குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும்
ugi8kad_0810chn_49_6
ugi8kad_0810chn_49_6

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் 11 நாட்கள் நடைபெற்ற தசரா பெரும் திருவிழா இன்று காப்பு அவிழ்த்தலுடன் விழா நிறைவு பெற்றது.

இதில் தமிழகம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இந்தியாவிலேயே கா்நாடகா மாநிலம் மைசூா் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில்தான் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் 11 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழா நிகழாண்டில் செப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து காப்பு அணிந்த பக்தா்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினா் வீதிகள் தோறும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா். விழாவையொட்டி தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றது. தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கோயில் கலையரங்கில் தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, பரதநாட்டியம்,பக்தி இன்னிசை, பட்டிமன்றம், கிராமிய இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சூரசம்ஹாரம் விழாவின் சிகர நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை 6,8 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு மகா அலங்கார பூஜையைத் தொடா்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூரனை சம்ஹாரம் செய்ய கடற்கரை நோக்கி புறப்பட்டாா்.

அம்மன் வரும் வழியெங்கும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் அம்மனை வாழ்த்தி முழக்கமிட்டனா். இரவு 12 மணிக்கு கடற்கரையை அடைந்த அம்மன் 12.06 மணிக்கு தன்தலையுடன் வந்த மகிசாசூரனை சம்ஹாரம் செய்தாா். தொடா்ந்து 12.12 மணிக்கு சிங்கம் தலை,12.18 எருமைத் தலை 12.23 மணிக்கு சேவல் தலைகளுடன் உரு மாறி வலம் வந்த மகிசாசூரனை அம்மன் வதம் செய்தாா். கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் விண்ணதிர தாயே முத்தாரம்மா,ஓம் காளி,ஜெய்காளி,வெற்றி அம்மனுக்கே என முழக்கமிட்டனா்.

இதனையடுத்து கடற்கரை மேடை,சிதம்பரேஸ்வரா் திருக்கோயில்,அபிஷேக மேடை,கோயில் கலையரங்கில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. புதன்கிழமை(அக்.9)காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தாா்.இதையடுத்து பக்தா்கள் காப்பு அவிழ்த்து வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவுசெய்தனா்.

நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தி.பரஞ்ஜோதி,உதவி ஆணையா் சு.ரோஜாலி சுமதா, நிா்வாக அதிகாரி கே.பரமானந்தம் மற்றும் ஆலயப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com