பணவரவு அதிகரிக்கப்போகிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள் (ஜன.8-14)

12 ராசிகளுக்குமான இந்த (08.01.21 - 14.01.21) வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்துள்ளார். 
weekly predictions
weekly predictions

12 ராசிகளுக்குமான இந்த (08.01.21 - 14.01.21) வாரப்பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் கணித்துள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் உற்சாகம் நிலவும். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி புத்திசாலித்தனத்துடன் செயல்படுங்கள். உங்கள் மீது பிறர் தொடர்ந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டியிருக்கும். போட்டிகளைச் சமாளித்து பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளின் தேவைகளுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். விளைச்சல் நன்றாக இருக்கும்.  

அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் யாவும் வெற்றிகரமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் குறையும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டுப் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும், பயணத்தைச் சற்றுத் தள்ளி போடுவது நல்லது. பெண்மணிகளுக்கு கணவரின் உடல்நிலையில் சற்று கவனம் தேவைப்படும். 

பயணங்களைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பீர்கள். மாணவமணிகள் சீரிய முயற்சி எடுத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 08, 11. 

சந்திராஷ்டமம்: 09, 10.

******

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

செய்தொழிலில் வாய்ப்புகள் வந்து குவியும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாகவே இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பணம் சரியான நேரத்தில் வந்து சேரும். வியாபாரிகள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நீங்கள் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் கால்நடைகளால் நல்ல லாபம் காண்பீர்கள். மகசூலும் அதிகமாகவே இருக்கும். 

அரசியல்வாதிகள் திட்டமிட்ட இலக்கை எட்ட கடுமையாக உழைப்பீர்கள். பெயரும், புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவார்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் அதிக வருவாய் கிடைக்கும்.

பெண்மணிகள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகத் திட்டமிடுவீர்கள். அவர்களுக்காக சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். மாணவமணிகள் ஞாபக சக்தி வளர அதிகாலையில் எழுந்து கவனம் சிதறாமல் படிக்கவும். சுவாசப் பயிற்சிகளையும் மேற்கொண்டு வரவும். 

பரிகாரம்: ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 08, 10. 

சந்திராஷ்டமம்: 11, 12, 13.

******

மிதுனம் (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும். பொருளாதார நிலைமை சற்று ஏற்ற இறக்கமாகவே காணப்படும். எடுத்த காரியங்களில் இழுபறி நிலைமை இருக்கும். உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். பயணங்கள் மேற்கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்கவும். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். திட்டமிட்டு செயல்பட்டால் வேலைப்பளு சற்று குறையும். வியாபாரிகள் கவனத்துடன் இருந்தால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். உங்கள் செயல்பாடுகளில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். விவசாயிகள் தங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். அதிக மகசூல் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணியாற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பயணங்களால் அனுகூலம் ஏற்படாது. தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சுமூகமாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் நினைத்த மதிப்பெண்களைப் பெற முடியும். அதிகாலையில் எழுந்து படிக்கவும்.  

பரிகாரம்: பார்வதி}பரமேஸ்வரரை வணங்கி வரவும். அனுகூலமான தினங்கள்: 09, 12. சந்திராஷ்டமம்: 14.

******

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

இனிமையாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள உகந்த நேரமிது. புதிய வீடு வாங்குவதற்கு அச்சாரம் போடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் பணவரவு உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். வியாபாரிகள் அவசியமானப் பொருள்களை மட்டும் கொள்முதல் செய்யவும்.  கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்த வேண்டாம்.விவசாயிகளுக்கு விளைச்சலில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். 

அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும். தொண்டர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினர் புதிய படைப்புகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். 

பெண்மணிகள் இல்லத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் பாடங்களை உடனுக்குடன் படித்து வந்தால் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். யோகா, பிராணாயாமம் மற்றும் உடற்பயிற்சியிலும் அக்கறை காட்டவும். 

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 08, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். உங்களின் நெடுநாளைய எண்ணம் ஒன்று நிறைவேறும். பெரியோர்களின் தொடர்பும், ஆன்மிக ஈடுபாடும் நன்மை பயக்கும். உங்கள் பெயரும், புகழும் உயரும்.  
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் சுமூகமாக பழகவும். உங்கள் வேலைகளைத் திட்டமிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பீர்கள். 

வியாபாரிகளைத் தேடி அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் வருவார்கள். வரவு}செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து வருமானம் பெருகும். கால்நடைகளாலும் நல்ல லாபம் உண்டாகும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். நீண்ட நாள்களாகத் தடைப்பட்டு வந்த செயல்கள் யாவும் வெற்றிகரமாக நிறைவேறும். கலைத்துறையினர் தங்கள் ரசிகர்களின் வளர்ச்சிக்காக உதவி செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 

பெண்மணிகளுக்கு பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் விளையாட்டுகளில் கவனமாக ஈடுபடவும். நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். 

பரிகாரம்: மஹாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 09, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

******
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். செய்தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் யாவும் வெற்றிகரமாகவே முடியும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். வியாபாரிகள் தங்கள் கூட்டாளிகளிடம் மனம் திறந்து பேசாதீர்கள். மற்றபடி எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி பால் வியாபாரம் செய்து லாபம் அடையலாம். ஓய்வின்றி உழைப்பீர்கள்.  

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு உற்சாகமளிக்கும். கடுமையானப் போட்டிகளுக்கு பிறகே புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
பெண்மணிகளுக்கு உற்றார் உறவினர்களிடம் பாசம் அதிகரிக்கும். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவமணிகள் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு பெரிய சாதனைகளுக்கு அடித்தளமிடுவீர்கள். அதேசமயம், கல்வியிலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். 

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 08, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

******

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் சிறு தொய்வு ஏற்படலாம். ஆனாலும் திட்டமிட்ட வேலைகளை முனைப்புடன் செய்து முடிப்பீர்கள். எதிலும் எச்சரிக்கை தேவை. தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைப்பளு குறையும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகள் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். கால்நடைகளால் செலவு உண்டாகும். ஆனாலும் சமாளித்து விடுவீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் சற்று கவனமாக நடந்து கொள்ளவும். புதிய பொறுப்புகள் தேடி வரும் காலகட்டமிது. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். சக கலைஞர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் செலவுகள் கூடும். மாணவமணிகள் வருங்காலக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளமிடுவீர்கள். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம்: வந்தவாசி அருகேயுள்ள இஞ்சிமேடு நரசிம்மரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

******

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதார நிலையில் எந்தக் குறையும் ஏற்படாது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். உங்கள் பேச்சில் கோபப்படாமல் நிதானப் போக்கைக் கையாளவும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிட்டும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமாக இருக்கும். குறித்த நேரத்தில் வேலைகளை முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதுப்புது சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். கால்நடைகளால் நல்ல லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும். கவனமாக இருக்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்கள் படைப்புகள் பாராட்டுகளைப் பெறும். 
பெண்மணிகள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

******
தனுசு(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

வருமானம் குறைவாக இருக்கும். எனவே, செலவுகள் செய்யும் போது எச்சரிக்கையாக இருக்கவும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். நண்பர்களுக்கு முன்ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். வேலைப்பளு சற்று அதிகமாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்துசேரும். மறைமுக போட்டிகளையும் சந்திக்க நேரிடும். விவசாயிகள் கடுமையாக முயற்சித்து முன்னேறுவீர்கள். கடின உழைப்பால் மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். 

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிறிய வேலையையும் சீரிய முறையில் முடித்துக் கொடுப்பீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவரின் வருமானம் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிலும் கவனமாகவே நடந்து கொள்ளவும். மாணவமணிகள் சக மாணவர்களிடம் சண்டை சச்சரவுகள் இன்றி சமாதானமாக நடந்து கொள்ளவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடலாம். 

பரிகாரம்: சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 12, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

******
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பெற்றோரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். தொழில் ரீதியாக சில பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் பயணம் செய்யவும். பணவரவு அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து லாபத்தை பெறலாம். மகசூல் நன்றாக இருக்கும். 

அரசியல்வாதிகள் யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் பெரிதும் உதவுவார்கள். கைநழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவரிடம் அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவமணிகள் விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் படிப்பில் அக்கறை தேவை. உங்களின் நீண்ட நாளைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

பரிகாரம்: இஞ்சிமேடு}பெரியமலை சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 09, 14. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

******

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். ஆனாலும் சில விரயங்கள் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் உடலிலும் புதிய உற்சாகம் பிறக்கும். அனைத்துச் செயல்களிலும் தனி முத்திரை பதிப்பீர்கள்.   

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் பேச்சுத் திறமையால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விடுவார்கள். புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் அதிகம் செலவு செய்து பயிரிடுவதைத் தவிர்க்கவும். இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் ஆதரவு அளிக்கும். உங்கள் பெயரும் புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் சில பிரச்னைகள் ஏற்பட்டு, பின்பு சரியாகும். பெண்மணிகள் கணவருடன் அனுசரணையாக நடந்து கொள்ளவும். மாணவமணிகள் பெற்றோர்}ஆசிரியர் சொற்படி நடக்கவும். வீணாகப் பொழுதைப் போக்காமல் படிப்பில் கவனம் செலுத்தவும்.  

பரிகாரம்: கால பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

******

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உற்றார் உறவினர்களிடம் உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். செய்தொழிலில் வளர்ச்சி ஏற்படும். நண்பர்களின் உதவியுடன் நீண்ட காலப் பிரச்னைகளை சமாளித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவில் குறைவிருக்காது. மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வியாபாரத்தைத் திறம்பட நடத்துவீர்கள். கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். விளைச்சல் பெருகும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்ப்பார்கள். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் யாவும் வெற்றிபெறும். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு பேச்சில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகளின் எதிர்காலத்துக்கான சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். கவனமாக இருக்கவும். யோகா, பிராணாயாமம் செய்யவும். 

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 09, 14. 

சந்திராஷ்டமம்: 08.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com