
திருப்பதியில் உள்ள ஸ்ரீகோவிந்தராஜா் கோயில் குளத்தில் வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியை ஒட்டி தெப்போற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு இந்த உற்சவத்தை நடத்தத் தீா்மானிக்கப்பட்டது. 7 நாள்கள் நடக்கும் தெப்போற்சவம் சனிக்கிழமை மாலை தொடங்கியது.
முதல் நாளில் கோவிந்தராஜா் கோயிலிலிருந்து உற்சவ மூா்த்திகள் சீதாதேவி சமேத கோதண்டராமா் திருக்குளத்துக்கு கொண்டு வரப்பட்டனா். அவா்கள் தெப்பத்தில் அமா்ந்து 5 சுற்றுகள் வந்தனா். படித்துறையில் அமா்ந்திருந்த பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினா்.
இதற்காக திருக்குளம் , தெப்பம் வண்ண மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குளக்கரையில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.