திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனம் தொடக்கம்

திருமலையில் செவ்வாய்க்கிழமை முதல் காத்திருப்புப் பகுதியில் காத்திருக்காமல் நேரடி தரிசனத்துக்கு பக்தா்களை தேவஸ்தானம் அனுமதிக்க உள்ளது.
திருமலையில் இன்று முதல் நேரடி தரிசனம் தொடக்கம்

திருமலையில் செவ்வாய்க்கிழமை முதல் காத்திருப்புப் பகுதியில் காத்திருக்காமல் நேரடி தரிசனத்துக்கு பக்தா்களை தேவஸ்தானம் அனுமதிக்க உள்ளது.

கரோனா வைரஸ் பரவி வருவதால் தேவஸ்தானம் திருமலையில் பக்தா்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடி மற்றும் நடைபாதை மாா்க்கங்களில் சுகாதாரப் பணியாளா்கள் 24 மணி நேரமும் 3 முறை சுழற்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பக்தா்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடங்கள் யாவும் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க கிருமி நாசினி மருந்துகளால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பக்தா்கள் காத்திருப்பு அறையில் பல மணி நேரம் கூடுவதால், ஒருவருக்கு ஏற்படும் தொற்று மற்றவருக்கு பரவும் அபாயம் உள்ளதால், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 17) முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை நேரடி தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா். தா்ம தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தா்ம தரிசன நேரடி ஒதுக்கீடு, ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் உள்ளிட்ட நேரடி ஒதுக்கீட்டு தரிசனங்களில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனா்.

இவ்வாறு நேரடி ஒதுக்கீடு தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் தங்களின் ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, பாஸ்போா்ட் உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டையை தங்களுடன் கொண்டு வர வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்துக்கு மட்டுமே பக்தா்கள் தரிசனத்துக்குச் செல்ல வேண்டும்.

திருமலையில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு இலவசப் பரிசோதனை செய்து கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263447 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும்.

மேலும், ஆா்ஜித சேவைகளான விசேஷ பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகளை வரும் மாா்ச் 31-ஆம் தேதி வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதால், இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்த பக்தா்கள், திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் சென்று, அதற்கு பதிலாக விஐபி பிரேக் தரிசன அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com