நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்...

சிவன் மலை என்றதும் இங்கே சிவன் இருக்கின்றார் என்று நினைத்தால் அது சரி அல்ல. இங்கே சிவனாரின் திருமகன் முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார்.
நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்...

சிவன் மலை என்றதும் இங்கே சிவன் இருக்கின்றார் என்று நினைத்தால் அது சரி அல்ல. இங்கே சிவனாரின் திருமகன் முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். இந்தக்கோயில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இக்கோவில் உள்ளது

 சிவன் மலை என்பதால் இந்த மலையில் இருப்பது சிவன் கோவில் அல்ல மாறாக இங்கு முருகன் கோவில் இருப்பது சிறப்பு.

 சிவபெருமான் மேரு மலையை வில்லாக வளைத்து அசுரர்களை அழிக்க முயன்றபோது அதிலிருந்து விழுந்த சிறுதண்டே சிவன் மலை எனப்படுகிறது.

 ஆஞ்சநேயர் இந்த கோவில் வந்து முருககடவுளை வணங்கி சென்றது மிகவும் சிறப்பானது. இந்த ஸ்தலம் தீராத நோய்களை தீர்க்கும் ஸ்தலமாக விளங்குகிறது.

 கந்த சஷ்டி கவசம் பாடப்பட்ட சென்னிமலை முருகன் கோவிலும், சிவன்மலை முருகன் கோவிலும் சில மைல் தூரங்களில் அருகே அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.

 இது மட்டுமல்லாமல் வட்டமலை முருகன், கொங்கண சித்தர் வழிபட்ட ஊதியூர் முருகன் கோவில்களும் இக்கோவிலில் இருந்து சில மைல் தொலைவிலேயே அமைந்துள்ளன.

 சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் இங்கு தவம் செய்துள்ளார். இவர் இங்குள்ள முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு இங்குள்ள சுரங்கப்பாதை வழியாக பழனி சென்றார் என கூறப்படுகிறது.

 முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார்.

 சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும் என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.

 சிவன்மலை கிராமத்தில் முருகன் கோயில் இருப்பதை கேள்விப்பட்ட காங்கேய நாட்டு அரசர், காடையூர் காங்கேய மன்றாடியார், காங்கேயம் பல்லவநாயர் போன்ற தனவந்தர்கள் சிவன்மலை முருகனின் பக்தர்களாக இருந்ததால் முருகனுக்காக திருக்கோயிலுக்கு பல நன்கொடைகளை கொடுத்து திருப்பணிகளை நடத்தினார்கள்.

 இங்குள்ள ஜீரஹரேசுவரர் சன்னதியில் மிளகுரசம் வைத்துப் பூஜித்துக் கொண்டால் காய்ச்சல் நீங்கும் என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை.

 வேறெந்த முருகன் கோயில்களிலும் இல்லாத வகையில் பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு இங்கு வேட்டு வைத்து வழிபடுகின்றனர். இதற்கு ‘பொட்லி’ என்று பெயர். இதற்கான இடம் மலை மீது உள்ளது.

 எல்லாவற்றையும் விட சிறப்பானது இங்குள்ள முருகன் தன் பக்தர்களின் கனவில் சென்று ஏதாவது ஒரு பொருளை உணர்த்தும் நிகழ்வாக சொல்லி விட்டு மறைந்துவிடுவாராம் முருகன்.

 முருகன் வந்து கனவில் வந்து உணர்த்திய பொருளை குறித்து நாம் கோவில் அலுவலகத்தில் சொல்லியதும், அவர்கள் கோவிலில் முருகன் சன்னதியில் பூ கட்டி போட்டு பார்ப்பார்களாம். நமக்கு சாதகமாக உத்தரவு வந்தால்தான் நாம் சொன்ன பொருளை கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்வர். இப்படி பூஜை செய்வதன் மூலம் அந்த பொருளால் ஏற்படும் ஆபத்துக்களையோ அல்லது அந்த பொருளுக்கு ஏற்படும் ஆபத்துக்களையோ பெருமளவில் குறைத்து முருகன் காத்தருள்வார் என்பது நம்பிக்கை. அடுத்த பொருளை அடுத்த பக்தர் வந்து சொல்லும் வரை ஏற்கனவே உள்ள பொருளே பூஜைக்கு வைக்கப்படுகிறது. பால், பச்சரிசி உள்ளிட்ட பல பொருட்கள் இக்கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 சுனாமி வந்தபோது கடல் நீரும், ஈரோடில் மஞ்சள் விலை ஏறியபோது மஞ்சளும் வைத்து பூஜை செய்யப்பட்டது. இதேபோன்று இந்தியா, சீனாவிடையே போர் வந்தபோதும் துப்பாக்கி வைத்து பூஜை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 அழகெல்லாம் முருகனே.. அருளெல்லாம் முருகனே.. என முகம் காட்ட இருக்கும் ஆறுமுகன் மீது நம்பிக்கை வைத்து  தினமும் நெஞ்சுருகி தொழுது எல்லா நலமும் பெறுவோம். 
 
                                                                                                                               - ராகேஷ் TUT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com