நெல்லையப்பர் கோயிலில் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெல்லையப்பர் கோயிலில் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத் திருவிழா, கடந்த ஜனவரி 30 -ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. சுவாமி-அம்பாளுக்கு தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இத் திருவிழாவின் ஒரு நிகழ்வாக, திருநெல்வேலி ஊரின் பெயர்க் காரணத்தை விளக்கும் "நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்' நிகழ்வு
 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. நண்பகலில் நெல்மணிகளை மேடையில் இட்டு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இரவில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
 இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறியது: திருநெல்வேலியில் வசித்து வந்த சிவபக்தரான "வேதபட்டர்' என்பவர் தினமும் வேணு வனத்தில் தங்கி சிவபூஜை செய்து அன்னதானமும் வழங்கி வந்தார். இதற்காக ஒருநாள் வீடு வீடாகச் சென்று சேகரித்த நெல்மணிகளை மூல லிங்கத்தின் சந்நிதி முன்பு வெயிலில் காயவைத்துவிட்டு தாமிரவருணி நதியில் நீராடச் சென்றபோது திடீரென மழை பெய்தது. மழையில் நெல்மணிகள் நனைந்துவிடுமே என்று எண்ணி வருந்திய வேதபட்டர், சிவபெருமானை வேண்டியபடியே அங்கு சென்று பார்த்தாராம். அப்போது நெல்மணிகளைச் சுற்றி வேலிபோல் காக்கப்பட்டு, நனையாமல் இருந்ததாம்.
 இதன்பின்பு "வேணுவனம்', "நெல்வேலி' என அழைக்கப்பட்டு வந்த இப்பகுதி "திரு' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி என்ற பெயர் தொடர்ந்து விளங்கி வருகிறது என்றனர்.
 தீர்த்தவாரி: தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்வாக இம் மாதம் 8 -ஆம் தேதி பிற்பகல் 12.30 மணியளவில் தைப்பூசத் தீர்த்தவாரி விழா, தாமிரவருணி நதியின் கரையோரம் உள்ள சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரவருணி, குங்குலிய கலய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திர தேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகள் கோயிலில் இருந்து எஸ்.என். நெடுஞ்சாலை, கீழ்பாலம் வழியாக தைப்பூச மண்டபத்துக்குச் செல்வார்கள். பின்பு தீர்த்தவாரி முடிந்ததும் மாலை 6 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு எஸ்.என். நெடுஞ்சாலை, பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதிகள் வழியாக கோயிலை வந்தடைவர்.
 இம் மாதம் 9 -ஆம் தேதி செளந்திர சபா மண்டபத்தில் வைத்து செளந்திர சபா ஸ்ரீநடராஜர் திருநடனக் காட்சி நடைபெறுகிறது. 10 -ஆம் தேதி எஸ்.என். நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள வெளித் தெப்பத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வலம் வருவார்.
 ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் ந.யக்ஞநாராயணன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com