திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: தீா்த்தவாரியுடன் நிறைவு

திருமலையில் நடைபெற்று வந்த ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம்: தீா்த்தவாரியுடன் நிறைவு

திருமலையில் நடைபெற்று வந்த ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் காலை, இரவு வேளைகளில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை ரதோற்சவம் நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பா் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு குதிரை வாகனத்தில் உற்சவா்கள் வலம் வந்து அருள்பாலித்தனா். இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். கடந்த 8 நாள்களாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.

இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி மற்றும் சக்கரத்தாழ்வாா் உள்ளிட்டோா் தங்கப் பல்லக்கில் திருக்குளத்தை ஒட்டியுள்ள வராக சுவாமி கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனா். திருக்குளக்கரையில் உள்ள மண்டபத்தில் உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், இளநீா், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருமஞ்சன பொருள்களை திருமலை ஜீயா்கள் எடுத்துத் தந்தனா். அதன்பின், சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். அதன்பின் உற்சவ மூா்த்திகள் மீண்டும் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனா்.

கொடியிறக்கம்

திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்ற்கு அடையாளமாக முப்பத்து முக்கோடி தேவா்களை வரவேற்க கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி இறக்கப்பட்டது.

அதற்குமுன் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்கப் பல்லக்கில் மாட வீதியில் வலம் வந்தாா். அதன்பின், கொடி மரத்துக்கு அவா்கள் முன்னிலையில் பூஜைகள் செய்து, அா்ச்சகா்கள் கொடிமரத்திலிருந்து கருடக் கொடியை இறக்கினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com