சரஸ்வதி ஸ்தாபனம்: குழந்தைகள் படிப்பில் சிறக்க நவராத்திரியில் சரஸ்வதியை வரவேற்போம்!

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாள்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 21ம் தேதி (07/10/2021)  ஆரம்பமாகிறது. 
குழந்தைகள் படிப்பில் சிறக்க நவராத்திரியில் சரஸ்வதியை வரவேற்போம்!
குழந்தைகள் படிப்பில் சிறக்க நவராத்திரியில் சரஸ்வதியை வரவேற்போம்!

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாள்கள் அன்னை பராசக்தியை வீடுகளிலும், ஆலயங்களிலும் பூஜை செய்து வழிபடும் சாரதா நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 21ம் தேதி (07/10/2021)  ஆரம்பமாகிறது. 

தக்ஷிணாயன புண்ய காலத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், புரட்டாசி மாதத்தில்  கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம்  தேவர்களுக்கு இராக்காலமாகும்.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் சாரதா நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர். நாளை சாரதா நவராத்திரியின் ஏழாம் நாள் முதல் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்குறிய நாட்களாகும். அதனை முன்னிட்டு நாளை சனிக்கிழமை (5/10/2019) சரஸ்வதி ஸ்தாபன தினமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் வரும் மூல நக்ஷத்திரத்தில் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்வது விஷேஷமாகும். 

நவராத்திரி பண்டிகை நாளில் ஒன்பது நாளும் கொலு வைத்து பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் கொலு வைத்து சரஸ்வதியை ஆவாஹனம் செய்து,  ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை, விஜயதசமி நாளில் வித்யாரம்ப பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை நாளாகும்.

நவராத்திரி கொண்டாட்டம்:
நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்களான மஹா சப்தமி, துர்காஷ்டமி எனப்படும் மஹா அஷ்டமி மற்றும் விஜய தசமி எனப்படும் மஹா நவமி ஆகிய மூன்று நாட்களும் சரஸ்வதி தேவிக்கு உரியன. இந்த நாட்களில் தமிழகத்திலுள்ள எல்லா சரஸ்வதி தேவி கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

கூத்தனூர் சரஸ்வதி கோயில்,வேதாரண்யத்தில் வீணையில்லாத சரஸ்வதி, கண்டியூர், உத்திர மேரூர், காஞ்சிபுரம் காமாட்சி, மதுரை மீனாட்சி, லால்குடி, தஞ்சை பெரிய கோயில் கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூந்துருத்தி, போளூர், நாகூர், சோமநாதபுரம் கேசவர், ஹளபேடு ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கூத்தனூரில் அம்மனின் பாதங்களில் பகதர்கள் மலரிட்டு வணங்கி அருளைப்பெற ஏதுவாக சரஸ்வதி பூஜையன்று அம்மனின் கால்கள் அர்த்த மண்டபம் வரை நீட்டி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றாள். 

சரஸ்வதி ஸ்தாபனம்:
நவராத்திரி தினங்களில் வரும் மூல நட்சத்திரமே சரஸ்வதியின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சரஸ்வதியின் அவதார தினம் என்பதால் சரஸ்வதி தேவியை ஆவாஹனம் செய்து பூஜிப்பது வழக்கம். அதற்கு அடுத்த நாள்தான் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜையும் வருகிறது.  வித்யைகளுக்கு அதிபதியாகிய சரஸ்வதி தேவியை பூஜை, ஜபம், பாராயணம் ஆகியவற்றால் ஆராதித்து நன்மையடைய வேண்டிய நாள் சரஸ்வதீ பூஜை. 

" மூலேன ஆவஹயேத் தேவீம் ச்ரவணேந விஸர்ஜயேத்" 

என்பதாக மூலா நக்ஷத்திரத்தன்று பூஜையில் புத்தகங்கள், வாத்தியங்கள், செய்யும் தொழிலுக்கான உபகரணங்கள் சரஸ்வதி பிரதிமை போன்றவற்றை பூஜை செய்யுமிடத்தில் ஓர் பீடம்/பலகையில் வைத்து பூஜிக்க வேண்டும். இவ்வாறு மூலா நக்ஷத்திரத்தில் சரஸ்வதி ஆவாஹனம் செய்ய இயலாதவர்கள், நவமியன்று விரிவாக பூஜை செய்து, மறுநாள் தசமியன்று புனர்பூஜை செய்து முடிக்க வேண்டும். சரஸ்வதீக்கான இந்த விசேஷ நவமியை மஹா-நவமி என்று கூறப்படுகிறது.

நவராத்திரியின் ஏழாம் நாளாகிய சரஸ்வதி சப்தமி எனப்படும் மஹா சப்தமியில்  சரஸ்வதி தேவிக்குரிய பூஜா மத்திரங்களில் மிக அற்புத சக்திமிக்கதாகவுள்ள வாக்வாஹினிக்குரிய சுலோகங்களை பிலகரி இராகத்தில் பாடி எலுமிச்சம்பழம் சாதம் பிரசாரமாக படைத்து பழங்களில் பேரீச்சையும் புஷ்பங்களில் தாழம்பூவும் பத்திரங்களில் தும்மை இலைகளாலும் அர்சித்து வணங்க நல்ல கல்வி ஞானம் வாக்கு சித்தம், தெளிவு என்பன உண்டாகி ஒரு பூரணத்துவம் மிக்க மனிதராக பிரகாசிக்க முடியும்.

பாற்கடலில் வெண் தாமரையோடும் வேதச் சுவடிகளோடும் தோன்றிய கலைமகளை பிரம்மனே முதலில் பூஜித்து தனக்கு இணையாக்கிக்கொண்டார் என புராணங்கள் கூறுகின்றன. கல்வி, கலைகளின் நாயகியான சரஸ்வதியின் பெருமைகளை பலவாறு கூறுகிறது சரஸ்வதி மகாத்மியம் என்ற நூல். அஞ்ஞான இருளை நீக்கும் இந்த தேவி, எட்டு வடிவங்கள் கொண்டு அன்பர்களை காக்கிறாள் என்று தாரா பூஜை என்ற சாஸ்திரம் தெரிவிக்கிறது. வாகீஸ்வரி, சித்ரேஸ்வதி, துளஜா என்ற சியாமளா, கீர்த்தீஸ்வரி, நீல சரஸ்வதி, கினிசரஸ்வதி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கடசரஸ்வதி என எட்டு சரஸ்வதி வடிவங்கள் எட்டுவித குணங்களை அளிப்பதாக தெரிவிக்கிறது. 

கல்வி கடவுள் சரஸ்வதி:
கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவியின் மகிமையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரம்மனின் துணைவியாக இருப்பவள் சரஸ்வதி தான்.

சரஸ் என்றால், நீர் மற்றும் ஒளி ஆகியவற்றை தடையின்றி வழங்குபவள் என்று பொருள். கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம்.

ஆயுத பூஜை:
ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அறுபத்து நான்கு கலைகள்:
கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. கலைமகள் குறித்து கம்பர் பாடிய பாடலான

"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
உருப்பளிங்கு போல்வாள் என" உள்ளத்தினுள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்"

என்றவாறு கலைமகள் வணக்க பாடலை பாடியுள்ளார். இதன் படி பார்க்கும் போது ஆயகலைகள் அறுபத்து நான்கு என்பதும். அதற்குரியவளான சரஸ்வதி தேவியை வணங்கிட அவை நமக்கு கிட்டிடும் என்பதும் புலனாகிறது.

சரஸ்வதிக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமான பெயர்கள். கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.

ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம்:
தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்ரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். மேலும் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது.  பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல்  தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையாகவும் உண்டாகும். 

கல்வி தரும் பிற யோகங்கள்:

பத்ர யோகம் 
வித்யாகாரகன், கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு  வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும்.  வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு  அமையும். 

புத ஆதித்ய யோகம்:
ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது.

இந்த சரஸ்வதி பூஜை நன்னாளில் கல்வி கடவுளான சரஸ்வதியை வணங்கி சரஸ்வதி யோகத்தை பெற்று கலை பல கற்று புகழுடன் விளங்குவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com