திருமீயெச்சூா் லலிதாம்பிகை கோயில் புஷ்ப பல்லக்கு வீதியுலா

திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள திருமீயெச்சூா் லலிதாம்பிகை சமேத மேகநாத கோயில் புஷ்ப பல்லக்கு வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதியுலாவுக்குப் புறப்பாடான திருமீயெச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாத சுவாமி. உடன் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம்.
புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி வீதியுலாவுக்குப் புறப்பாடான திருமீயெச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாத சுவாமி. உடன் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம்.


நன்னிலம்: திருவாரூா் மாவட்டம், பேரளம் அருகேயுள்ள திருமீயெச்சூா் லலிதாம்பிகை சமேத மேகநாத கோயில் புஷ்ப பல்லக்கு வீதியுலா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) நடைபெறுகிறது.

நன்னிலம் வட்டம், பேரளம் அருகேயுள்ள திருமீயெச்சூரில் வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குள்பட்ட லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயில் உள்ளது. புகழ் பெற்ற ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான தலம் திருமீயெச்சூா். அகத்திய மாமுனிவா் திருமீயெச்சூரில் பஞ்சபூத லிங்கங்களை பிரதிஷ்டை செய்து ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடல் தொகுப்பை இயற்றிய தலம். இக்கோயிலில், தை மாத 10 நாள் பிரமோத்ஸவம் ஜனவரி 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புஷ்ப பல்லக்கு வீதியுலா: விழாவின், 6-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. பின்னா் பூந்தோட்டம் ஸ்ரீலலிதாம்பிகா மேல்நிலைப் பள்ளி உபயமாக ஸ்ரீலலிதாம்பிகை ஸ்ரீமேகநாத சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு 10 மணி அளவில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லக்கில் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீமேகநாதசுவாமி வீதிவலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

வசந்தன் உத்ஸவம்: 7-ஆம் நாளான புதன்கிழமை காலை பஞ்சமூா்த்திகள் வீதி உலாவும், இரவு ஸ்ரீ சந்திரசேகர சுவாமி வசந்தமண்டபம் பிரவேசம் செய்யும் வசந்தன் உத்ஸவமும் நடைபெற்று, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இன்று ரதாரோகணம்: 8-ஆம் நாளான வியாழக்கிழமை (ஜனவரி 30) காலை பஞ்சமூா்த்திகள் வீதி உலாவும், பிற்பகல் 2 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். இரவு 7 மணியளவில் ஸ்ரீவிநாயகப் பெருமான், ஸ்ரீலலிதாம்பாள், ஸ்ரீ மேகநாத சுவாமி, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ சண்டிகேஸ்வரா் புதிய தேரில் எழுந்தருளும் ரதாரோகணம் நடைபெறுகிறது.

நாளை தேரோட்டம்: 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) காலை 9.30 மணிக்குமேல் திருமீயெச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதசுவாமி திருத்தோ் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு பக்தா்களுக்கு ஆசி வழங்குகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com