அசைவ பிரியர்களுக்குப் பிடிக்காத புரட்டாசி: என்ன காரணம்? 

புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவம் உட்கொள்ளக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியலோடு, ஆன்மிக காரணங்களும் உள்ளது.
அசைவ பிரியர்களுக்குப் பிடிக்காத புரட்டாசி: என்ன காரணம்? 

பொதுவாக நம் வீட்டுப் பெரியவர்கள் புரட்டாசி மாதத்திற்கு அசைவம் கூடாது என்று ஆணியடித்தாற் போல் சொல்லி விடுவார்கள். அசைவ பிரியர்களின் கதி அதோ கதி தான்....ஏன் சாப்பிடக்கூடாது...அப்படி என்னதான் காரணம்? வாங்க தெரிஞ்சிக்கலாம். 

மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படும் புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவம் உட்கொள்ளக்கூடாது என்று சொல்வதற்கு அறிவியலோடு, ஆன்மிக காரணங்களும் உள்ளது. 

மற்ற மாதங்களில் அசைவ உணவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, புரட்டாசியில் கொடுப்பதில்லை, ஏனென்றால், ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது என்பர். எனவே, அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருப்பது நல்லது என்கிறது ஜோதிட சாஸ்திரம். 

பொதுவாகவே புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி, மழைநீரை ஈர்த்து வெப்பத்தைக் குறைக்க ஆரம்பிக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சூட்டைக் கிளப்பிவிடும். 

இது வெயில் கால வெப்பத்தைக் காட்டிலும் மோசமானது கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் குறைக்கும். தேவையில்லாது வயிறு தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி சரிவரப் பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்க்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும்.

துளசியானது இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதற்காகவே, புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்தினர். நமது உடல் நலனுக்காக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விரதத்தை நாமும் கடைப்பிடித்து நமது உடலைப் பாதுகாப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com