மலைமகள் அலைமகள் கலைமகள் அருளும் நவராத்திரி!

ஏனெனில் பெண்களால் தன்னை வெல்லமுடியாது என்ற இறுமாப்பு அவர்களை அப்படி கேட்க வைத்தது.
மலைமகள் அலைமகள் கலைமகள் அருளும் நவராத்திரி!
மலைமகள் அலைமகள் கலைமகள் அருளும் நவராத்திரி!

பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளிடம், இந்திரன் மற்றும் தேவர்கள், அஷ்டதிக்பாலர்களுடன் சென்று சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்களின் கொட்டத்தை அடக்க வேண்டினர். தாயுள்ளம் கொண்ட பெண்டிரைத்தவிர யாராலும் தன்னை கொல்லமுடியாத வரத்தினை அந்த அசுரர்கள் பெற்றிருந்தனர்; ஏனெனில் பெண்களால் தன்னை வெல்லமுடியாது என்ற இறுமாப்பு அவர்களை அப்படி கேட்க வைத்தது.

மும்மூர்த்திகள் அனைவரையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு; ஆதிசக்தியை வணங்கி அசுரர்களை சம்ஹாரம் செய்ய வேண்டினர். அன்னையும் அந்த அசுரர்களின் பலத்திற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள, அவர்களை வதம் செய்ய பூமிக்கு வந்தாள். மும்மூர்த்திகள் தங்களின் சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி அன்னைக்கு கொடுத்துவிட்டு சிலை ஆனார்கள். அதுபோன்று இந்திரனும், அஷ்டதிக்பாலர்களும் தங்களின் ஆயுதங்களை அன்னைக்கு அளித்துவிட்டு சிலையானார்கள். அம்பிகை தன் சக்திகளை ஒன்று திரட்டி ஒன்பது நாள்கள் கடும்விரதம் இருந்து பத்தாம் நாள் தசமியன்று சும்ப, நிசும்பர்களையும்; அவர்களது தளபதிகள் மது, கைடபன், ரக்தபீஜன் ஆகியோரையும் அழித்தொழித்து தர்மத்தை நிலை நாட்டினாள்.
 மனிதனின் தமஸ், ரஜஸ், சத்வ மூன்று குணங்களில் முதல் மூன்று நாள்கள் உக்ரமான துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாள்கள் மென்மையான லட்சுமிக்கும், கடைசி மூன்று நாள்கள் ஞானத்தின் வடிவான சரஸ்வதிக்கும் ஒதுக்கப்பட்டு இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

 இதில் முதல் மூன்று நாள்கள் துர்க்கையை, மகேஸ்வரி, கெளமாரி, வாராகியாகவும்; இடை மூன்று நாள்கள் லட்சுமி தேவியை, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும்; கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதி தேவியை, சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் வழிபடுகிறோம். இந்த ஒன்பது நாள்களிலும் பகலில் சிவபூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்யவேண்டுமென முறைப்படுத்தியுள்ளனர்.

 அந்த காலத்தில் போர்புரிய சில சட்ட தர்மங்கள் இருந்தன. பகலில் மட்டுமே யுத்தம் செய்வார்கள்; இரவில் அன்று நடந்தவற்றை அலசி ஆராய்ந்து மறுநாள் செய்வதற்கான ஆயத்த வேலைகளை செய்துவிட்டு; களைப்பு நீங்கி உற்சாகமடைய ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இதுபோன்று ஒன்பது இரவுகள் நடந்தவையே நவராத்திரி என நாம் கொண்டாடுகிறோம்.

 அயோத்தி மன்னன் ராமன் தான் முதன் முதலில் இந்த நவராத்திரி வைபவத்தை கொண்டாடினார். அதன் பின்னரே, சீதையிருக்குமிடம் தெரிந்ததாக ஒருசாரர் கூறுகின்றனர். வால்மீகி ராமாயணத்தில் ராமன், ராவணனை வெல்வதற்காக, புரட்டாசியில் வரும் விஜயதசமியன்று போருக்கு புறப்பட்டதாக கூறுகிறார். ஓராண்டு அஞ்சாதவாசம் முடிந்த அர்ஜுனன் மரத்தின் மீது கட்டிவைத்திருந்த ஆயுதங்களை இந்த விஜயதசமியன்று எடுத்து போர்நாதம் செய்தான் என்று மஹாபாரதம் கூறுகிறது.

 இந்த ஒன்பது நாள்களும் பராசக்தியானவள் கன்னிப்பெண் வடிவில் அவதரிக்கிறாள். பராசக்தி சண்டையிட்டபோது அனைவரும் பொம்மையைப்போல் சிலையாய் நின்றதை நினைவு கொள்ளும் வகையில் நாம் ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

 கொலுப்படியில் கீழிருந்து மேலாக முதல்படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகளும், இரண்டாம்படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்றவைகளும், மூன்றாம்படியில் மூன்றறிவு கொண்ட கறையான், எறும்பு போன்றவைகளும், நான்காம்படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு போன்றவைகளும், ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள், பறவைகளின் பொம்மைகளும்; ஆறாம் படியில் இறைவனால் கொடுக்கப்பட்ட சிந்திக்கும், சிரிக்கும் சக்தியை கொண்ட ஆறறிவு மனிதர்களின் பொம்மைகளும், ஏழாம் படியில் மனித நிலையிலிருந்து உயர்ந்த சித்தர்கள், ரிஷிகள், மகான்களின் உருவ பொம்மைகளும், எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்ரக நாயகர்கள், தேவதைகளின் உருவ பொம்மைகளும்; கடைசியானதும், உயர்ந்த நிலையில் உள்ளதுமான ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், மும்பெரும் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோரது பொம்மைகளையும் வைத்து இவர்களுக்கு நடுநாயகமாக ஆதிபராசக்தியின் பொம்மையை வைக்கவேண்டும். மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டுமென்று பொருள்பட இந்த ஒன்பது கொலுப்படியின் தத்துவம் அமைந்துள்ளது.

 சுரதா என்ற மன்னன் தனது நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அவனது நாட்டைப் பிடிக்க சிலர் சதி செய்தனர். இதை அறிந்த மன்னன், எதிரிகளை அழிப்பதற்காக, தன் குருவான சுதாமாவிடம் ஆலோசனைக் கேட்டான். அவரோ தேவி புராணத்தில் அம்பிகை கூறியிருப்பதை சுட்டிக்காட்டி, தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தை செய்து, நோன்பு இருந்து அன்னையை வழிபட்டால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும் என்று அருளினார். அதன்படி மன்னனும் செய்து காளிதேவியை வேண்டி வெற்றியடைந்தான் என வரலாறு கூறுகிறது. இதன்படி வங்காளத்தில் இந்த ஒன்பது நாள்களும் காளிமாதாவை வழிபடுகின்றனர்.

 இந்த நவராத்திரி வைபவம் அக்டோபர் 7ஆம் தேதி ஆரம்பித்து, 15 - ஆம் தேதி விஜயதசமியுடன் முடிவடைகிறது.

 - எஸ். எஸ். சீதாராமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com