தேவியோடு அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி திருக்கோயில்!

அனைத்து சிவாலயங்களிலும் கருவறையின் தென்புறக்கோஷ்டத்தில் தென்முகக் கடவுளான
தேவியோடு அருள்பாலிக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி திருக்கோயில்!

அனைத்து சிவாலயங்களிலும் கருவறையின் தென்புறக்கோஷ்டத்தில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை நாம் தரிசிக்கலாம். சிவபெருமானின் 64 திருமேனி வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவம் 32-ஆவது வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. தேவகுருவான பிரஹஸ்பதி தட்சிணாமூர்த்தியின் அம்சமாகத் திகழ்வதாக ஐதீகம்.

தட்சிணாமூர்த்தியை நாம் வணங்கும்போது, இந்த அழகிய திருவுருவத்தின் பின்னணியில் உள்ள புராணக் கதை நம் நினைவிற்கு வரும். தன் தந்தை தட்சன் சிவபெருமானை அழைக்காது யாகம் செய்தபோது, அங்கு சென்ற பார்வதி தேவி தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, தட்சனின் மகள் என்னும் பொருளிலமைந்த தாட்சாயணி என்ற தன் பெயரை விடுவிக்க வேண்டி மீண்டும் இமவான் மகளாகப் பிறந்து, சிவபெருமானை அடையக் கடுந்தவம் இயற்றினாள்.

கயிலையில் தனியே அமர்ந்து தவத்தில் ஈடுபட்டிருந்த சிவபெருமானை சனகாதி முனிவர்கள் அணுகி, தங்களுக்கு ஞானத்தை உபதேசிக்க வேண்டினர். தட்சிணாமூர்த்தி சின்முத்திரை காட்டி அவர்களுக்கு ஞானத்தை 

உபதேசம் செய்தார். சாத்திரங்கள், வீணை, யோகம் மற்றும் ஞானம் ஆகியவற்றை உபதேசிக்கின்ற தட்சிணாமூர்த்தி வடிவமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

பெரும்பாலும் ஆலயங்களில் முயலகன்மீது கால் வைத்து சின்முத்திரை காட்டி சனகாதி முனிவர்களுக்கு சாத்திரங்களை உபதேசம் செய்கின்ற வியாக்கியான தட்சிணாமூர்த்தியையே தரிசிக்கிறோம். அபூர்வமாக யோக பட்டம் அணிந்த யோக தட்சிணாமூர்த்தி, வீணையைக் கையிலேந்திய வீணாதர தட்சிணாமூர்த்தி, ஞானத்தை போதிக்கும் ஞான தட்சிணாமூர்த்தி வடிவங்களை ஒருசில ஆலயங்களில் கோஷ்டங்களில் தரிசிக்க முடியும்.

சிவபெருமானின் திருமேனிகளைக் குறித்த நூல்களில் 65 வகை தட்சிணாமூர்த்தி வடிவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் பார்வதி தேவியோடு இணைந்து அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வர வீணாதர தட்சிணாமூர்த்தி, கௌரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தி போன்ற திருவுருவங்களும் அடங்கும்.

தவமியற்றி மீண்டும் சிவபெருமானை தன் பதியாக அடைந்த கௌரீ என்ற பார்வதி, தன் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துகின்ற வகையில் தட்சிணாமூர்த்தியாக தவமியற்றிய சிவபெருமானை ஆலிங்கனம் செய்துகொண்டிருக்கும் ஒரு திருமேனியே கௌரி ஆலிங்கன தட்சிணாமூர்த்தியாகும். இப்படிப்பட்ட ஒரு அழகிய, அரிய தட்சிணாமூர்த்தி திருவுருவத்தை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சுருட்டப்பள்ளியில் தரிசிக்கலாம்.

சுருட்டப்பள்ளி ஆலயம் பல்வேறு வகைகளில் பிரசித்தி பெற்றது. ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமான், விஷம் உண்ட மயக்கம் தீர பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து சயனித்திருப்பது போன்ற அரிய திருவுருவத்தைக் கருவறையில் கொண்ட ஆலயம் இது. இறைவன் சுருண்டு பள்ளிகொண்டதால் சுருட்டப்பள்ளி என்ற பெயர் பெற்றதாம்.

திருமாலை மட்டுமே பள்ளிகொண்ட நிலையில் 108 திவ்ய தேசங்களிலும், பிற வைணவ ஆயலங்களிலும் தரிசிக்க முடியும். ஆனால் சிவபெருமான் பள்ளிகொண்டு பள்ளிகொண்டீசராகக் காட்சி தரும் ஒரே தலம் இந்தியாவில் சுருட்டப்பள்ளிதான். பிரதோஷ வழிபாடு தோன்றிய இடம்- இறைவன் பள்ளிகொண்டிருப்பதால் பிரதோஷ பூஜையின்போது செய்யப்படும் சோமசூக்தப் பிரதட்சிணம் இல்லாத தலம்- துவாரபாலர்களுக்கு பதில் குபேரனோடு சங்க நிதி, பதும நிதி உள்ள தலம்-. அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராகக் காட்சி தருகின்ற தலம்- நவகிரக சந்நிதி இல்லாத தலம்- சிவாலயமாக இருந்தும்கூட தீர்த்தப் பிரசாதமும் சடாரியும் உள்ள தலம் என்று பல சிறப்புகள் சுருட்டப்பள்ளித் தலத்திற்கு உண்டு.

இங்கு பள்ளிகொண்ட சிவனாக மட்டுமின்றி, இன்னொரு கருவறையில் வன்மீகீசர் என்ற திருநாமத்தோடு  லிங்க வடிவில் மரகதாம்பிகை சமேதராக எழுந்தருளியிருக்கிறார். வன்மீகீசர் கருவறையின் தென்புறக் கோஷ்டத்தில்தான் மிக அரிதான தாம்பத்ய தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்து, வலக்காலை முயலகன் முதுகின்மீது தொங்கவிட்டு, பத்ம பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். தனது முன்கை சின்முத்திரை காட்ட, இடது முன்கை மடித்த இடது காலின்மீது உள்ளது. பின்னிரு கரங்களில் மானும் மழுவும் உள்ளன. சனகாதி முனிவர்கள் காலடியில் அமர்ந்துள்ளனர்

அமைதியாக புன்னகை தவழும் முகத்தோடு அருள்பாலிக்கும் இந்த தட்சிணாமூர்த்தியின் அழகிற்கு அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அவரது இடது தோளின் பின்புறம், பரிவோடு தோளைப் பற்றியவாறும் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பது போலவும் அமைந்துள்ள பார்வதி தேவியின் அழகிய திருவடிவம். தேவியோடு திகழ்கின்ற இந்த அபூர்வ தட்சிணாமூர்த்தியை மனதார வழிபட்டால் கல்வியும் ஞானமும் கிட்டுவதோடு தாம்பத்ய வாழ்வில் அமைதியும் இணக்கமும் ஏற்படுவது உறுதி.

இத்தலத்தில் பிரதோஷ நாட்கள் மிகமிகச் சிறப்பானவை. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வருகின்ற சனிப் பிரதோஷம் உத்தம சனிப் பிரதோஷம் எனப்படுகிறது. இந்த தரிசனம் ஐந்து வருடப் பிரதோஷங்களை தரிசித்த பலனைத் தரும் என்பது ஐதீகம். அடுத்தடுத்து இரண்டு சனிப் பிரதோஷங்களை தரிசித்தால் அது அர்த்தநாரிப் பிரதோஷம் எனப்படுகிறது. மணப்பேறு கிட்ட ஆண்- பெண்கள் தங்கள் வயது எண்ணிக்கைப்படி நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

சுருட்டப்பள்ளியில் குருப்பெயர்ச்சி விழா மிகப் பிரபலமானது. குருப்பெயர்ச்சியின் போது, இங்குள்ள பள்ளிகொண்டீசரையும், மங்களாம்பிகையையும், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியையும் தரிசித்து குரு பார்வைக்குரிய பலன்களையும், தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் ஒருங்கே பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com