Enable Javscript for better performance
Rishaba rasi gurupeyarchi palangal 2019 | ரிஷப ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2019- Dinamani

சுடச்சுட

  

  சோதனைகளை கடந்து சாதனை படைக்கப்போகும் ரிஷப ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்! விடியோ

  Published on : 21st October 2019 05:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rishabam

  ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5-ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும். 

  குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் ரிஷப ராசிக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம். 

  அன்புக்கு அடிபணியும் ரிஷபராசி அன்பர்களே! 

  இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடமான சப்தம ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் தற்போது நடக்கவிருக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்ல இருக்கின்றார். தற்போது நடந்துவரும் அஷ்டம சனியும், கேதுவும் மட்டுமல்லாமல் அஷ்டம குருவும் இணைந்து சில மாதங்களுக்கு செயல்படுகிறார்கள்.

  இது வாழ்க்கையில் பலவிதமான புதிய அனுபவங்களையும், சில சோதனைகளையும் கடந்து வெற்றி வாகையை அளிக்கக்கூடிய காலங்களாக இருக்கும். குடும்பத்தில் விரும்பத்தகுந்த மாற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். சிலருக்கு பட்டம், பதவி உயர்வு முதலியன கிடைக்கும் யோகமும் உண்டாகும். தொழிலுக்கேற்றவாறு உங்கள் தகுதிகளை உயர்த்திக்கொள்வீர்கள். 

  வருமானம் எதிர்ப்பாத்த அளவுக்குக் கிடைக்கும். அரசாங்க உதவியும் பெரும்பாலானோருக்குக் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேநேரம் அனைத்துச் செயல்களிலும் முதலில் சில சிக்கல்கள் ஏற்பட்டு பிறகு அது சரியாகும். 

  வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் படிப்படியாகத் தீரும். பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படாது. கடினமான நிலமைகளை உங்கள் அறிவுத்திறனால் சமாளித்துவிடுவீர்கள். விடாமுயற்சியுடன் எந்த காரியத்தையும் செய்து வெற்றியை காண்பீர்கள். 

  வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுணங்கிவந்த சுபகாரியங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறத் தொடங்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்துவிடும் காலக்கட்டமாக இது அமையும். 

  வழக்குகளால் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. மற்றபடி ஆன்மீக பலம் அதிகரிக்கும். புனித தலங்களுக்கு யாத்திரை சென்று வரும் பாக்கியமும் உண்டாகும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு..

  இந்த குருப்பெயர்ச்சியினால் அனைத்து வேலைகளும் திட்டமிட்டதுபோல் நடைபெறும். உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும். உங்கள் பணிகளில் மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். அதேநேரம் அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம். உங்கள் வேலைகளை உடனுக்குடன் முடிக்கவும். மற்றபடி வீடுகட்ட கடன்கள் கிடைக்கும். 

  வியாபாரிகளுக்கு..

  சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். வருமானம் பலவகையிலும் உங்களைத் தேடிவரும் அதேசமயம் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும் பழைய கடன்கள் வசூலாகும். போட்டி பொறாமைகள் கூடுதலாக இருப்பதால் கவனமாக இருக்கவும். 

  இதையும் படிக்கலாம்: குருப்பெயர்ச்சியாகும் போது குரு பகவான் தரக்கூடிய யோகங்கள் என்னென்ன?

  விசாயிகளுக்கு..

  வருமானம் திருப்திகரமாக இருக்கும். குறிப்பாக தானியப் பொருட்கள் விற்பனையில் நல்ல பலனைப் பெறுவீர்கள். புதிய கால்நடைகளை வாங்கிப் பலன் பெறலாம். சந்தையில் போட்டி, பொறாமைகளைச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். மேலும் போட்டிக்கேற்ப விலைகளை நிர்ணயித்து லாபமடைவீர்கள். இந்தக்காலகட்டத்தில் புதிய குத்தகைகள் கிடைக்கும். 

  அரசியல்வாதிகளுக்கு..

  இந்த குருபெயர்ச்சியால் கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். இதனால் அனைத்து வேலைகளும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர். எதிர்க்கட்சியினரிடம் அனாவசிய நெருக்கம் வேண்டாம். உங்களின் செயல்கள் எதிர்பார்த்த திருப்பங்களை ஏற்படுத்தும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். 

  கலைத்துறையினருக்கு..

  எதிர்பார்த்த அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அந்தஸ்து உயரும். இதுவரை வெறுத்து ஒதுக்கியவர்களும் உங்களைப் புகழும் காலகட்டமிது. வருமானம் சீராக இருக்கும். பயணங்களால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். 

  பெண்மணிகளுக்கு..

  உற்றார் உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நெடுநாள் பார்க்காமல் இருந்த கோவில்களுக்குச் சென்றுவருவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். இந்தக் குருப்பெயர்ச்சியால் சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள்.

  மாணவமணிகளுக்கு..

  அதிகம் உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளியிலும் சென்றுக் கல்வி பயில வாய்ப்புகள் கிடைக்கும்.

  பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டுவர அனைத்து நலன்களும் கிட்டும். 

  மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு குருப்பெயர்ச்சி! 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai