கோடைக் காலத்திலும் கூலாக இருக்கனுமா ஜெண்டில்மேன்? சனிக் கிழமைகளில் நல்லெண்ணெய் குளியல் செய்யுங்க!

தமிழ் நாட்டில் கோடை வெயில் கொளுத்துகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கோடையும் அதிரடியாகத் தொடங்கி
கோடைக் காலத்திலும் கூலாக இருக்கனுமா ஜெண்டில்மேன்? சனிக் கிழமைகளில் நல்லெண்ணெய் குளியல் செய்யுங்க!


தமிழ் நாட்டில் கோடை வெயில் கொளுத்துகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கோடையும் அதிரடியாகத் தொடங்கி வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. அதிலும் அக்னி நட்சத்திரம் வேறு தன் பங்கிற்கு சேர்ந்துகொண்டு கை வரிசையைக் காட்டுகிறது. போதிய மழை இல்லாமல், வெயில் தலைகாட்ட முடியாத அளவுக்குக் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த விகாரி வருஷத்தின் ராஜாவாக சனைச்சர பகவானும் மந்திரியாக சூரியனும் பதவியேற்ற நிலையில் வெயிலின் நிலை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். அதிக வெயில் மற்றும் உடல் சூட்டின் காரணமாகத் தோல் அரிப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வாரத்தில் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறந்தது என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல் என்றாலே, அது தீபாவளித் திருநாளன்று மட்டும் என்று மக்களின் மனதில் பதிந்துவிட்டது. தீபாவளி அன்று தலைக்கு மட்டும் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டு அதை எண்ணெய் குளியல் எனச் சொல்லுவார்கள், ஆனால் எண்ணெய் குளியல் என்பது உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் குளிப்பதாகவும். வாரத்துக்கு ரெண்டு முறை எண்ணெய் குளியல் செய்தல் பெரும்பாலான நோய்கள் அண்டாது, என்று சொன்னால் இன்றைய தலைமுறைகள் கண்டுகொள்வதில்லை, தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதே பெரிது என்று சலித்துக்கொள்வார்கள்.

அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் சனி நீராடு எனக் குறிப்பிட்டிருக்கிறார். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து, வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணெய் பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள்.

நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாகச் சனிக்கிழமை அன்று கண்டிப்பாகத் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்குக் குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர்.

ஒரு சிலர் அசனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். அசனி எனும் சொல்லுக்கு சாம்பிராணி இலை என்று பொருள் கூறுகின்றனர். அந்த சாம்பிராணி இலையை நீரில் ஊரவைத்து நீராடுவது பலவித உடல் மற்றும் சரும கோளாறுகளுக்கு நல்லது என்றும் எனவே சாம்பிராணி இலை குளியலைத்தான் அவ்வாறு கூறப்படுகின்றது என்கின்றனர். இன்னும் ஒருசாரர் ஜனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். தினமும் புதிதாக உற்பத்தியாகும் ஊற்றுநீரைத்தான் ஜனி நீர் என்றும் ஊற்று நீரில் குளிப்பது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்கின்றனர். சரி, மருத்துவம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போமே.

நாளுக்கு இரண்டு

வாரத்துக்கு இரண்டு

மாசத்துக்கு இரண்டு

வருடத்திற்கு இரண்டு

என்கிறது ஆயுர்வேதம்.

நாளுக்கு இரண்டு என்பது ஒரு நாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும் என்று பொருள். வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதாகும்.

மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும்.

வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்குச் சாப்பிட்டு வயிற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.

என்றைக்குக் குளிக்க வேண்டும்?

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

"கேளு அருக்கன் பலன் தான் அழகை மாற்றும்

கெடியான திங்கள் பலன்தான் பொருளுண்டாகும்

பாலு செவ்வாய் பலன் தான் உயிரை மாய்க்கும்

பாங்கான புதன் பலன் தான் மதியுண்டாகும்

தாளு வியாழன் பலன் தான் கருத்தைப் போக்கும்

தப்பாது வெள்ளி பலன் கடனே செய்யும்

நாளு சனியின் பலன்தான் எண்ணெய் மூழ்க

நட பொருளும் சகதனமும் வரும் சாதிப்பாயே."

- தேரையர் -

ஞாயிற்றுக்கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற்பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்களும், புதன், சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுக வேண்டும், காய்ச்சிய எண்ணெய் நல்ல பலன் அளிக்கும், அத்துடன் குளிக்க, வெந்நீரையே பயன்படுத்த வேண்டும். தேய்த்த எண்ணெய்யைப் போக்க சோப்பு ஷாம்பூ போட்டு உடலைச் சுத்தப்படுத்தக் கூடாது, சுத்தமான சிகைக்காய் தேய்த்துக் குளித்துத் தான் எண்ணெய்யைப் போக்க வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் விஞ்ஞான ரீதியாக ஏற்படும் நன்மைகள் என்ன?

நமது உடலில் சூடு அதிகரிப்பதால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும், வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவை வெயில் காலத்தில் ஏற்படுவது இயல்பு. எனவே, வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் இப்படிப்பட்ட பிரச்னைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

உடலில் எண்ணெய்யை நன்றாக அழுத்தித் தேய்ப்பதன் மூலம் தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான அடைப்புகளையும் எண்ணெய்க் குளியல் நீக்கிவிடுகிறது. குறிப்பாக உடலில் பல உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி ஏற்படுகிறது.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் தோலில் பளபளப்புக் கூடுகிறது. வறண்ட தோல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம். மேலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடைகிறது. உடலில் சூடு குறைவதால் மனம் புத்துணர்ச்சி அடைகிறது. எனவே, எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது உங்களின் உடலையும் உள்ளதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

கடந்த சில வருடங்களில் பிறந்த குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது என்பது வழக்கொழிந்துவிட்டது. ஆங்கில மருத்துவமும் காஸ்மெட்டிக் கம்பனிகளின் வியாபார யுக்தியும் சேர்ந்து குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவதை முற்றிலும் தடுத்து நிறுத்திவிட்டனர் என்றே கூறவேண்டும். ஆனால் அதே ஆங்கில மருத்துவம் எள்ளிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸீசேம் லோஷன் எனும் தயாரிப்பைத் தோல் நோய்களுக்கும் உடல் சூட்டிற்கும் பரிந்துரைக்கிறது. ஒரு லிட்டர் நல்லெண்ணெய்யின் தற்போதைய விலை சுமாராக ரூ.350-க்கு கிடைக்கும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ஸீசேம் லோஷனின் (பாடி லோஷன்) விலையோ 250 மிலி சுமாராக ரூ.2,000 ஆகிறது. இதிலிருந்து வியாபார யுக்தியை நாம் புரிந்துகொள்ள இயலும்.

எண்ணெய் குளியலுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு

எண்ணெய் குளியலில் என்னய்யா பெரிய ஜோதிடம் இருக்கிறது எனக் கேட்பவர்கள் முதலில் "சனி நீராடு" என்பதின் விளக்கத்தினை பார்ப்போம். சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணெய் குளியலைத் தான் குறிக்கிறது.

அது ஏன் நல்லெண்ணை? அனைத்து எண்ணெய்களுக்கும் சனி பகவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணெய்தான் சனிக்கு உகந்த எள்ளிலிருந்து எடுக்கப்படுகிறது. உடற்கட்டு மற்றும் எலும்பிற்குக் காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுக்கோப்பாக இருக்க நல்லெண்ணெய் குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

சனி பகவானும் புத பகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணெய் மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்துக் குளிப்பது சிறந்த பயனளிக்கும்.

மருத்துவ ஜோதிட ரீதியாக நல்லெண்ணெய் குளியலால் ஏற்படும் நன்மைகள்

1. சனிக்கிழமைகளில் எள் மற்றும் நல்லெண்ணை ஆகியவற்றை உபயோகப்படுத்துவதால் சனி தோஷம் விலகும்.

2. எலும்பின் காரகர் சனைஸ்வர பகவானாவார். எலும்பில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து எனும் கால்ஷியத்திற்கும் காரகர் சனைஸ்வர பகவானாவார். எள்ளின் காரகரும் சனைஸ்வர பகவானாவர். எள்ளில் 95% கால்ஷியம் நிறைந்திருப்பதாக அறிவியல் கூறுகிறது. எனவே சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்களான ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோபோராஸிஸ் போன்ற நோய்கள் நீங்கும்.

3. தோல் நோய்களுக்கு சனீஸ்வர பகவானும் காரகர் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. சனைஸ்வர பகவானுக்கு சரும நோய்க்குக் காரக கிரகங்களான புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறந்த பயனளிக்கும். புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.

4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும். மேலும் நீர்ச் சுருக்கு, யூரினரி இன்ஃபெக்‌ஷன் எனப்படும் சிறுநீரக அழற்சி போன்ற சிறுநீரக நோய்களும் நீங்குவதோடு ஆண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கி ஆண்மை பெருகும். உடல் சூட்டினால் கருத்தரிக்காமல் இருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு கோளாறுகள் நீங்கிக் கருத்தரிக்கும் நிலை ஏற்படும்.

5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும் மற்றும் கண் பார்வை பலம் பெறும்.

6. வெயிலினால் தோலில் ஏற்படும் வறட்சியைப் போக்கி மினுமினுப்பு ஏற்படும்.

7. ஆயுள் காரகன் சனியின் ஆசி பெறுவதால் ஆயுள் கூடும். எமபயம் விலகும்

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள். எது எப்படியோ! சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு மிளகு ரசம் சாப்பிட்டு ஓய்வு எடுப்பது கூட சுகம்தானே. 

பிறகென்ன? குளித்துத்தான் பார்ப்போமே! என்ன நான் சொல்றது?

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com