ஆலங்குடி குரு பகவான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

ஆலங்குடி குரு பகவான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

குருபகவான் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அதிகாலையில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார்.


குருபகவான் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அதிகாலையில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார். இதை முன்னிட்டு, ஆலங்குடி குரு பரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவ கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது.
இக்கோயிலில், கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், காசி ஆரண்யேசுவரர், ஏலவார்குழலி அம்மை, உமையம்மை, குரு தெட்சிணாமூர்த்தி ஆகிய சுவாமிகள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். 
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில், குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டில் குரு பகவான் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.49 மணிக்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார். அதை முன்னிட்டு இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலையில் நடைபெற்ற குருபெயர்ச்சியின்போது குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. 
பஞ்ச மூர்த்திகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. குரு பகவான் எதிர்புறம் உள்ள பிராகாரத்தில் உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு, குரு பரிகார யாகங்கள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குரு பகவானை தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தர்களின் நலன் கருதி அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் உத்தரவின்பேரில், அரசின் பல்வேறு துறைகளும் சிறப்பு வசதிகளை செய்திருந்தன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை அறிவுறுத்தலின்பேரில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு, குரு பகவானுக்கு குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை முதல் கட்டமாக நடைபெற்றது. 
குரு பெயர்ச்சிக்குப்பின் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7-ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com