பூர்வ புண்ணிய யோகம் பெறுபவர்கள் யார் யார்!!

இந்த காட்சியைச் சற்றே உங்களின் கண்முன்னே கொண்டுவாருங்களேன். இரண்டு நபர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாதவர்..
பூர்வ புண்ணிய யோகம் பெறுபவர்கள் யார் யார்!!

இந்த காட்சியைச் சற்றே உங்களின் கண்முன்னே கொண்டு வாருங்களேன். இரண்டு நபர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாதவர் என்றே கொள்வோம். இருவருக்கும் ஒரே  கல்வித்தகுதி. அவர்கள் இருவரின் குடும்பச் சூழல் அனைத்தும் ஒன்றே. இருவருக்கும் ஒரே மாதிரியான திறமை. ஒரு சில வருடங்கள் உருண்டோடுகிறது. அதில் ஒருவர் பொறாமைப்படும் அளவில் வளர்ச்சி, அவரின் வாழ்வில். அதெப்படி சாத்தியம் என எண்ணும் வகையில் உள்ளது அவரின் வளர்ச்சி. 

இதோ, அந்த இன்னொருவர், முற்றிலும் மாறாக, இருவரும் ஒரே கல்வி, ஒரே குடும்பச் சூழல், ஒரே மாதிரியான திறன், இருப்பினும் இவரால் இவருடைய வாழ்வில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லாமல், கிடைத்த வேலையில், கிடைத்த சம்பளத்தில் ஒரு வித விரக்தியான மனப்போக்கில் வாழ்க்கையை நகர்த்துகிறார். ஏன் இந்த பெரிய மாற்றம் இந்த இருவருள் என்றால்; இந்திய வேதகால ஜோதிட சாஸ்திரத்தின் படி, ( AS PER INDIAN VEDIC ASTROLOGY) கடந்த பிறவியில் பெற்ற பூர்வ புண்ணிய யோகம் என்பது மட்டுமே அதற்கு உண்மையான காரணம். 

ஒருவரின் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படக் கூடாத பாவகங்களில் முதன்மை வகிப்பது உடல் உயிராகிய லக்கினம், பூர்வ புண்ணியம் என்று சொல்லப்படும் 5-ம் பாவகம், பாக்கிய ஸ்தானம் என்று வர்ணிக்கப்படும் 9ம் பாவகம், மேற்கண்ட மூன்று பாவகங்கள் சுய ஜாதகத்தில் பாதிக்கப்படும் பொழுது, ஜாதகரின் கருமையம், கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி, ஜாதகரின் உடல் நலம், கல்வி அறிவு, தொழில் மற்றும் வேலை வாய்ப்பு, திருமணத் தடை மற்றும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்கள், குழந்தை பாக்கியம் இன்மை, பொருளாதார பாதிப்புகள், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் இல்லாத நிலை, தீய பழக்க வழக்கங்களுக்கு உட்பட்டு தனது வாழ்க்கையைத் தானே சீரழித்துக் கொள்ளும் தன்மை, என்ற அமைப்பில் கடுமையான தீய பலன்களை வழங்க ஆரம்பித்து விடும்.

ஒருவர், தனது வாழ்வில், முன்னேற விரும்பினால், மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் இருந்து தப்பிக்கும் போதும்; அவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய யோகம் வலிமைப் பெற்றிருப்பின், அதனை எதிர்கொள்ளும் சக்தியினை அவர் பெறுவார். ஒருவர் தமது அடுத்த வேளை உணவை எங்கிருந்து பெறுவோம் என்பதனை ஆதாரமில்லாமல் காத்துக் கிடப்பார். ஆனால் மறுநாளே அவருக்கு லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் அவரிடம் வந்து சூழும் நிலை ஏற்படும். ஆம், நண்பர்களே அது தான் அவரின் ஜாதகத்தில் காணும் பூர்வ புண்ணிய யோகம் ஆகும். 

பூர்வ புண்ணிய யோகம் ஒருவருக்கு இருப்பதை எவ்வாறு அறியமுடியும்?

சிறிது காலத்திற்கு முன்பு வரை, குடும்பங்களில் ஒரு பழக்கம் இருந்து வந்துள்ளது, அதாவது, குழந்தை பிறந்த பிறகு அவர் தம் குடும்ப ஜோதிடரிடம் சென்று தமது குழந்தைக்கு ஜாதகம் எழுதச் சொல்லுவார்கள். எப்படிப்பட்ட கால நேரத்தில் பிறந்திருந்தாலும் அந்த குழந்தையின் விதி நன்றாக இருக்க வேண்டும் என எண்ணியே அதனை ஒரு மங்களகரமான நாளில் தான் அந்த ஜோதிடர் அந்த குழந்தையின் ஜாதகத்தை எழுதுவார். அந்த கால ஜோதிடர்கள் தமது தொழிலில் நியாயத்தையும் நேர்மையும் பற்றையும் கொண்டு அதனைச் சரிவர கடைப்பிடித்து வந்ததாலேயே ஜாதகத்தை எழுத சில நாட்களோ ஏன் சில வாரங்களோ கூட எடுத்துக்கொள்வார். ஆனால் தற்போது அப்படி இல்லை குழந்தை பிறந்த உடனே ஜோதிடரிடம் எடுத்துச் சென்று உடனடியாக ஜாதகம் எழுத சொல்லி அவசரப்படுத்துகிறார்கள். அது சில போது தவறாவதற்கு வழி வகுக்கும். 

ஜோதிடர்கள் ஒரு குழந்தைக்கு முதன்முதலில் ஜாதகம் கணித்து எழுதுகிற போது,‘ஜனனீ ஜென்ம சௌபாக்யானாம் வர்த்தனி குல சம்பிரதாம் பதவீ பூர்வ புண்ணியானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா.!' அதாவது, தாய் மற்றும் குழந்தை நலனிற்காகவும், குடும்பத்தின் சந்தோஷ வளர்ச்சிக்காகவும், பழங்கால பழக்க வழக்கங்களை நடைமுறை படுத்துவதற்காகவும், பூர்வ பண்ணியபடி வாழக்கையை நடத்திவர, இந்த பிறப்பு குறிப்பு எழுதப்பட்டுள்ளது என்பது அதன் அர்த்தமாகும். 

பதவி என்பது ஒரு குழந்தை ஆணோ, பெண்ணோ அதன் வளர்ச்சி ஒவ்வொரு நிலையாக அடுத்தடுத்த கட்டத்தைத் தாண்டி செல்வதையே குறிப்பதாகும். அதாவது ஒரு குழந்தை படித்து முடித்து வேலைக்குச் சென்று திருமணமாகி அப்பா / அம்மாவாகி, தாத்தா / பாட்டி ஆகி இப்படி ஒவ்வொரு நிலையிலும் பதவி உயர்வு பெறுவதையே அது குறிக்கும். 

ஒருவனுக்கு நல்ல மனைவி, நல்ல மகன், நல்ல மகள், நல்ல மருமகன், நல்ல மருமகள், நல்ல சொத்து, நல்ல சுகம் கிடைத்தால் அவர்களைப் பார்த்து அடுத்தவர் கூறுவது, "அவர் புண்ணியம் செய்தவர் பா" என்பதுதான். 

எவர் ஒருவர் முன் ஜென்மத்தில் புண்ணியங்களைச் செய்தாரோ அவர்களின் இந்த பிறவியின் ஜாதகத்தில் நிச்சயமாக 5-ம் இடம் மிகப் பிரமாதமாக அமைந்து இருக்கும். லக்கினத்திற்கு, 5-ம் இடத்து அதிபதி, 6,8,12-ல் அமரக் கூடாது; நீச்சம் பெறக்கூடாது; ராகு, கேது உடன் சேரக் கூடாது. அந்த 5-க்குரிய கிரகம், 2-க்கு, 9-க்கு, 4-க்கு, 11-க்கு உரிய கிரகத்துடன் இணைந்து அமைந்திருந்தால், ஏ.டி.எம். மிஷனே அவன் வீட்டில் இருப்பது போலதான். பணத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்த ஜாதகரிடம், எப்போதும் பணம் புழக்கம் தான் Any Time Money தான். 

5 ஆம் இடம் அற்புதங்களைச் செய்யும் இடம். 5-ம் இடத்தில் யோக கிரகங்கள் அதாவது 5-க்குரிய கிரகம், 2-க்குரிய கிரகம், 9-க்குரிய கிரகம், 10-க்குரிய கிரகம், 11-க்குரிய கிரகம் இப்படி ஏதேனும் ஒரு அமைப்பு இருந்தால், வாழ்க்கையில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், இந்த 5-ம் இடத்தின் அற்புத அமைப்பு அந்த நபரை மீண்டும் உச்சநிலைக்குத் தூக்கி வந்துவிடும். பெருமைக்குரிய வாழ்க்கை தரும். ஏதேனும் காரணத்தால் பணமும், புகழும் சட,சடவென சரிந்தாலும் மீண்டும் அந்த ஜாதகரை மேலே எழுப்பி சிகரத்தில் உட்கார வைக்கும் அற்புதமிக்க இடமே 5-ம் இடமும், 5-ம் இடத்தின் கிரகமும் செய்கிற சிறப்பு ஆகும்.

பூர்வ புண்ணிய பாதிப்பு

மாயை எனும் உலக வாழ்க்கையிலிருந்தும், இறை நிலையுடன் உயிர் கலப்பு பெறவும் முன்னோர்கள் காலம் காலமாக, முறையாகக் குல தேவதை வழிபாடு என்ற முறையினை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர், குல தேவதை வழிபாடு என்பது ஜாதகரின் அறிவில் தெளிவையும், சிறப்பான சிந்தனை ஆற்றலையும், தனது துன்பங்களிலிருந்து விடுபட்டு யோக வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கும், வழிவகுக்கும் என்றால் அது மிகையில்லை, நமது குல தெய்வ வழிபாடே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கையைச் சிறப்பாக  வாழும் வாழ்க்கை நெறியினையும் நமக்கு உணர்த்தும் என்றால் அது மிகையில்லை, எந்த ஒரு சூழ்நிலையிலிருந்தும் நம்மைக் காப்பது குல தெய்வ வழிபாடே, சரியான நேரத்தில் நமக்கும் தனது அருள் கரங்களால் காத்து அருளும் தன்மை மற்றும் சக்தி, நமது குல தேவதைக்கே / தெய்வத்துக்கே உண்டு.

எனவே தனது குல தேவதையை நாடிச் சென்று தன்னால் இயன்ற அளவு அன்னதானம் பிறருக்குச் செய்து குல தெய்வத்தை முறையாக, அவரவர் முறைப்படி குடும்பத்துடன் சென்று சிறப்பாக வழிபாடு செய்து வருவது ஐந்தாம் பாவக வழியிலிருந்து வரும் இன்னல்களை நீக்கி, பூர்வீகத்தில் யோக வாழ்வு, குழந்தை பாக்கியம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய் தொழில் முன்னேற்றம், கல்வியில் வெற்றி, மன நிம்மதி, சிறந்த அறிவாற்றல், கலை ஆர்வம், கற்பனைத் திறன் ஆகியவற்றைத் தங்கு தடையின்றி பெற்றுத் தரும் என்றால் அது மிகையில்லை.

நிறையப் புண்ணிய காரியங்களைச் செய்வது, மிகவும் நேர்மையாக நடந்து கொள்வது, இறைவனின் மீது உண்மையான நம்பிக்கையுடன் நல்ல செயல்களை மட்டும் செய்வது போன்றவை, “பூர்வ புண்ணிய யோகம்” அமையக் காரணமாக இருக்கிறது. ஆகவே நல்லதையே செய்வோம். எல்லா பிறவிகளிலும் அமோக வாழ்க்கை பெறுவோம்.

சாயியை பணிவோம் அனைத்து நன்மைகளையும் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com