திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்

விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாள்கள் கொண்டாடப்படும் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

முருகப் பெருமான் முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தர்பை, புல், மா இலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பங்குனி விழாவினை முன்னிட்டு முருகன், தெய்வானையோடு தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் தங்க குதிரை, அன்ன வாகனம், பூத வாகனம், தங்க மயில் வாகனம், வெள்ளி யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் 5ம் நாள் நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ம் தேதி கை பார நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 24ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவும் பௌர்ணமி சிறப்பு பூஜையும் நடைபெற்றும், 26-ம் தேதி இரவு 7 மணிக்கு சூரசம்காரம் லீலை 27-ம் தேதி இரவு 7 மணிக்கு முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 28-ம் தேதி மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியாவிடை முன்னிலையில் முருகப்பெருமான் தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ம் தேதி பெரிய தேரோட்டம் நடைபெறும். இதற்காக காலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் முருகப்பெருமான் தெய்வானையோடு எழுந்தருளி கிரி வீதி வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com