தசா - புத்திக்கே செக் வைப்பவர்கள்! 

ஒரு ஜாதகத்தில் தசா நாதன் நல்ல அமைப்பில் இருக்கும். ஆனால், அந்த வருடம் முழுக்க அதற்கேற்ப நல்லபலனை தரமுடியாது.
தசா - புத்திக்கே செக் வைப்பவர்கள்! 

ஒரு ஜாதகத்தில் தசா நாதன் நல்ல அமைப்பில் இருக்கும். ஆனால், அந்த வருடம் முழுக்க அதற்கேற்ப நல்லபலனை தரமுடியாது. ஏன் என்று ஆராயும் பொழுது ஒவ்வொரு  தசாநாதனுக்கு ஏற்ப நான்கு கிரகங்கள் உள்ளார்ந்து சுப / அசுப பலன்களைத் தருகிறது. அந்த கிரகங்கள் கொண்ட உறவானவன் வேதகனாக வருவானா, போதகனாக  வருவானா, பாசகனாக வருவானா அல்லது காரகனான வருவானா என்று பார்க்க வேண்டும். ஆனால் நிறைய ஜோதிடர்கள் இவற்றினை பார்ப்பதில்லை. 

ஜனன ஜாதகத்தில் ஒவ்வொரு கிரகமும் தசா காலத்தில் எந்த விகிதாசார அளவு வேலை செய்யும் என்பதைக் கண்காணிக்கும் வேலையை இந்த வேதக, போதக, பாசக  காரர்கள் தங்களுக்குள் ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டு அந்தந்த காலகட்டத்தில் செயல்படுகிறது. மாய கிரகங்களான ராகு கேது மட்டும் இந்த உறவு இல்லை என்று ஒரு  சில புத்தகங்கள் கூறப்படுகிறது. ஜாதகத்தில் ஒரு கிரகம் மட்டும் தனித்துச் செயல்படாது என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் ஒரு தசநாதன் தனியாகச் செயல்படமாட்டான் அப்படிச் செயல்பட்டால் அந்த தசா நாதன் மந்தனாகிவிடும். வீட்டில் சொந்தபந்தங்கள் இல்லையென்றால் எப்படி இருக்குமோ அதுபோல் இருக்கும். இந்த 4  தன்மையும் இருந்தால் தான் தசா புத்திகள் சுறுசுறுப்பாக இயங்கி பலனைக் கொடுக்கும் அல்லது அதிவேகத்தில் தடுக்கும்.

ஒவ்வொருவருக்கும் திசைபுக்தி காலங்களில் போதகன், வேதகன், பாசகன், வேதகன் என்னும் நால்வரில் ஒரு திசையில் போதகன் என்பவன் தன் பலன்யாவையும் கொடு  என்பான். ஆனால் வேதகனோ பலனைக் கொடுக்காதே என்று பிடுங்கி விடுவான், பாசகன் என்பவன் கொடுக்கும் பலனுடன் இன்னும் ரெட்டிப்பாக்கிகொடு என்பானாம்  மற்றும் காரகன் என்பவன் அவனவன் செய்யும் கர்ம வினைகளைப் பொறுத்தே பலன்கள் பிடிப்புபோக மீதி தருவான். யார் யாருப்பா அந்த 4 பேர் கொஞ்சம் விளக்கம்  கேட்கின்றீர்களா! சொல்லுகிறேன். 

கூறு பலனைக் கொடுஎன்போன் போதகனாம் 
வேறுபண்ணித் தட்டுவிப்போன் வேதக்கனாம் - தேறுபலன் 
கூட்டுவிப்பான் பாசகனாம் கோல மகாதிசைக்கே 
ஈட்டுப்பொருள் காரகன்ஈ வான். 

 -  சந்திர காவியம் 

நல்ல பலனைக் கொடுப்பவன் போதகன். ஒரு கிரகம் அளிக்கவேண்டிய பலன்களைச் சீக்கிரம் அளிப்பாயாக என்று கட்டளை இடப்படும் கிரகம் போதகன். இவர் தனது தசா  புத்திகளில் தனது பலனைக் கொடுத்துவிடும்.  

வேதகன் என்றால் ஒரு பலனின் தன்மையை மாறுபடச் செய்யும். அதாவது ஒருவருக்கு அளிக்கவேண்டிய பலன்களை சரிவர அளிக்கவிடாமல் தடங்கல்களையும்  தாமதத்தையும் ஏற்படுத்தும் கிரகம் வேதகன்.

பாசகன் என்பவன் பாவத்தின் பலன் கிடைக்க உதவி புரியும் நல்லவன். ஒரு கிரகம் செய்யவேண்டிய பலனை மிகுதியாகவோ அல்லது ரெட்டிப்பாகவோ வழங்குமாறு  உந்துதல் அடையச் செய்யும் கிரகம் பாசகன்.

காரகன் என்பவன் சம்பாதித்த கர்மா மற்றும் பொருளை சரியான காலகட்டத்தில் கிடைக்க உதவி செய்யும். திசாநாதனுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்து அவனை  நன்முறையில் செயல்பட வைக்கின்ற கிரகம் காரகன். இது ஒரு சமமான நிலை ஆகும்.

இந்த நான்கில் வேதகன் பலம் பெற கூடாது. இவர் பலம் குன்றி இருந்தால் நன்மைதான். வேதகன் மட்டும் பலம் பெற்று மற்ற மூவரும் பலம் குன்றினால் அந்த திசை  சரிவர செயல்படாது. யோகா திசையாக இருந்தால் மேன்மைகள் குறைந்து பாவ திசையாக இருந்தால் தீமைகள் கட்டுக்குள் அடங்கிவிடும். இப்படி நான்கு நிலைகளில் ஒரு  தசையில் பலன்கள் நடக்கத் துவங்கும் பொழுது அந்த தசாநாதனுக்கும் போதகன், வேதகன், காரகன், பாசகன் ஆகியவர்கள் நால்வரும் நட்பாக உள்ளாரா? பகையாக   உள்ளாரா? உச்சம் நீச்சம் மற்றும் மறைவு பெற்றுள்ளாரா? திதி, சூன்யம் பெற்றுள்ளாரா? என்பதையும் கண்டறிந்து அதற்கேற்ப பலன்களைச் சொல்லவேண்டும்.

ஒவ்வொரு தசா கிரகங்களுக்கு போதகன், வேதகன், பாசகன், காரகன் யார் யார் என்று பார்ப்போம். 

சூரிய திசா
பானு திசைக்குமந்தன் பாசகனாம்
சுக்கிரனோ மானேகேள்
வேதகனாம்! மன்னவனோ - தேனனையாய்
காரகனாம் செவ்வாயுங் காசினியோர் தாமறிய
ஏரணியும் போதகனா மே!.

சந்திர திசா
இந்து திசைக்கு வெள்ளி ஏற்றதோர் பாசகனாம்!
விந்தைமலர் நண்பனே வேதகனாம்-மந்தனே 
கங்கா நதிபுடைசூழ் காசினியிற் காரகனாம்
அங்கா ரகன்போதே கன்.       

புதன் திசா
புத்தி திசைக்குப் புரவலனே போதகனாம்!
சந்திரனே பாசகனும் தானாவன்!-இந்துநுதல்
மின்னனையீர் செவ்வாயும் வேதகனாம்! வெள்ளியோ!  
மன்னுபுகழ் காரகனாவான்!.

குரு திசா 
வேந்தன் மகாதிசைக்கு வெய்யவனே வேதகனாம்!
போந்துவருஞ் செவ்வாயே போதகனாம்!-காந்திசெறி
சந்திரனே காரகனாம் தையலே, தாரணியில்
அந்தகனே பாசகனா வான்!             

சுக்கிரன் திசா
வெள்ளி மகா திசைக்கு வேந்தனே போதகனாம்!
தெள்ளுபுதன் பாசகனாம் செங்கதிரும்-மெள்ளவரும் காரகனே!
தானாகுங் காரியே வேதகனாம்!
வாரணியுங் கொங்கை மயிலே!

சனி திசை
சனியின் திசைக்குச் சசிபோ தகனாம்!
இனியசெவ்வாய் வேதகன்என் றேத்தும்-கனிமொழியாள் 
வெள்ளியே பாசகனாம் வேந்தனோ காரகனாம்!
தெள்ளுதமி ழோரைத்த சீர். 

- சந்திர காவியம்
                                     
மேலே கூறப்பட்ட பாடலில் ஒவ்வொரு கிரக தசாவின் - போதகன், வேதகன், பாசகன் காரகன் தன்மைகளை சுருக்கமாகப் பார்ப்போம். 
        

எடுத்துக்காட்டாக..

  • சந்திர தசாவில் பாசனான சுக்கிரன் 5ல் இருந்தால் ரெட்டிப்பான பலனை தடையில்லாமல் தருவார். 
     
  • சந்திரனுக்கு  போதகனான செவ்வாய் 9ல் முழுமையாக சீக்கிரமாக தருவார்.
     
  • சந்திரனுக்கு  காரகனான சனி 11ல் இருந்து உதவி செய்து நன்முறையில்  அவரவர் கர்மாவிற்கு ஏற்ப செயல்படுத்துவார். 
     
  • சந்திரனுக்கு  போதகனான சூரியன் 3ல் இருந்தால் சந்திரனால்  தடுக்கக்கூடிய  அனைத்து தாமதம் அல்லது தடுக்கச் செய்வார்.

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com