Enable Javscript for better performance
புரட்டாசி சனிக்கிழமை: புணர்ப்பு தோஷத்தால் திருமணத்தடையா? ஏழுமலையானுக்கு தளிகை போடுங்க!- Dinamani

சுடச்சுட

  

  புரட்டாசி சனிக்கிழமை: புணர்ப்பு தோஷத்தால் திருமணத்தடையா? ஏழுமலையானுக்கு தளிகை போடுங்க!

  By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published on : 20th September 2019 06:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  balaji1

   

  நாளை 21/9/2019 புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆரம்பம் ஆகிறது. புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள்  கொண்டாடப்படுகிறது. உணவுக் கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த  வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம்  இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும்  அழைப்பார்கள்.

  பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும்.  எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள். அதிலும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத  சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய  காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.

  எல்லா தமிழ் மாதங்களுக்கும் சிறப்பான மாதங்கள்தான் என்றாலும் புரட்டாசிக்கென்று ஒரு சிறப்பு உள்ளது. புரட்டாசி மாதம் என்பது ஜோதிடத்தில் கன்னி ராசியை  குறிக்கும், கன்னிராசியின் அதிபதி புதன். புதனின் அதிதேவதை திருமால், ஸ்ரீ மஹா விஷ்ணு, திருப்பதி ஏழுமலையான். சந்திரனின் நக்ஷத்திரமான ஹஸ்தம் உள்ள ராசி.  நில ராசி. பொதுவாக சந்திரனின் நக்ஷத்திரஙகளான ரோஹினி, ஹஸ்தம் மற்றும் திருவோணம் ஆகிய மூன்று நக்ஷத்திரங்களுக்கும் ஸ்ரீ விஷ்ணுவான ஏழுமலையானுக்கும்  நெருங்கிய தொடர்பு உண்டு. ஸ்ரீ க்ருஷ்ணர் உதித்தது ரோகினி நக்ஷத்திரம். அவர் ஏடுகொண்டலவாடுவாக (ஸ்ரீநிவாசனாக அவதாரம் செய்தது புரட்டாசி மாதம் ஹஸ்த  நக்ஷத்திரத்தில். அவர் வட்டிகாசலுவாடுவாக (குபேரனிடம் கடன் பெற்றது) திருவோண நக்ஷத்திரத்தில். ஆக இந்த மூன்றுமே நில ராசிகள். மேலும் காதல் தொடர்புடைய  ராசிகள். ஒன்றுக்கொன்று திரிகோண ராசிகள்.

  புரட்டாசி சனிக்கிழமை

  புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில்  உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர்.

  ஏழுமலையான் தளிகை

  திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில்  ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு படைப்பது தளியல் ஆகும். வீடு வாசலை சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி படைக்கும் இடத்தில் படையல் கோலம் போட வேண்டும். தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல், எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல்   ஆகிய நைவேத்தியங்கள் தயார் செய்ய வேண்டும்.

  குத்து விளக்கின் ஐந்து முகங்களையும் நெய் தீபம் ஏற்றி கோலத்தின் இருபுறமும் வைக்க வேண்டும். குத்து விளக்கிற்கு குங்குமம் வைத்து துளசி மாலை அணிய  வேண்டும். மூன்று நுனி வாழை இலைகளை விளக்கிற்கு முன்புறம் போட்டு நைவேதயங்களை இலையில் பரிமார வேண்டும். உத்தரணி அல்லது ஒரு பாத்திரத்தில்  தண்ணீரில் துளசியை கலந்து வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து "கோவிந்தா" என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேச பெருமாளை வழிபடுவது பழக்கம்.

  மாவிளக்கு வழிபாடு

  மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தவர்களின் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி, அச்சுவெல்ல பாகு, ஏலக்காய், எள்  போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் நெய் ஊற்றி திரிப்போட்டு விளக்கேற்றப்படும்.

  சனி-சந்திர சேர்க்கை தரும் புணர்ப்பு தோஷம்

  இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கப்பூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவைப் புணர்ப்பு தோஷம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனியும்  சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ  புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

  புணர்ப்பு தோஷம் என்ன செய்யும்?

  புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவது இல்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை  அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும்  ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும்.

  புணர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொது வாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் சிந்திக்க  நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

  சனி-சந்திர சேர்க்கையால் பிரச்னை மட்டும்தானா?

  புணர்ப்பு தோஷம் எல்லோருக்குமே இல்லற வாழ்வில் பிரச்னையை ஏற்படுத்திவிடுகிறதா என்றால் இல்லை என அடித்துக் கூறலாம். திருமணத் தடைக்கான அமைப்பு  மற்றும் களத்திர தோஷம் போன்றவை இருந்து அதோடு புணர்ப்பு தோஷமும் இருந்தால் சிறிது பிரச்னை ஏற்படும். என்றாலும் மெதுவாக செல்லும் கிரகமான சனிக்கு  பின் வேகமாக செல்லும் சந்திரன் நின்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் அது இதசல யோக அமைப்பைப் பெற்று நன்மையை அளித்திடும்.

  எது எப்படியோ! புணர்ப்பு தோஷம் பெற்றவர்கள் அரசியல் போன்ற பொது வாழ்வில் மற்றும்  ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகவோ புகழ் பெற்றவர்களாகவோ  இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

  புணர்ப்பு தோஷத்திற்கு விதிவிலக்கும் பரிகாரமும்

  1. குரு பார்வை/சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் தோஷம் கிடையாது.

  2. குரு வீட்டில் சனி சந்திர சேர்க்கை பெற்று புணர்ப்பு ஏற்பட்டிருந்தால் தோஷமில்லை.

  3. சனியின் எதிரியான சூரியன் மற்றும் செவ்வாய் அல்லது லக்ன மற்றும் ராசியின் யோகாதிபதி, இவர்கள் சந்திரன் மற்றும் சனியின் இடையே நிற்க. புனர்புதோஷ பங்கம்  ஏற்படுகிறது.

  4. சுக்கிரனின் வீட்டில் புணர்ப்பு பெற்றால் தோஷம் நீங்குவதோடு மிகப்பெரும் புகழை தந்துவிடுகிறது.

  பரிகாரம்

  1. சந்திர ஸ்தலமான திருப்பதியில் வெங்கடாஜலபதி தரிசனம் சனிக்கிழமையில் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

  2. சனிக்கிழமையில் பௌர்ணமி வரும் நாளில் சத்தியநாராயண விரத பூஜை செய்வது சனி-சந்திர சேர்க்கையால் ஏற்படும் பிரச்சனைகளை போக்கி மகிழ்ச்சியான வாழ்வை  அளிக்கும்.

  3.புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை (தளிகை) சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில்  இட்டு ஏழுமலையானுக்கு படையலிட புணர்ப்பு தோஷம் நீங்கும்.

  4.புரட்டாசி சனிக்கிழமையில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில்  மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம்  நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

  5. புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் வேத பிராமணர்களைக் கொண்டு செய்வது.

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  Mobile 9498098786

  WhatsApp 9841595510

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai