பீத மாதமும் பாவை நோன்பும்

"மாஸானாம் மார்கசீர்ஷோஹம்' என்று கூறினார், குருúக்ஷத்திரப் போர்க்களத்தில் கீதாசார்யனாக நின்ற கிருஷ்ண பரமாத்மா. பகவானே சொந்தம் கொண்டாடுகிற இந்த மார்கழி மாதம், எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியது.
பீத மாதமும் பாவை நோன்பும்

மார்கழி வழிபாடு: ஓர் அறிமுகம் - டாக்டர் சுதா சேஷய்யன்

"மாஸானாம் மார்கசீர்ஷோஹம்' என்று கூறினார், குருúக்ஷத்திரப் போர்க்களத்தில் கீதாசார்யனாக நின்ற கிருஷ்ண பரமாத்மா. பகவானே சொந்தம் கொண்டாடுகிற இந்த மார்கழி மாதம், எண்ணற்ற சிறப்புகளுக்கு உரியது. இராமருக்கும் சீதைக்கும் திருமணம் நடந்த தினமாக வடநாட்டவர்கள் கொண்டாடுகிற விவாக பஞ்சமி, முக்தி தருகிற வைகுண்ட ஏகாதசி, குருúக்ஷத்திரப் போர்க்களத்தில் கிருஷ்ணர் கீதையை உபதேசம் செய்த கீதா ஜயந்தி, மும்மூர்த்திகளின் கூட்டு அவதாரமான தத்தாத்ரேயர் திருவவதாரம் செய்த தத்தாத்ரேய ஜயந்தி, பார்வதி தேவி அன்னபூரணியாகத் திருவவதாரம் செய்த அன்னபூரணி ஜயந்தி, அண்டர்வாணன் அம்பலவாணனாகத் திருநடனம் புரியும் ஆருத்ரா திருநாள் என்று ஏராளமான சிறப்பு நாள்கள் வரிசைகட்டி வரும் மாதம் இது. 
மார்கழி என்று தமிழிலும் மார்கசீர்ஷம், ம்ருகசீர்ஷம், மக்சர் என்று பிற இந்திய மொழிகளிலும் இந்த மாதமானது அழைக்கப்படுகிறது. சாந்திரமான கணக்குப்படி (அதாவது சந்திரனையும் சந்திர நகர்வுகளையும் அடிப்படையாகக் கொண்ட முறை), இந்த மாதத்தில், மார்கசீர்ஷம் என்னும் நட்சத்திரத்தோடு பெüர்ணமி கூடுகிறது. எனவே, மாதமும் மார்கசீர்ஷம் என்றழைக்கப்படுகிறது. 
"மார்க சீர்ஷம்' என்னும் சொல்லைப் பிரித்துப் பார்த்தால் (மார்கம்= வழி, சீர்ஷம்=தலைமை அல்லது தலையாய) முதன்மையான வழி அல்லது தலையாய வழி என்னும் பொருள் கிட்டும். இந்த அடிப்படையில், இந்த மாதத்திற்கு அக்ரஹயன (அக்ர = முதன்மை, அயன = பாதை), அகஹன என்னும் பெயர்களும் உண்டு. 
செüரமான கணக்குப்படி (சூரியனையும் சூரிய நகர்வுகளையும் அடிப்படையாகக் கொண்ட முறை), சூரியன் தனுர் ராசிக்குள் சஞ்சாரம் செய்யும் காலகட்டம் இது. ஆகவே, தனுர் மாசம் என்றழைக்கப்படுகிறது. தனு அல்லது தனுசு என்பது வில். வில் என்னும் பொருள் வரும்படியாக, இதற்கான வேறு சொற்களைக் கொண்டு, சாப மாசம், கார்முக மாசம், கோதண்ட மாசம் என்றெல்லாமும் மார்கழி வழங்கப் பெறுகிறது. 
இந்து சமய வழக்கங்களில், மார்கழிக்குத் தலையாய சிறப்பு உண்டு. கடவுளை வணங்குவதற்கான மிக முக்கிய மாதம் இது. சைவ மரபில், சிவப்பரம்பொருள் நடராஜப் பெருமானாக தரிசனம் தந்து பக்தர்களுக்கு முக்தி கொடுக்கும் ஆருத்ரா திருநாளும், வைணவ மரபில், வடக்கு வாசல் வழியாகத் திருமால் எழுந்தருளி அடியார்களுக்கு மோட்சம் அருளும் வைகுண்ட ஏகாதசித் திருநாளும், சாக்த மரபில், பூலோகக் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக ஆதி பராசக்தியானவள் அன்னபூரணியாக அவதரித்த திருநாளும் இந்த மாதத்தில்தாம் வருகின்றன. ஏதோவொரு வகையில், பாரத தேசம் முழுவதும் இது கடவுளுக்கான மாதம். 
இந்த மாதத்தில், அதிகாலை வேளைகளில் நாம சங்கீர்த்தன பஜனைகள் நடைபெறும். திருக்கோயில்களில், பகவானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். காலையிலும் மாலையிலும், ஆலயங்களிலோ மண்டபங்களிலோ பக்தர்கள் ஒன்றுகுழுமி, பக்திப் பனுவல்களைப் பாடுவார்கள். பெரும்பாலான விஷ்ணு கோயில்களில் அத்யயன உற்சவம் கொண்டாடப்பெறும். இப்படி எத்தனை வகைவகையான கொண்டாட்டங்கள் நடந்தாலும், வீடுகளில், இல்லங்களில் திருமணம், புதுமனைப் புகுவிழா, உபநயனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. அது மட்டுமில்லை; "ஏன் மார்கழியில் கல்யாணம் செய்யக்கூடாது' என்று யாராவது கேள்வி கேட்டால், "இது பீடை மாதம்' என்று வேறு விடை வரும். 
"மாதங்களில் நான் மார்கழி' என்று பகவானே சொன்ன மாதம், பீடை மாதமா? இருக்க முடியுமா?  முடியாதுதான். வழக்குப் பேச்சில், எத்தனையோ சொற்களின் உச்சரிப்புச் சிதைந்ததுபோல், இந்த மாதத்தின் சிறப்பு அடையாளமும் சிதைந்ததன் விளைவுதான், இப்படியொரு விபரீதம். இது பீத மாதம். "பீத' என்னும் வடமொழிச் சொல்லுக்கு "மஞ்சள்' என்று பொருள் (பீதாம்பரம் = மஞ்சள் வண்ண ஆடை).
மார்கழியில், அதுவரைக்கும் இருந்த மழையும் இருளும் குன்றி, குளிர் வந்துவிடும். இருந்தாலும், அடுத்து வரவிருக்கிற உத்தராயணத்திற்குக் கட்டியமாக, கொடிகளிலும் குறுஞ் செடிகளிலும் பூக்கள் பூக்கும். குறிப்பாக, மஞ்சள் வண்ண மலர்களைத் தருகிற தாவரங்கள் அதிகமாகப் பூக்கும். இதனால், மஞ்சள் வண்ணமே பிரதானமாகக் கண்ணுக்குப் புலப்படும். எனவே, பீத மாதம் என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில், "பீடை' மாதமும் ஆகிவிட்டது. 
ஆண்டுக்கு ஆறு பருவங்கள் உண்டல்லவா? இவற்றில் மார்கழியும் (மார்கசீர்ஷ மாதம்) தையும் (புஷ்ய மாதம்) சேர்ந்த காலத்திற்கு "ஹேமந்த ருது' என்று பெயர். "ஹேமந்தம்' என்பது தங்க வண்ணம். மஞ்சள் நிற மலர்களால், இயற்கையன்னை பொன்னாகவே தகதகக்கும் பொற்காலம்.   
கல்யாணம் போன்ற விசேஷங்கள் வேண்டாமென்று சொன்னதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் உள்ளன. மழை, இருள் ஆகியன அகன்று, அடுத்து வரும் தை மாதத்தில் அறுவடை வேலைகள் தொடங்கும். பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர், கடவுளை வணங்கி வழிபடுவது நம்முடைய மரபு. அதற்கேற்றாற்போல், அறுவடைக்குப் பின்னர்தான் கையில் பணம் கிடைக்கும். திருமணம், புதுமனைப் புகுவிழா என்று செலவழிக்கிற சூழலும் மார்கழியில் இருக்காது.
அந்தக் காலத்து கிராம வாழ்க்கையில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மொத்த கிராமமும் பொறுப்பெடுத்து வேலை செய்யும். எல்லோரும் விசேஷம் நடக்கிற வீட்டில் குவிந்துவிட்டால், ஊர் பொதுவாக உள்ள கோயில் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். வெளியூரிலோ எட்டத்திலோ நடக்கிற விசேஷங்களுக்கு ஊர் விட்டு ஊர் சென்றுவிட்டால், அடுத்து வருகிற காலத்தில் முழு கவனத்தோடு வேலை செய்ய முடியாது. பயணக் களைப்பும் நோய்களும் கூடுதல் சிக்கல்களை உருவாக்கக்கூடும். 
எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்குப் போட்டனர் நம்முடைய முன்னோர். மொத்தம் பன்னிரண்டு மாதங்களில், ஒரு மாதம் முழுமையும் ஆண்டவனுக்கு ஒதுக்கிவிட்டால், மீதம் பதினொரு மாதங்களும் சரியாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து, அந்தவொரு மாதத்தில், தனிப்பட்ட விசேஷங்களின் சுயநலத்தை ஒதுக்கிவைத்து, பொது விசேஷங்களில் பொது நலத்தோடு பங்கெடுக்கச் சொன்னார்கள். 

இந்த மாதத்தில் விரதம் இருந்து, மனக் கட்டுப்பாடு கொண்டு, இறைவனை வழிபட்டு ஒழுக்கத்தை வளர்த்துக் கொண்டால், அந்தப் பயிற்சியே ஆண்டு முழுமைக்கும் சீலத்தையும் செழுமையையும் தருமல்லவா! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com