Friday, July 10 2020 20:38 PM

அறிமுகம்

ஆசிரியர் குறிப்பு

மாநிலங்களவைப் பாராளுமன்ற உறுப்பினரான ஜெயராம் ரமேஷ் 2006-2014 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட  காலகட்டத்தில் கிராமப்புற வளர்ச்சி, குடி நீர் மற்றும் சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் காடுகள்,  எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய முக்கியத் துறைகளில் அமைச்சராகப் பணிபுரிந்துள்ளார். சிறப்பாக விற்பனையாகி வரும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் - பழைய வரலாறும், புதிய புவியியலும்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்தல் (2016), சரிவிலிருந்து திரும்புதல்:  இந்தியாவின் 1991ஆம் ஆண்டின் கதை (2015),  நீதிக்காகச் சட்டம் இயற்றுதல்: 2013 - நிலம் கையகப் படுத்துதல் சட்டம் (2015), பசுமையின் அறிகுறிகள்: இந்தியாவில் சூழலியல், வளர்ச்சி, ஜனநாயகம் (2015), சீனிந்தியா தெளிவான புரிதல்: சீனா இந்தியா குறித்த ஆழ்ந்த சிந்தனை (2015), கவுடில்யர் இன்று: உலகமயமாகிவரும் இந்தியா பற்றி ஜெயராம் ரமேஷ் (2002) ஆகிய புத்தகங்களும் அடங்கும். 

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

இயற்பெயர் மு.கா. முகம்மது அலி. கடையநல்லூரில் பிறந்தவர். தாயார்: நாகூர் மீறாள். தந்தை: காதர் நாகூர். பெங்களூர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணி. பணி ஓய்விற்குப் பின்னர் கடையநல்லூரில் வசிக்கிறார். ‘முடவன் குட்டி’ என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை எப்போதாவது எழுதுவதுண்டு. அவை திண்ணை, சமரசம் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. வாசிப்பதில் ஆர்வம் அதிகம்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

இயற்பெயர் டாக்டர் சி.எஸ். லக்ஷ்மி. வரலாற்றாசிரியர்; புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நாற்பது ஆண்டுகளாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். பெண் எழுத்தாளர்கள், பெண் இசைக் கலைஞர்கள், பெண் நடனக் கலைஞர்கள் குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகள் The Face Behind the Mask, The Singer and the Song, Mirrors and Gesture என்னும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

சிறுகதைத் தொகுதிகள் ‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (1988), ‘காட்டில் ஒரு மான்’ (2000), ‘வற்றும் ஏரியின் மீன்கள்’ (2007), ‘ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ (2013), ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ (2014) ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ (2019), ‘ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்’ (2019). இவரின் கதைகள் ஆங்கிலத்தில் A Purple Sea, In a Forest, A Deer, Fish in a Dwindling Lake, A Night With a Black Spider, A Meeting On the Andheri Over Bridge என ஐந்து தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரோம் ஷர்மிலாவின் Fragrance of Peace கவிதைத் தொகுப்பைத் தமிழில் ‘அமைதியின் நறுமணம்’ (2010) என மொழிபெயர்த்திருக்கிறார். விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் விருது (2005), டொரான்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது (2008), தமிழக அரசின் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி (2011), சென்னைப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்தில் உன்னதத்திற்கான விருது (2011) முதலானவற்றைப் பெற்றிருக்கிறார். SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டுவருகிறார்.

Blurb

ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப்பில் எடுத்துக்கொள்ளப் படாத ஒன்று. லாட்வியாவைப் பொருத்தவரை நாஸிகளோடு உடன்போன நாடு என்றே அது அறியப்படுகிறது. ஸான்ட்ரா கால்னியடேயின் ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன்...’ நூல் ரஷ்யக் கம்யூனிஸ அரசு லாட்வியாவை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான லாட்விய யூதர்களையும் மற்ற லாட்வியர்களையும் கொன்று, ஆயிரக்கணக்கானவர்களை ஸைபீரியாவுக்கு நாடுகடத்திய லாட்விய வரலாற்றுடன் ஸ்டாலின் என்ற கொடுங்கோலனின் ஆட்சி முறையையும் அதில் சிக்குண்டு அலைக்கழிக்கப்பட்டக் குடும்பம் ஒன்றின் வரலாற்றையும் நினைவு களையும் கூறுவது. கால்நடைகளுக்கான சரக்கு வண்டிப் பெட்டிகளில் ஏற்றப்பட்டு ஸைபீரியாவின் கடும் பனியில் வாழ்ந்தும் இறந்தும் போன குடும்பத்தின் உண்மை வரலாறு. பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டக் குழந்தைகள், பிரிக்கப்பட்டக் காதலர்கள், தந்தை ஒரு புறமும் தாயும் குழந்தைகளும் ஒரு புறமும் மீண்டும் சந்திக்கவே முடியாதபடி பிரிக்கப்பட்ட அவலம், சிறை முகாம்களில் நோயால் பீடிக்கப்பட்டு ரத்தம் கக்கி உயிர்விட்டவர்களின் சோகம், பட்டினியிலிருந்து மீள எலிகளையும் இறந்த மிருகங்களையும் புல்லையும் மரப்பட்டைகளையும் புசித்து வாழ்ந்த குலாக் என்னும் கொடுமை இவற்றைக் கூறும் நூல் இது.

ஆசிரியர் குறிப்பு

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். கிராமங்களில் சிதறிக் கிடக்கும் பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டைச் சேகரித்து ஆராய்வது இவரது பணி. இவர் பதிப்பித்ததும் எழுதியதுமான நூல்கள் எண்பத்தி மூன்று. தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருதை ‘தென்னிந்தியத் தோல்பாவைக் கூத்து’ (2003), ‘தென்குமரியின் கதை’ (2004) நூல்களுக்காக இருமுறை பெற்றிருக்கிறார்.

இவரது முக்கியமான நூல்கள், ‘நாட்டார் நிகழ்த்துக் கலைக்களஞ்சியம்’ (2001), ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம்’ (2003), ‘ஆதிகேசவப் பெருமாள் ஆலயம்’ (2006), ‘தாணுமாலயன் ஆலயம்’ (2008), ‘இராமன் எத்தனை ராமனடி’ (2010), ‘வயல்காட்டு இசக்கி’ (2013), ‘முதலியார் ஓலைகள்’ (2016), ‘சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்’ (2018) ‘தமிழறிஞர்கள்’ (2018), ‘தமிழர் பண்பாடு’ (2018) ஆகியன.

Blurb

தமிழக நாட்டார் வழக்காற்றியல் செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஆய்வாளரின் அனுபவப் பதிவுகளும் ஆய்வும் அடங்கியது இந்நூல். பண்பாட்டில்

மேல் கீழ் என்பதில்லை; இப்படிப் பகுப்பதற்கான விதிமுறைகள் பிறப்பு, பணம், செல்வாக்குக் காரணமாக உருவாயின. மரபில் தொடரும் விழுமம் சாதி தாண்டி இருப்பதுண்டு. இன்றைய புரட்சிகரமான எண்ணங்கள் பழைய பண்பாட்டிலும் உண்டு. எழுத்துவடிவ வரலாற்றுச் சான்றுகளுக்கு மாறான வாய்மொழிச் சான்றுகள் பெருமளவில் தொகுக்கப்படவில்லை. இப்படிப் பல செய்திகள் அடங்கியது இந்த நூல்.

அ.கா. பெருமாள் எழுதிய ‘வயல்காட்டு இசக்கி’

நூலின் தொடர்ச்சி.

தெ.வே. ஜெகதீசன்

ஆசிரியர் குறிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் வசித்துவருகிறார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்; வரலாற்றிலும் இலக்கிய வாசிப்பிலும் அதீத நாட்டமுள்ளவர்.

‘கரையும் தார்மீக எல்லைகள்’ கட்டுரைத் தொகுப்பு இவரது முதல் நூல். சிங்கைத் தமிழ்ச் சமூகம் இவரது ஆய்வுநூல்.

Blurb

சிங்கப்பூரின் பத்திரிகை, புனைவுகள் ஊடாகச் சிங்கை மக்களின் நேற்றையதும் இன்றையதுமான சமூக வாழ்க்கையை ஆய்வின் வழிக் கண்டு தெளியும் கட்டுரை நூல் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’.

ஜப்பான் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டுப் பணிப் பெண்கள், பாலியல் விழுமியங்கள், குற்றங்கள், தண்டனைகள், தொன்மங்கள் ஆகியன சமகாலச் சிங்கைப் புனைவுகளில் கையாளப்பட்டிருக்கும் தன்மையைச் சுவாரஸ்யமான நடையில் வெளிப்படுத்துகிறது இந்நூல்.

நூலாசிரியரின் பரந்துபட்ட அதே சமயம் ஆழமான வாசிப்பு, நுட்பமான பார்வை, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் விளைவால் சொற்களில் உறுதி, கருத்தில் தெளிவு கூடுகிறது.

சிங்கப்பூர் என்றதும் தமிழ்நாட்டார் மனத்தில் எழும்பும் ‘பழைய இலக்கிய மகாத்மியங்களும் வியாக்கியானங்களும்’ என்ற பழஞ்சித்திரத்தைக் கலைக்கிறது இக்கட்டுரை நூல். பொருளில் நவீனம், பார்வையில் நவீனம், நடையில் நவீனம் என நூல் முற்றிலும் நவீன படைப்பு. ஆய்வுத் திறத்தால்

க. கைலாசபதியின் ‘அடியும் முடியும்’ நூலை நினைவூட்டும் ஆய்வுலகின் புதிய வெளிச்சம் ‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்’.

ஆசிரியர் குறிப்பு

லால்குடியில் பிறந்து தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில்  பள்ளிப்  படிப்பு; இளநிலை வணிகவியல் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை தேடி வடக்குக்கு இடப்பெயர்வு. குஜராத், மகாராஷ்டிரம், சில அயல் நாடுகள் என்று பல இடங்களில் பல நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு, கடந்த ஏழு வருடங்களாக ஒரு பன்னாட்டு உணவு நிறுவனத்தில் விற்பனைப் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார். 2011இலிருந்து வலைதளத்திலும் இணையப் பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதிவருகிறார். பௌத்தம், வரலாற்று நூல்களை வாசிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். இவரது சிறுகதைத் தொகுப்பு ‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோவில்’ (2016).

மனைவி: ஹேமா; புதல்விகள்: பூஜா, ஷ்வேதா ஆகியோருடன் தில்லியில் வசிக்கிறார்.

Blurb

சமத்துவத்தை முன்மொழியும் பௌத்தம் ஒரு பெருங்கடல். தமிழ், பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம், சீனம், ஜப்பான், திபெத், கொரியன், சிங்களம், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட உலக மொழிகளில் பௌத்தம் பற்றிய கோடிக்கணக்கான நூல்கள் உள்ளன. இவை அனைத்தையும், எந்தத் தனிமனிதராலும் அவரது வாழ்நாளுக்குள் முழுவதுமாகக் கற்றறிந்துவிட முடியாது. எனவே பௌத்த நூல்களில் சேகரமாகியிருக்கும் அறிவுச் செல்வத்தைத் தொகுத்தளிக்கும் நூல்களுக்கு, ஒரு சமகாலத் தேவையும் நியாயமும் எப்போதும் இருக்கவே செய்கிறது. இதை பௌத்த ஞானப் பிழிவாக இந்நூலைத் தத்துவ எளிமையுடன் கூடிய நவீன மொழியில் படைத்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன். நம் பௌத்த அறிவு மேலும் விரிய உதவுவதுடன், வாசிப்பின் மகிழ்வையும் இந்நூல் தூண்டிவிடுகிறது.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

புதுவைப் பல்கலைக்கழக முன்னாள் ஃபிரெஞ்சுத் துறைத் தலைவர், வாழ்வியல் புலத் தலைவர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தகைசால் அறிஞர். ஃபிரெஞ்சு அரசின் ஷெவாலியே, ஒஃபீசியே, கொமாந்தர் ஆகிய விருதுகளையும் ரொமேன் ரொலான் விருதையும் பெற்றவர். ஃபிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் பல மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறார்.

Blurb

பஷார் அல்-ஆசாத்  அரசுக்கு   எதிராக  டமாஸ்கஸின் புறநகர் தராயா கிளர்ச்சியில்  ஈடுபட்டபோது அது கடும்  முற்றுகைக்கு ஆளானது. முற்றுகை நீடித்த நான்கு ஆண்டுகள், அங்கு நரக வாழ்க்கைதான். பீப்பாய் குண்டு வெடிப்புகள், இரசாயன வாயு தாக்குதல்கள்  போன்ற கொடுமைகளைத்  தராயா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. வறுமை, பசி, பட்டினி ஆகியவை தலைவிரித்தாடின. பஷார் அல்-ஆசாத்தின்  அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் போது, சுமார் நாற்பது இளம் புரட்சியாளர்கள் விசித்திரமான சபதமொன்றை எடுத்துக் கொண்டனர். தகர்த்தப்பட்ட வீடுகளின் இடிபாடுகளுக்கும் கீழ் ஆயிரக்கணக்கான நூல்கள் சிதறிக்கிடப்பதையறிந்து, அவற்றைத் தோண்டியெடுத்து  ஊரின் நிலத்தடிக்குக் கீழ் ஒரு நூலகம் அமைக்கத் தீர்மானித்தனர்.

புத்தகங்களை  ஆயுதங்களாகக் கொண்டு   எதிர்ப்பதென்பது ஓர் உருவகம்தான். எந்த ஓர் அரசியல் ஆதிக்கத்திற்கும், அல்லது மத  ஆதிக்கத்திற்கும், அதனை ஓர் எதிர்ப்புக்குரலாகத்தான் கருதவேண்டும். ஒரு பக்கம் பஷார் அல்-ஆசாத்தும், இன்னொரு பக்கம், டாட்ச் எனும் தீவிரவாத இயக்கமும்   தங்கள் ஆதிக்கத்தை வலுவடைய முயற்சி மேற்கொண்டிருக்கும்போது, ஒரு மூன்றாவது சக்தியாக அந்தக் குரல் ஒலித்தது.  2011 ஆம் ஆண்டு ஆசாத்துக்கு எதிர்ப்பாக வெடித்த அமைதி  ஆர்ப்பாட்டங்களை அரசு அடக்கி ஒடுக்கியது. அதுபற்றிய இக்கதை பிரெஞ்சு பத்திரிகை நிருபர் ஒருவருக்கும் போராளிகளுக்குமிடையே ‘ஸ்கைப்’ வழியே  நடைபெற்ற உரையாடல்கள் அடிப்படையில் சொல்லப்படுகின்றது. தன்னுரிமை, சகிப்புத்தன்மை, இலக்கியத்தின் மேலாண்மை ஆகியவற்றிற்கு இது ஒரு துதிப்பாடலாகும்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

பிறப்பு மைசூரில். படிப்பு B.A.வரை. ஒரு தனியார் நிறுவனத்தில் வியாபாரப் பிரிவின் அகில இந்திய மேலாளராக முப்பத்தைந்து வருடங்கள் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். நிழற்படக் கலையில் ஆர்வம் உள்ளவர். அகில உலக, தேசியக் கண்காட்சிகளில் இவரது நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுப் பரிசுகளும் பெற்றிருக்கின்றன. கன்னடத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து கன்னடத்திற்கும் இவர் மொழிபெயர்த்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன. தற்போது பெங்களூரில் வசிக்கிறார்.

Blurb

வெறும் சுய செய்திகளாகவும் சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை.

டி.பி. அசோக் கதைகளின் மீது கனவுத்தன்மையைப் படியவைப்பதன் வழியாக அவற்றை ஒளிகொள்ளச்செய்யும் திவாகரின் கலை மிக முக்கியமானது. இது கதைகூறலில் அவர் கண்டடைந்த வெற்றிகரமான வழிமுறை. எழுபதுகளிலேயே அந்த வழிமுறையைக் கண்டடைந்து செயல்படுத்திய முன்னோடிப் படைப்பாளியென்றே அவரைக் குறிப்பிடவேண்டும். ஒன்றைப்போல பிறிதொன்றை உருவாக்காமல் ஒவ்வொன்றையும் புதிது புதிதாக உருவாக்கும் புதுமைநாட்டம் அவரை முக்கியமான சிறுகதையாளராக உருவாக்கியுள்ளது.

பாவண்ணன்

தொகுப்பாசிரியர் குறிப்பு

கோவையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்துவருபவர். இந்திய தணிக்கை - கணக்காயத்துறையில் பணி யாற்றுகிறார். வீட்டில் நிலவிய சூழல் அளித்த ஆர்வத்தால் சிறு வயதிலிருந்தே வாசிப்பில் ஈடுபட்டார்.  நவீனத் தமிழ், ஆங்கில இலக்கியங்களிலும் ஆங்கிலம் வழியாகப் பிற மொழி இலக்கியங்களிலும் தீவிர வாசிப்புக் கொண்டவர். இணைய இதழ்களிலும் முக நூலிலும் கட்டுரைகளும் நூல் விமர்சனங்களும் எழுதி வருகிறார். 

Blurb

நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகளங்கள். மத்தியதர வர்க்க மனிதர்களை அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள். உண்மைகளுக்குள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது.

ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டுபவையான பதினாறு சிறுகதைகள் கொண்டது இந்தத் தொகுப்பு.