வெங்கடேசப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷ்ணம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு 

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷ்ணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வெங்கடேசப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷ்ணம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு 

திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷ்ணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த பிரசித்திப் பெற்ற பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.  

இக்கோயிலில் சம்ப்ரோக்ஷ்ணம் செய்து 28 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டு பாலாலயம் செய்யப்பட்டது. சுமார் ரூ. 40 லட்சம் செலவில் திருப்பணிகள் நிறைவு பெற்றன. 

புதுமையாக, சந்நிதியில் பெருமாள் சயன திருக்கோலம், நின்ற கோலம், அமர்ந்தக் கோலத்திலும், பெருமாள் தசாவதாரக் கோலங்களும் சுவரில் சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தாயார் சன்னிதி பிராகாரப் பக்க சுவரில் அஷ்ட லட்சுமிகள் சிலைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. ஆஞ்சநேயர் வெளிப்புறச் சுவரில் அவரது பல்வேறு கோலங்கள் சுதை வடிவில் செய்யப்பட்டுள்ளன.

சம்ப்ரோக்ஷ்ண விழா: வைணவத் தலங்களில் குடமுழுக்குக்கு சம்ப்ரோக்ஷ்ணம் என கூறப்படுகிறது. இந்த விழா திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக  4 கால யாகசாலை பூஜைகள் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் கால பூஜையுடன் தொடங்கியது. அடுத்து, செப்டம்பர் 15-ஆம் தேதி 2 மற்றும் 3-ஆம் கால பூஜையும், செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 9.15  மணிக்கு மகா பூர்ணாஹுதி செய்யப்பட்டு புனிதநீர் கடம் புறப்பாடு செய்யப்பட்டது. யாகசாலையிலிருந்து உபய நாச்சியார்களுடன் உத்ஸவர் வெங்கடேசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலுக்குள் எழுந்தருளினார். 

ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான விமானம் உள்ளிட்ட பல்வேறு விமான கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி, காலை 10.15 மணிக்கு குடமுழுக்கு செய்து ஆராதனை நடத்தினர். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. 

விழாவில், புதுச்சேரி முதல்வர் வே. நாராயணசாமி, வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com