மருத்துவ ஜோதிட புலி - புலிப்பாணி சித்தர்!

புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான பழனியில் ஜீவ சமாதி ஆன போகரின் தலையாய சீடராவார்.
மருத்துவ ஜோதிட புலி - புலிப்பாணி சித்தர்!

புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான பழனியில் ஜீவ சமாதி ஆன போகரின் தலையாய சீடராவார். ஜோதிடர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பவர் நம் புலிப்பாணி. இவர் புரட்டாசி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இவர் ஒருசிலர் பொன் வணிகர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் மற்றொருவர் வேடவர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. 

ஜோதிடத்தில் புலியாகவும், குரு போகர் துணைகொண்டு மருத்துவத்தில் வல்லவராகவும், முருகனின் பூஜை முறையை அறிந்தவராகவும், அட்டமா சித்திகளிலும் கைதேர்ந்தவராகவும் குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கினார். இவர் குரு தொண்டு செய்வதில் வல்லவர். எள்ளு என்றவுடன் எண்ணெய்யாக இருப்பார். அதனால் குருவின் அருகே இருந்து அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டார்.  குருவுக்குத் தேவையான மூலிகைகளை மலைக்கு மலை சென்று சேகரித்தலும் அதுதவிர குருவிற்குத் தேவையான பணிவிடைகளையும் செய்துவந்தார்.

போகர் பழனியில் நவபாக்ஷாண மூலிகை முருகனை உருவாக்க இவர் மிக்க உறுதுணையாய் இருந்தவர். குரு தொண்டு என்றவுடன் ஒன்று நினைவு வருகிறது. ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, தம் குருநாதர் போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து வெறும் கையாலேயே போதிய நீரெடுத்துக் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இவரைப் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார் [புலி + பாணி (நீர்)] . போகர் கேட்கும் மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறிச் சென்று பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது. புலிப்பாணி ஒரு தெய்வ சக்தி கொண்டவராகவும், மிருகங்களை வசியம் செய்யும் சக்தி படைத்தவராகவும் இருந்தார். 

பழநி மலையின் உச்சியில் நவபாஷாண முருகன் சிலையை, கலியுகம் முடியும் வரையில் மக்களுக்கு அருளப்படும் அமைப்பில் புலிப்பாணி உதவியுடன் போகரால் உருவாக்கப்பட்டது. புலிப்பாணிக்கு ஒன்பது மூலிகைகளையும் விகிதாச்சாரத்தில் கலந்த நவபாஷாண முருகர் சிலையைப் பற்றியும், அச்சிலைக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களைச் சாப்பிட்டால் அது விஷத்தன்மைக்குப் பதிலாக மருத்துவத்தன்மை பற்றிய விவரங்கள் நன்கு தெரியும். போகர் தன் பணியைத் தொடர சீனா நாட்டிற்குச் செல்லும்பொழுது அனைத்து பொறுப்புகளையும் தன் அன்புக்குரிய சீடரிடம் புலிப்பாணியிடம்  ஒப்படைத்ததாகவும் அதனை அவர் தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.  போகருக்கே வைத்தியம் செய்ததாகவும் அதனால் புலிப்பாணி சித்தரை குருவை மிஞ்சிய சீடர் என்றும் போற்றப்பட்டார். புலிப்பாணிக்குப் பழநி தண்டாயுதபாணியின் பூஜை முறைகளைச் சரிவரக் கற்றுக்கொடுத்தார் அவர் குருநாதர். இச்சிலைக்கான வழிபாடு திருமுழுக்கு விதிமுறைகள் புலிப்பாணி சித்தர் இயற்றியுள்ளார்.

"பாரப்பா மலையதுவின் உச்சியிலே 

பாங்கான போகருட சமாதியருகே 

கட்டான பாடாணவகை எட்டுடனொன்று

காணவே சேர்த்துவார்த்த சிலைதானும்

நண்ணவே பிரதிட்டைதான் செய்து

நவிலுவேன் பூசைசோ டசமுஞ்செய்ய

ஆற்றினேன் பூசைவிதிகள் தானும்

ஆரப்பா அறிவார்க ளாருமில்லை."

- புலிப்பாணி

போகர் சொற்படி மூலிகை முருகனுக்கு அபிஷேகங்களும், ஆராதனைகளும் புலிப்பாணியால் வழிபாடு நடைபெற்றது. 205 வருடங்கள் புலிப்பாணி பூஜைகளைத் தொடர்ந்து செய்து வந்தாயிற்று பின்பு புலிப்பாணி பரம்பரை பூஜை செய்யும் உரிமை உருவாயிற்று. புலிப்பாணி சித்தரும் தன் குரு போகரைப் போலவே பழநியிலேயே சமாதியாகி விட்டார். புலிப்பாணியின் சமாதி இன்றும் பழனி மலையின் வட கிழக்கு திசையில் அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது. இன்றும் பழனியில் அருவமாய் புலிப்பாணி சித்தர் உலவுவதாகவும், வேண்டுவோருக்கு வேண்டியதை அருளுவதாகவும் நம்பிக்கை இருந்து கொண்டு தான் இருக்கிறது. 
  
பழனியில் சித்தர்கள் வாழ்ந்த பெருமைகொண்ட ஸ்தலம். அதனால் செவ்வாய் தோஷத்தைப் போக்கி, நிலத் தகராறு, நோய் விட்டு ஓட, சொத்துத் தகராறு தீர, திருமணத் தடை தீர்த்து வைப்பதில் இந்த சித்தர் சமாதிகள் சிறந்த ஸ்தலம் ஆகும். வாழ்வில் ஒருமுறையேனும் சென்றால் மிகவும் நல்லது

புலிப்பாணியின் நூல்களை ஜோதிட ஆய்வுகளின் முக்கிய கூறு, சித்த மருத்துவம், வானியல் சாஸ்திரம், பூஜை முறைகள், சூத்திர விதிகள் அனைத்தும் புலிப்பாணி எழுதிய புத்தகத்தில் உள்ளன. 

புலிப்பாணி வைத்தியம் - 500 

புலிப்பாணி ஜோதிடம் - 300 

புலிப்பாணி ஜாலம் - 325
 
வைத்திய சூத்திரம் - 200 

பூஜாவிதி - 50 

சிமிழ் வித்தை - 25

சண்முக பூஜை - 30 

சூத்திர ஞானம் - 12

சூத்திரம் - 90 

புலிப்பாணி வைத்திய சாரம்

இத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனிச் சிறப்பாகச் சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் "புலிப்பாணி ஜோதிடம் 300" என்னும் நூலாகும். இதில் உள்ள பாடல்கள் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்கப் போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்துகொள்ள இயலும். அவர் ஜோதிடத்தில் சொல்லாத சூட்சமங்கள் ஒன்றும் இல்லை அவ்வளவு அருமையாகக் கணக்கிட்டுச் செல்லப்பட்டுள்ளார். 

அவர் எழுதிய புலிப்பாணி ஜோதிடத்தில் அனைத்தும் வானில் உள்ள கிரக மண்டலத்தில் நீள் வட்டப் பாதையில் சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றிவரும் பாதை, 27 நட்சத்திர விவரங்கள், நட்சத்திரங்களின் பாதைகளை 12 ராசிகளாக பிரிதல், கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு, ஆருடம் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, ஞான திருஷ்டியின் மூலம் கணக்கீடாகக் கணிக்கும் முறைகள், நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. புலிப்பாணி ஜோதிடம் என்ற நூலில் காப்பு அடங்கலாக மொத்தமாக 309 பாடல்கள் உடன் தெளிவான பொருள் கொண்டு கரைத்துக் குடித்தவர்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு ஜாதகரின் பலன்களையும் துல்லியமாகச் சொல்ல முடியும்.

இவரின் குருவான போகரின் பெருமை பற்றி பின்பு வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com