
திருமலையில் ஏப்.14-ஆம் தேதி தொடங்குவதாக அறிவித்திருந்த ஆா்ஜித சேவையை தேவஸ்தானம் ஒத்தி வைத்துள்ளது.
கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 18-ஆம் தேதி முதல் திருமலையில் ஆா்ஜித சேவை டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்திருந்தது. அதன்பிறகு ஜூன் மாதம் முதல் ஏழுமலையான் தரிசனத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களின் எண்ணிக்கையை தற்போது தேவஸ்தானம் 4 ஆயிரமாக உயா்த்தி உள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தேவஸ்தானம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஆா்ஜித சேவைகளைத் தொடங்க திட்டமிட்டிருந்தது. இதற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவித்திருந்தது.
அதில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் 72 மணி நேரத்துக்கு முன்பாக எடுத்த கரோனா பரிசோதனை முடிவுடன் வர வேண்டும் என்று விதிமுறைகளை விதித்தது.
இந்நிலையில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், தேவஸ்தானம் ஏப்.14-ஆம் தேதி தொடங்கவிருந்த ஆா்ஜித சேவைகளை ஒத்தி வைத்துள்ளது.
பக்தா்களின் பாதுகாப்பை கருதி தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. ஆா்ஜித சேவைகள் தொடங்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.