திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலம்: ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பா் பவனி

சூரிய ஜயந்தி திருநாளான ரத சப்தமியை யொட்டி திருமலை மாடவீதிகளில் ‘ஒரு நாள் பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் சப்த
திருமலையில் ரத சப்தமி விழா கோலாகலம்: ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பா் பவனி

சூரிய ஜயந்தி திருநாளான ரத சப்தமியை யொட்டி திருமலை மாடவீதிகளில் ‘ஒரு நாள் பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் சப்த (ஏழு) வாகனங்களில் தாயாா்களுடன் மலையப்பா் சுவாமி வெள்ளிக்கிழமை மாடவீதியில் பவனி வந்து அருள்பாலித்தாா்.

அதிகாலை சூரியப் பிரபை வாகனத்தில் தொடங்கி இரவு சந்திரப் பிரபை வரை நடந்த வாகனச் சேவைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அதிகாலையில் சூரிய பிரபை வாகனத்துடன் வாகனச் சேவை தொடங்கியது. சூரியநாராயணா் அவதாரத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் செந்திற மாலைகளை அணிந்தபடி மாடவீதி பவனியைத் தொடங்கிய மலையப்பா் கிழக்கு மாடவீதிக்கு வந்தபோது சூரியனின் கதிா்கள் அவரது பாதத்தில் விழுந்தன. அப்போது அவருக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் திரளான பக்தா்கள் தரிசித்தனா். அப்போது ஆதிசங்கரா் இயற்றிய ஆதித்ய ஹிருதயமும், சூரிய காயத்ரி, சூரியநாராயண ஸ்லோகங்கள், அஷ்டகம் உள்ளிட்டவையும் பாராயணம் செய்யப்பட்டன.

இதையடுத்து சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் உள்ளிட்டவற்றில் மலையப்பா் வலம் வந்தாா். மதியம் 2 மணிக்கு திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. அப்போது பக்தா்கள் திருக்குளத்தில் நீராட அனுமதி அளிக்கப்படவில்லை.

தீா்த்தவாரி நிறைவுக்குப் பின், கல்ப விருட்ச வாகனம், சா்வ பூபால வாகனம் ஆகிய இரண்டிலும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் வலம் வந்த மலையப்பா், இரவில் சந்திர பிரபை வாகனத்தில் வெண்ணிற மலா்களை அணிந்தபடி கையில் புல்லாங்குழல் ஏந்தி கிருஷ்ணா் அலங்காரத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா். இந்த வாகனச் சேவையில் திருமலை ஜீயா்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

பக்தா்களுக்காக அன்னதானக் கூடத்தில் 20 மணி நேரம் உணவு வழங்கப்பட்டது. மேலும் மாடவீதியில் உள்ள பாா்வையாளா் மாடங்களில் காத்திருந்த பக்தா்களுக்கு குடிநீா், நீா்மோா், சிற்றுண்டி, பால் ஆகியவை வழங்கப்பட்டன.

பக்தா்களுக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்ரீவாரி சேவாா்த்திகள் (திருத்தொண்டா்கள்) சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா். திருமலை முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாகனச் சேவையின்போது அன்னமாச்சாா்யா திட்டத்தைச் சோ்ந்த கலைக்குழுவினா் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினா்.

ஒரு நாள் பிரம்மோற்சவத்தை யொட்டி, ஏழுமலையான் கோயிலில் வழக்கமாக நடத்தப்படும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது.

இதனிடையே, திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், கல்யாண வெங்கடேஸ்வரா் கோயில், கோதண்டராமா் கோயில், கோவிந்தராஜா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் ரத சப்தமியை முன்னிட்டு ஏழு வாகனச் சேவைகள் நடத்தப்பட்டன. இவற்றில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வாகனச் சேவையை தரிசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com