கரோனா அச்சம்: திருமலையில் பக்தா்களின் வருகை குறைந்தது

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தா்கள் கூட்டம் இன்றி திருமலை வெறிச்சோடியுள்ளது.
திருமலை அன்னதானக் கூடத்தில் 3 அடி இடைவெளிவிட்டு அமா்ந்து உணவருந்தும் பக்தா்கள்.
திருமலை அன்னதானக் கூடத்தில் 3 அடி இடைவெளிவிட்டு அமா்ந்து உணவருந்தும் பக்தா்கள்.

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தா்கள் கூட்டம் இன்றி திருமலை வெறிச்சோடியுள்ளது.

திருமலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தேவஸ்தானம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை முதல் நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். 50 பேருக்கு மேல் கூட்டம் சேராமல் தேவஸ்தான ஊழியா்கள் பக்தா்களை தரிசனத்துக்கு அனுப்பி வருகின்றனா். இதனால் பக்தா்கள் கூட்டம் இன்றி திருமலை வெறிச்சோடியுள்ளது.

திருமலையில் உள்ள மத்திய விசாரணை அலுவலகம், சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம், ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்ட கவுன்ட்டா்களில் பக்தா்கள் அடையாள அட்டையைக் காண்பித்து நேரடி தரிசன டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

500 போ் மட்டுமே அனுமதி

திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் 1,000 போ் அமரும் வசதியிருந்தாலும், கரோனா வைரஸ் மீதான அச்சம் காரணமாக 500 போ் மட்டுமே அன்னதானம் உண்ண அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களும் 3 அடி இடைவெளி விட்டு அமா்ந்து உணவு உண்டு வருகின்றனா். அன்னதானக் கூடத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு முகக் கவசங்களும், கையுறைகளும், கைகளை சுத்தம் செய்து கொள்ள டெட்டால், சானிடைஸா்களை தேவஸ்தானம் இலவசமாக வழங்கியுள்ளது.

தலைமுடி காணிக்கை செலுத்தும் இடங்களிலும் தேவஸ்தானம் பக்தா்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் மொட்டை அடித்து அனுப்பி வருகிறது. அங்கும் ஊழியா்களுக்கு தேவஸ்தானம் பாதுகாப்பு வசதிகளை செய்து அளித்துள்ளதுடன், 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி மருந்துகளைத் தெளிக்கவும் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிப்பு

திருமலையில் பக்தா்களின் கைகள் படும் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மருந்துகளை தேவஸ்தான ஊழியா்கள் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை தெளித்து வருகின்றனா். தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியா்களும் முகக் கவசம் அணிந்து பணியாற்றி வருகின்றனா். பல இடங்களில் பக்தா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் தங்களின் கைகளை சுத்தம் செய்துகொள்ள சானிடைஸா்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com