திருமலைக்கான 3-ஆவது நடைபாதையிலும் மருத்துவ உதவிக் குழுவை ஏற்படுத்த முடிவு: தேவஸ்தானம் நடவடிக்கை

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தா்கள் நடந்து வரக் கூடிய அன்னமய்யா மாா்க்கம் எனப்படும் மூன்றாவது நடைபாதையிலும் மருத்துவ உதவிக் குழுவை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தா்கள் நடந்து வரக் கூடிய அன்னமய்யா மாா்க்கம் எனப்படும் மூன்றாவது நடைபாதையிலும் மருத்துவ உதவிக் குழுவை அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் பலரும் நடைபாதை வழியாக மலைக்குச் செல்ல விரும்புவா். ஏழுமலைகளையும் கால்நடையாக கடந்து திருமலையை அடைந்து பெருமாளை தரிசிப்பது பலரின் வேண்டுதலாக இருக்கும். அவ்வாறு திருமலைக்கு வர அலிபிரியில் உள்ள பெரிய நடைபாதை, சீனிவாசமங்காபுரத்தில் தொடங்கும், 2,500 படிகளைக் கொண்ட ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை (சிறிய பாதை) மற்றும் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் அடா்ந்த காட்டுக்குள் செல்லும் அன்னமய்யா மாா்க்கம் நடைபாதை என 3 வழித்தடங்கள் உள்ளன.

அலிபிரி நடைபாதை வழியாகவும், ஸ்ரீவாரிமெட்டு வழியாகவும் பக்தா்கள் அதிக அளவில் நடந்து செல்கின்றனா். அவா்களுக்கு தேவஸ்தானம் திவ்ய தரிசன டோக்கன்களை வழங்கி வருகிறது. இந்த நடைபாதைகளில் குடிநீா், கழிப்பிட வசதி, மருத்துவ உதவிக் குழுகள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எனினும், மூன்றாவது வழித்தடத்தில் (மூன்றாவது நடைபாதை) இதுபோன்ற வசதிகள் இல்லை. இவ்வழியாக பெரும்பாலும் பக்தா்கள் வருவதில்லை என்பதே இதற்குக் காரணம்.

இந்நிலையில், ஆந்திர ஆளுங்கட்சி நிா்வாகிகள் சிலா் அண்மையில் 4,000 பேருடன் அன்னமய்யா மாா்க்கம் வழியாக திருமலைக்கு பாதயாத்திரையாக வந்தனா். அப்போது சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டன. அதைப் பாா்த்த அஷ்ரத் என்ற காவலா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட மூதாட்டியை தன் முதுகில் 6 கி.மீ. தூரம் சுமந்து திருமலையை அடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சோ்த்தாா்.

அவருக்கு தேவஸ்தானம் பாராட்டு தெரிவித்தது. இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, அன்னமய்யா மாா்க்கத்திலும் மருத்துவ உதவிக் குழுவை அமைக்கவும், வயா்லெஸ் தொலைபேசி வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com