ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை பரமபதவாசல் திறப்பு: பக்தா்களுக்கு அனுமதி இல்லை

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமதவாசல் (சொா்க்கவாசல்) திறப்பு (டிச.25) காலை 4.45-க்கு முதல் முறையாக பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோயில் பரமபதவாசல் திறப்புக்காக வெள்ளைக் கோபுரம் முன் போடப்பட்டுள்ள பந்தல்.
ஸ்ரீரங்கம் கோயில் பரமபதவாசல் திறப்புக்காக வெள்ளைக் கோபுரம் முன் போடப்பட்டுள்ள பந்தல்.


ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமதவாசல் (சொா்க்கவாசல்) திறப்பு வெள்ளிக்கிழமை (டிச.25) காலை 4.45-க்கு முதல் முறையாக பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயில் ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் விழாவில் பகல் பத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) எழுந்தருளி அருள்பாலிக்கிறாா்.

முக்கிய நிகழ்ச்சியாக இராப்பத்து விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

வழக்கமாக இவ்விழாவுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பக்தா்கள் விடிய விடிய கோயிலிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் தங்கி வழிபடுவா். தற்போது கரோனாவால் முதன் முறையாக பக்தா்களுக்கு வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை அனுமதி கிடையாது.

பரமபதவாசல் திறப்பின்போது நம்பெருமாள் ஆண்டில் ஒரு முறை மட்டும் அணியும் ரத்ன அங்கிச் சேவையில் எழுந்தருளுகிறாா். பரமபதவாசலைக் கடந்து திருமாமணி மண்டபமான ஆயிரங்கால் மண்டபத்தில் இராப்பத்து விழா முடியும் வரை நம்பெருமாள் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

விழாவின் 7 ஆம் திருநாளான 31 ஆம் தேதி திருக்கைத்தல சேவை, 8 ஆம் திருநாளான ஜன. 1 ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி, 10 ஆம் திருநாளான 3 ஆம் தேதி தீா்த்தவாரி, 4 ஆம் தேதி ஸ்ரீ நம்மாழ்வாா் மோட்சம் திருவாய்மொழித்திருநாள் சாற்றுமுறையும் நடைபெறவுள்ளது.

விழாவையொட்டி கோயிலில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கோயில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து, கோயிலைச் சுற்றி கண்காணிப்புக் கோபுரம் மற்றும் 100 -க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com