தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு செவ்வாய்க்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது
 தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் ஐப்பசி மாத பெளர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு செவ்வாய்க்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
 ஆண்டுதோறும் ஐப்பசி மாத பெளர்ணமியன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடைபெறும்.
 இந்த விழா தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலிலும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை அன்னாபிஷேகம் நடைபெற்றது.
 இதற்காக பக்தர்கள் 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறிகள், பழங்களை அளித்தனர். மாலையில் வடிக்கப்பட்ட சோற்றைக் கொண்டு 13 அடி உயரமுடைய பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
 மேலும், பெருவுடையாருக்கு சோறு, வெண்டைக்காய், புடலங்காய், கேரட், கத்திரிக்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, செளசெள, உருளைக்கிழங்கு, பீட்ருட், அவரைக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி உள்ளிட்ட பழங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன.
 இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து, இரவில் அலங்காரம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
 இதேபோல, தஞ்சாவூர் மேல வீதி கொங்கனேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீசுவரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
 கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில் 8 அடி உயர ஐராவதீசுவரருக்கு, 108 கிலோ அரிசியைக் கொண்டு சோறு வடித்து செவ்வாய்க்கிழமை மாலை அபிஷேகம் செய்யப்பட்டது.
 பின்னர், சோறு, காய்கறிகள் மூலம் ஐராவதீசுவரருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com