நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாயையொட்டி, பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கினர்.
நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்று (பிப்.12)  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இன்று  பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து அரண்மனை சந்தன கருப்பு கோயிலில் சேர்ந்தனர்.

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகளுடன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக  அங்கு கூடியிருந்த பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: விரதத்தை தொடங்கிய பக்தர்கள்
செந்தில் பாலாஜி ராஜிநாமா: ஆளுநர் ஒப்புதல்

தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்புக் கட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். நேற்றிரவு சுமார் 9 மணிக்கு  அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரும் பிப். 16, 20, 23 ஆம் தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்ம, அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும்.

இந்த விழா நாள்களில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து மாவிளக்கு, கரும்பு தொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள். வரும் பிப்ரவரி 27ஆம் தேதி செவ்வாய்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிசட்டி எடுத்தல்,கழுகுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும்  நடைபெறும்.

தொடர்ந்து, மறுநாள்(பிப்28) காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோவிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோயில் பூசாரிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொதுசுகாதாரப் பணி, குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் காவல் துறையினரும் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com