கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரருக்கு அன்னாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீசுவரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீசுவரருக்கு அன்னாபிஷேகம்

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீசுவரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
 கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீசுவரர் கோயில், 1,000 ஆண்டுகளுக்கு முன், ராஜராஜசோழன் மகன் ராஜேந்திர சோழனால், போர் வெற்றியின் அடையாளமாகக் கட்டப்பட்டது. இக்கோயில் உலகப் பிரசித்திபெற்றது. புராதனச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்டதாகும். ஒவ்வொரு ஆண்டும், ஐப்பசி பௌர்ணமி தினத்தன்று, சிவலிங்கத்துக்கு 100 மூட்டை அரிசியால் சாதம் சமைத்து அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
 லிங்கத்தின் மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் ஆண்டுதோறும் அன்னாபிஷேகத்தினை நடத்தி வருகின்றனர்.
 நிகழாண்டில், அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு, 100 மூட்டை அரிசியால் சமைத்த சாதத்தில் திங்கள்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பிரகதீசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பலவிதமான பலகாரங்களால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்தனர். தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு அபிஷேகம் செய்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், மீதமுள்ள சாதம் அருகில் உள்ள ஆறு, ஏரி, குளங்களில் மீன்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக அளிக்கப்பட்டது.
 விழாவில், காஞ்சி சங்கராச்சாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் த. ரத்னா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com