைக் கடந்து கர்நாடக எல்லையை அடைந்தது கோதண்டராமர் சிலை

  By DIN  |   Published on : 23rd May 2019 12:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kothandaramar_statue

   

  ஏழு மாதங்களுக்குப் பிறகு லாரியில் கிளம்பிய கோதண்டராமர் சிலை கர்நாடக மாநில எல்லையை நேற்று அடைந்தது.

  கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் பிரமாண்ட கோதண்டராமர் சிலை நிறுவ அந்தப் பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதற்காக 350 டன் அளவிலான பிரம்மாண்ட கோதண்ட ராமர் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கொரகோட்டை என்ற இடத்தில் உருவாக்கப்பட்டு ஒரு ராட்சத லாரியில் கடந்த நவம்பர் மாதம் ஏற்றப்பட்டது.

  அங்கிருந்து பல்வேறு சிரமங்களைக் கடந்து கோதண்டராமர் சிலை கொண்டு வரப்பட்டது. லாரியின் டயர்கள் அடுத்தடுத்து வெடித்தது, சிலையைக் கொண்டு வருவதற்காக தற்காலிக பாலங்கள் அமைத்தல், சாலையோர கடைகளை அகற்றுதல் என்று பல்வேறு சிரமங்களை கடந்து அந்தச் சிலை கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை வந்தடைந்தது. அங்கிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஒசூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்த பிப்ரவரி மாதம் சென்றடைந்தது.

  அங்கு தற்காலிக பாதை அமைக்கும் பணிகளுக்காக சுமார் 3 மாத காலம் அந்தச் சிலை சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. 

  சுமார் எட்டு இடங்களில் தற்காலிக பாதைகள் அமைக்கப்பட்டு கடந்த மே 3-ஆம் தேதி கோதண்டராமர் சிலை சாமல்பள்ளம் என்ற இடத்திலிருந்து பெங்களூரு நோக்கிப் புறப்பட்டது. 

  இந்நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் பாதைகள் சமமாக இல்லாததால் அதை சரி செய்ய சிறிது நாள்கள் லாரியுடன் சிலை நிறுத்தப்பட்டன. 

  தொடர்ந்து லாரி டயர்கள் வெடித்த காரணத்தாலும், மண் பாதையில் லாரி சிக்கி கொண்டதாலும் சிலை செல்வதில் சிரமம் ஏற்பட்டது.  இதற்கிடையே சிலையைக் கொண்டு செல்லக்கூடிய டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும், சிலை ஏற்பட்டாளர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. பின்னர் அதில் சுமூகத் தீர்வு ஏற்பட்டு சிலை கொண்டு செல்லப்பட்டது.

  இதற்கிடையே ஒசூர் அருகே பேரண்டப்பள்ளி என்ற இடத்தில் தென்பெண்ணை ஆற்றைக் கடக்க வேண்டும் என்பதால் அங்கு சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது. இதற்காக அங்கு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. 14 நாள்களுக்கும் மேலாக அந்த இடத்திலேயே இருந்த சிலை புதன்கிழமை பேரண்டப்பள்ளியில் இருந்து புறப்பட்டது.

  பத்தலப்பள்ளி, சீதாராம் மேடு வழியாக சென்ற சிலை ஒசூர் நகரை அடைந்தது. அங்கிருந்து தர்கா, மூக்கண்டப்பள்ளி, சிப்காட், ஜூஜூவாடி வழியாக தமிழக  கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியை புதன்கிழமை அடைந்தது.

  இதன் மூலம் சுமார் 7 மாதங்களாக திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாகச் சென்ற லாரி தற்போது கர்நாடக எல்லையை அடைந்துள்ளது.

  அத்திப்பள்ளியில் 2 நாள்கள் சிலையை நிறுத்தி வைத்து பின்னர் பெங்களூருவுக்கு கொண்டுசெல்ல உள்ளதாக சிலை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

  கர்நாடக எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோதண்ட ராமர் சிலையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai