கைசிக துவாதசி மாடவீதியில் வலம் வந்த உக்கிர சீனிவாசமூர்த்தி

கைசிக துவாதசியையொட்டி, சனிக்கிழமை சூரிய உதயத்துக்கு முன் உக்கிரசீனிவாசமூர்த்தி மாட வீதியில் வலம் வந்தார்.
கைசிக துவாதசி மாடவீதியில் வலம் வந்த உக்கிர சீனிவாசமூர்த்தி

கைசிக துவாதசியையொட்டி, சனிக்கிழமை சூரிய உதயத்துக்கு முன் உக்கிரசீனிவாசமூர்த்தி மாட வீதியில் வலம் வந்தார்.
 திருமலையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் சுக்லபட்ச துவாதசி கைசிக துவாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த துவாதசியின் போது திருமலை ஏழுமலையான் கோயில் கருவறையில் உள்ள பஞ்சமூர்த்திகளில் ஒருவராக உள்ள உக்கிரசீனிவாசமூர்த்தி சூரிய உதயத்துக்கு, முன் மாடவீதியில் வலம் வருவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை கைசிக துவாதசியையொட்டி, உக்கிரசீனிவாசமூர்த்தி சூரிய உதயத்துக்கு முன் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை மாடவீதியில் வலம் வந்தார். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 சூரிய உதயத்துக்குப் பின் அவர் கோயிலுக்குவெளியில் இருந்தால் தீ விபத்து ஏற்படும் என்பது ஐதீகம். அதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கைசிக துவாதசி அன்று அதிகாலை அவர் மாடவீதியில் எழுந்தருளுகிறார்.
 மேலும் ஆனி மாதம் ஆழ்ந்த நித்திரைக்குச் செல்லும் மகாவிஷ்ணு ஐப்பசி மாதம் கைசிக துவாதசி அன்று துயில் எழுவதாக புராணங்கள் கூறுகின்றன.
 
 
 
 உண்டியல் காணிக்கை ரூ. 2.82 கோடி
 திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 2.82 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
 அதன்படி, வெள்ளிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு, ரூ. 2.82 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 
 ரூ. 13 லட்சம் நன்கொடை
 திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ. 10 லட்சம், கோ சம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ. 2 லட்சம், கல்வி தான அறக்கட்டளைக்கு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 13 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 
 
 
 64,670 பக்தர்கள் தரிசனம்
 ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 64,670 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 27,432 பேர் முடி காணிக்கை செலுத்தினர். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 24 அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரினத்தில் 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்தனர்.
 ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
 வெள்ளிக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 9,674 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 6,107 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 18,286 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,353 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,967 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com