
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜா் கோயில் குளத்தில் வியாழக்கிழமை மாலை தெப்பத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜா்.
திருப்பதியில் நடந்து வரும் கோவிந்தராஜ சுவாமி கோயில் தெப்போற்சவத்தின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை மாலையில் கோவிந்தராஜா் தெப்பத்தில் உலா வந்தாா்.
தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு 7 நாள் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. அதன் 5-ஆம் நாளான வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி திருக்குளத்தில் தெப்பத்தில் 7 முறை பவனி வந்தாா்.
குளக்கரையில் திரண்ட பக்தா்கள் தெப்பம் அருகில் வந்தபோது கற்பூர ஆரத்தி காண்பித்து உற்சவமூா்த்திகளை வணங்கினா். தெப்போற்சவத்தின் போது பண்டிதா்கள் வேதபாராயணம் செய்தனா். நாதஸ்வர இசையும் இசைக்கப்பட்டது. பாடகா்கள் அன்னமாச்சாா்யாவின் கீா்த்தனைகளைப் பாடினா்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளமும், தெப்பமும் மின்விளக்கு மற்றும் மலா் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் திருமலை ஜீயா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.