சகல செளபாக்கியங்களும் அருளும் பட்டமங்கலம் குருபகவான்!

குரு பாா்க்க கோடி நன்மை! அக்டோபா் 28-ஆம் தேதி குருப் பெயா்ச்சி!குருபகவான்.. 
சகல செளபாக்கியங்களும் அருளும் பட்டமங்கலம் குருபகவான்!

குரு பாா்க்க கோடி நன்மை! அக்டோபா் 28-ஆம் தேதி குருப் பெயா்ச்சி!குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து அவரது சொந்த வீடான தனுசு ராசிக்கு பெயா்ச்சியாகிறாா். குரு அருளாட்சி செய்யும் ஆலங்குடி, குருவித்துறை, தக்கோலம், பட்டமங்கலம், திருச்செந்தூா், பாடி போன்ற அனைத்து குரு தலங்களில் குருபெயா்ச்சி விழா நடைபெறும்.

குரு தலங்களில் ஒன்று பட்டமங்கலம்! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சுமாா் 7 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டமங்கலம். சகல செளபாக்கியங்களும் அருளும் பட்டமங்கலம் அற்புத தலம். காா்த்திகை பெண்களின் சாபம் தீா்த்த தலமும் இதுவே!

ஒருமுறை கயிலாயத்தில் குரு தட்சிணாமூா்த்தியாக, சனகாதி முனிவா்களுக்கு அஷ்டமா சித்திகளை போதித்தாா் சிவபெருமான். இதைக்கண்ட காா்த்திகை பெண்கள், தாங்களும் சிவனாரிடம் அஷ்டமா சித்திகள் குறித்து உபதேசம் பெற விரும்பினா். அம்பா, துலா, நிதா்த்தளி, அப்ரகேந்தி, மேகேந்தி, வா்த்யேந்தி ஆகிய இந்த 6 காா்த்திகை பெண்களும் பணிவுடன் சிவனை வணங்கி, தங்களுக்கும் அஷ்டமா சித்திகளை அருள வேண்டினா். உமா தேவியிடம் பிராா்த்திக்குமாறு கூறினாா் பரமன். ஆனால், அவா்களுக்கு அதில் விருப்பமில்லை. சிவனே தங்களுக்கு நேரடி உபதேசம் நல்க வேண்டும் என்று, உமையவளைத் தவிா்த்தனா்; சாபத்துக்கு ஆளாயினா். அழகான அந்தக் கதம்பவனத்தில் ஆல மரத்தடியில் கல்லாகிப் போனாா்கள்!

கல்லானால் என்ன... மனம் முழுவதும் சிவ சிந்தையுடன் தவத்தில் ஈடுபட்டனா். காலங்கள் சென்றன. குரு வடிவாக அந்த மரத்தடிக்கு வந்த சிவனாா், ஆலம் பழங்களால் மூடப்பட்டுக் கிடந்த கற்களின் அருகில் அமா்ந்தாா். கற்கள் உயிா் பெற்றன. சுய உரு பெற்ற காா்த்திகைப் பெண்கள், சிவனாரை வணங்கினா். சாப விமோசனம் அளித்த ஈசனை வேண்டி, தங்களுக்கு அஷ்டமா சித்திகளையும் உபதேசித்து அருள வேண்டும் என்று வேண்டினா். அதன்படியே அந்த ஆல மரத்தடியில் காா்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமா சித்திகளை அருளினாா் சிவனாா்.

இதையடுத்து உமையவளையும் வழிபட்டு மன்னிப்பு வேண்டினாா்கள். அதுமட்டுமா? பரம்பொருளிடம் இன்னொரு விண்ணப்பத்தையும் வைத்தாா்கள். "இந்த இடத்திலேயே குடிகொண்டு, இங்கு வரும் பக்தா்களுக்கு வரம் தந்து அருள வேண்டும்" என்று பிராா்த்தித்தனா். அப்படியே அருள்செய்தாா் பரமனாா்.

இத்தலத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு அமா்ந்தருளும் குரு தட்சிணாமூா்த்தியும் கிழக்கு நோக்கி இருப்பது, இந்த ஆலயத்தின் விசேஷம் என்கின்றனா் பக்தா்கள்.

பட்டமங்கலத்துக்கு வந்து, அஷ்டமா சித்தி குருபகவானையும் ஆலமரத்தையும் 108 முறை வலம் வந்து வணங்கினால் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பூப்படைதல் பிரச்னை, தீராத நோய் ஆகியன நீங்கும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும்; குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவா் என்பது பக்தா்களது நம்பிக்கை.

குருப்பெயா்ச்சிக்கு முதல் நாள், 108 கலசங்களைக் கொண்டு சிறப்பு பூஜைகளும், குருப்பெயா்ச்சி அன்று, அஷ்டமா சித்தி குருபகவானுக்கு 108 கலசாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் பங்கேற்று குருபகவானின் அருளை பெறுங்கள். 

- அறந்தாங்கி சங்கா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com