நியூயார்க்கில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்திப் பெருவிழா!

ஒன்பது நாள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்ட நியூயார்க் மகா வல்லபகணபதி..
நியூயார்க்கில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்திப் பெருவிழா!

ஒன்பது நாள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்ட நியூயார்க் மகா வல்லபகணபதி திருக்கோயிலில் நிறைவு நாளான செப்டம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரைகள் பூட்டிய வெள்ளி ரதத்தில் உற்சவர் அருள்மிகு மகா வல்லப கணபதி, நாதஸ்வர - தவில் மங்கள வாத்திய இசையுடன் ரத யாத்திரை மிக விமரிசையாக நடைபெற்றது.

பறை இசைக்குழுவினர், "டோல் டிரம்ஸ்" இசைக் குழுவினரரின் இசை முழக்கங்களுடன், கும்மி கோலாட்டம் ஆட்டம் பாட்டங்களுடன் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் உடன் செல்ல, நியூயார்க் குயின்ஸ் பகுதியின் பிரதான சாலைகளில் மூன்று மணி நேர ரத யாத்திரை மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

ரத யாத்திரையில் சிறுவர் சிறுமியர் உள்ளிட்ட அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். வழிநெடுக இருந்த அமெரிக்கர்கள், ஸ்பானிஸ், சீனர்கள் கொரியர்கள் பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட பன்னாட்டு மக்கள் கண்டு களித்தனர்.

திருக்கோயிலில் மூலவர் அருள்மிகு மகாவல்லபகணபதிக்கு “தங்கக் கவச அலங்காரம்” மிகச் சிறப்பாக - கண்கவர் வகையில் செய்யப்பட்டிருந்தது.

காலை முதல் இரவு வரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அன்னதானப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.  

விழாவிற்கென்றே தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திருப்பனந்தாள் ஆதீனம் குருமூர்த்தி (நாதஸ்வரம்), தருமபுரம் ஆதீனம் லக்ஷ்மணன் (தவில்) ஆகியோரின் அற்புதமான மங்கல இசை, ஒன்பது நாட்கள் திருவிழாவுக்கும் ரத யாத்திரைக்கும் கூடுதல் சிறப்புச் சேர்த்தது!

நியூயார்க் காவல் துறையினர் ரதயாத்திரை செல்லும் வீதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தேவஸ்தான தலைவர் திருமதி டாக்டர் மைசூரேக்கர் தலைமையில் திருவாளர்கள் சிவகுமார் சாமிநாதன், ஹரிகரன் உள்ளிட்ட திருக்கோயிலின் சிவாச்சாரியார்கள், திரு பத்மநாபன் திருமதி ஸ்ரீமதி உள்ளிட்ட கோவில் அலுவலக அதிகாரிகள், கோயில் கேண்டீன் திரு சந்தானம் உள்ளிட்ட அன்பர்கள் அனைவரும் திருவிழாவுக்கான எல்லா ஏற்பாடுகளையும் மிக நிறைவாகச் செய்திருந்தனர்.

மூலவர் அருள்மிகு மகாவல்லப கணபதிக்கு தினசரி விதவிதமான சிறப்பான அலங்காரங்களை சிவாச்சாரியார்கள் மிக நேர்த்தியாக அழகுற மிகக் கம்பீரமாக கண்டோர் வியக்கும் வகையில் செய்திருந்தனர்.     

பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர், தன்னார்வத் தொண்டர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு, கடந்த ஒன்பது நாட்களிலும் திருவிழாவின் பல்வேறு அம்சங்களில் - கோயில் திருப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் பேரார்வத்துடன் அர்ப்பணிப்புடன் சேவை செய்தது பெரும் பாராட்டுக்குரியது.

- சண்முகம் பெரியசாமி, நியூயார்க்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com