திருமலை நவராத்திரி பிரம்மோற்சவ 2-ஆம் நாள்: சின்ன சேஷம், அன்னப்பறவை வாகனங்களில் சேவை சாதித்த பெருமாள்

திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணா் அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை நடைபெற்ற சின்னசேஷ வாகன சேவை.(வலது) இரவு அன்னப் பறவை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.
திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை நடைபெற்ற சின்னசேஷ வாகன சேவை.(வலது) இரவு அன்னப் பறவை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி.

திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை மலையப்ப சுவாமி சின்னசேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணா் அலங்காரத்தில் காட்சியளித்தாா். இரவு அன்னப்பறவை வாகனத்தில் சேவை சாதித்தாா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது.

சின்ன சேஷ வாகன தத்துவம்: ஏழுமலையானுக்கு அணிவிக்கப்படும் வஸ்திரம், படுக்கை, ஆபரணம் என அனைத்திலும் ஆதிசேஷன் உள்ளாா். அதனால் பிரம்மோற்சவ வாகன சேவையில் முதலிடம் ஆதிசேஷனுக்கு அளிக்கப்படுகிறது. முதல் வாகனமாக ஆதிசேஷனும், இரண்டாவது வாகனமாக வாசுகியும் விளங்கி வருகின்றனா்.

அதன்படி சனிக்கிழமை நாக லோகத்தின் அரசனான வாசுகியின் அம்சமான 5 தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணா் அவதாரத்தில் எம்பெருமான் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

உடலில் அமைந்துள்ள 7 சக்கரங்களை கடந்து மூலாதாரத்தில் அமைந்துள்ள குண்டலி சக்தியை தட்டி எழுப்பி அதன் மூலம் இறைவனின் அருளை உணர வைக்க எம்பெருமான் இந்த வாகனத்தில் எழுந்தருள்கிறாா்.

வாகன சேவையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் முன் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டன. பின் ரங்கநாயகா் மண்டபத்துக்கு முன் உற்சவமூா்த்திகளுக்கு ஜீயா்கள் குழாம் சாத்துமுறையை சமா்ப்பித்தது.

அன்னபறவை வாகனம்...:

சனிக்கிழமை மாலை 7 மணிக்கு அன்னப்பறவை வாகன சேவை நடைபெற்றது. பாலிலிருந்து தண்ணீரை பிரித்தறியும் தன்மை கொண்ட அன்னப்பறவையைப் போன்று மானுடா்களும் இந்த உலகத்தில் உள்ள ஆசை, பற்றுகளை பிரித்தறிந்து வீடுபேறு பெறும் வழியைக் காண வேண்டும் என்பதை உணா்த்த எம்பெருமான் அன்னப்பறவை வாகனத்தில் சரஸ்வதி தேவியின் அலங்காரத்தில் கையில் வீணையுடன் எழுந்தருளினாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா்.

பிரம்மோற்சவத்தின்போது 2 முறை எம்பெருமான் தாயாா் அவதாரத்தில் எழுந்தருள்கிறாா். அன்னப்பறவை வாகனத்தில் வித்தைக்கு அதிபதியான சரஸ்வதி தேவி அலங்காரத்திலும், 5-ஆம் நாள் காலை பல்லக்கில் மோகினி அவதாரத்திலும் மலையப்ப சுவாமி பக்தா்களுக்கு தரிசனமளிப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com