Enable Javscript for better performance
ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- Dinamani

சுடச்சுட

  

  ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

  By உமா ஷக்தி  |   Published on : 10th June 2016 05:50 PM  |   அ+அ அ-   |    |  

  13322024_1740721269504298_334262779888616710_n

  ஓர் இரவு. ஏதோ ஒரு  அசம்பாவித சம்பவம். அதைப் பார்த்து விலகும் சில மனிதர்கள். அனைவரும் விலகியபின் இறுதியில் கேமரா வெற்றிடத்தைக் காட்சிப்படுத்துகிறது. இப்படித்தான் மிஷ்கினின் திரைப்படங்கள்  பார்வையாளன் மனத்தில் பல உருவாக்கங்களை நிகழ்த்திவிட்டு இறுதியில் கையறு நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும். ஓநாயும் ஆட்டுக்குட்டியும அப்படிப்பட்ட ஒரு த்ரில்லர் வகைமைப் படம். அக்கதையையும் அதன் பாத்திரங்களையும் ரசிகனின் கற்பனைக்கு மடைதிறந்துவிட்டவர் மிஷ்கின். அத்தகைய ஒரு திரைப்படத்தை முற்றிலும் உள்வாங்கி விமரிசனம் எழுதுவதும் அத்திரைப்படத்தைப் பற்றிய புத்தகத்துக்கு விமரிசனம் எழுதுவதும் சிரமமான காரியமதான்.  ஆனால் அது கற்றலின் சுகானுபவமாக்கிவிட்டது இந்த நூல். படம் வெளிவந்த காலகட்டத்தில் பல்வேறு கேள்விகளைப் பார்வையாளர்கள் மனத்தில் எழச்செய்தது உண்மை. அவற்றுக்கெல்லாம் பதிலாக கையடக்கமான ஒரு புத்தகத்தைத் தந்துள்ளார் இயக்குனர். இது திரைப்பட உருவாக்கம் குறித்து தமிழில் வெளிவந்துள்ள முதல் புத்தகம் என்பது கூடுதல் சிறப்பு. பெருமளவில் காட்சியமைப்புகளால் நகரும், நேர்த்தியாகவும் மிகமிக நுணுக்கமாகவும் எழுதப்பட்ட திரைக்கதையைப் பற்றி ஒளிவு மறைவின்றி எல்லாப் பக்கங்களிலும் மனம் திறந்து பேசுகிறார் மிஷ்கின். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நிறைவான ஒரு படைப்பாக எப்படி சாத்தியமானது என்பதை விளக்கும் ஒரு சிறிய கையேடு தான் அதன் திரையாக்கம் பற்றிய இப்புத்தகம்.

  திரையில் மிஷ்கின் செய்த சில நுட்பமான விஷயங்களை புத்தகத்தில் விளக்கி உள்ளார். உதாரணத்திற்கு படத்தின் டைட்டில்கார்டில் ஒரே ஒரு பெயர் மட்டும்தான் காண்பிக்கப்படுகிறது. இளையராஜாவை ஏன் தன் மூன்றாவது திரைப்படத்திற்கு இசையமைக்கச் செய்திருக்கிறார் என்ற காரணத்தைக் கூறி பாடல்கள் இல்லாத ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு அசாத்தியமான பின்னணி இசைக் கோர்ப்பை ராஜாவிடம் ஒப்படைத்தோடன்றி பின்னணியில் ஒலிக்கும் இசையை முன்னணி இசை என்று டைட்டில் கார்ட் போட்டதன் காரணங்களை விளக்கியிருப்பார்.  தான் போற்றிக் கொண்டாடும் ஒரு மாபெரும் கலைஞனுக்கு, சமகாலத்தில் நம்முடன் தம் இசையால் உறவாடிக் கொண்டிருக்கும் ராகதேவனுக்கு இதை விடச் சிறப்பு வேறு யாரேனும் செய்து விட முடியுமா என்று திகைக்க வைக்கிறார் மிஷின்.

  இன்னொரு இடத்தில் மிஷ்கின் கூறியிருப்பது நெகிழ்ச்சியானது

   ‘ எல்லா காவலர்களும் எங்களைச் சூழ்ந்துகொண்டு, wolf-n நெஞ்சைத் துளைப்பது போல பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். வுல்ஃப் அதைப் பொருட்படுத்தாமல், அந்தக் குழந்தையைப் பார்த்தபடியே மண்டியிட்டு ‘கார்த்தி….’ என்று சொல்லியவாறு, அந்தக் குழந்தையின் காலில் விழுகிறான். விழுந்து கும்பிடுகிறான். அப்படியே கீழே தரையில் மல்லாக்க செய்து விழுகிறான்.

  இப்படி விழுந்து கும்பிடுதல் என்பதை, என் வாழ்நாளில் மிக முக்கியமான மனிதர்களிடம் மட்டும் செய்திருக்கிறேன். காலில் விழுந்து கும்பிடுவதென்பது எப்போதுமே என்னைப் பொறுத்தவரை என் மனதிலிருக்கிற அழுக்குகளையெல்லாம் கலைவது போலத்தான். மிஷ்கினாக, நான் அவ்வளவு சீக்கிரத்தில் எல்லா மனிதர்களின் கால்களிலும் விழுவது கிடையாது.

  நான் சினிமாத் துறையில் பார்த்து, காலில் விழுந்த மூன்று மனிதர்கள்.

  இளையராஜாவை எப்போது பார்த்தாலும் அவர் காலில் விழுந்து கும்பிட்டிருக்கிறேன். அதுபோல எனக்குத் தந்தையாகயிருக்கும் ஓவியர் மருது. அடுத்து, நண்பரும் என் மனதிற்கு மிக நெருக்கமானவருமான நாசர்.

  தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் கடைசியாக அலோசியாவின் காலில், டிமிட்ரி விழுவான். அதெல்லாமே இந்தக்காட்சி எழுதும்பொழுது ஞாபகத்திரையில் ஓடியது. அந்தக் குழந்தையின் காலில் விழுவதை, எழுதும்பொழுதே அழுது, அழுது ஓய்ந்துபோய் எழுதினேன்.’

  இதைப் படிக்கும் வாசகனுக்கு காட்சிரூபமாகவும் எழுத்தாகவும் ஒரு கலைஞனின் அகப்பயணம் தென்படுகிறது. அவனது அனுபவங்களை நமக்கு தரிசனங்களாக்க முயற்சி செய்யும் தீவிரம் புரிகிறது. குறிப்பிட்ட அக்காட்சி திரையில் சில நொடிகளில் நம்மைக் கடந்து போனாலும் மனத்தில் பலத்த அதிர்வினை ஏற்படுத்தியது உண்மை. அதன் பின்புலத்தைக் மிஷ்கின் விளக்கி இருப்பது அதுவும் தன் சுய வாழ்க்கையிலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் இடம்பெயர்த்துக் காண்பித்திருப்பது பேரானுபவம்.

  திரைப்பட ஆக்கம் என்பது நாம் நினைப்பது போல சாதாரண விஷயமன்று. மனிதர்கள் மட்டுமில்லாமல் சூழலும் அதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். எல்லாமும் கூடி வர ஒரு நாள் ஷூட்டிங் முடித்து, நாட்கள் வாரங்களாகி ஒரு ஷெட்யூல் முடிந்து மாதங்கள் சில கடந்தபின் மொத்த திரைப்படத்தையும் இயக்கி முடிவதற்குள் ஒரு வாழ்க்கை வாழ்ந்து முடித்தது போன்ற அயர்வு ஏற்பட்டுவிடும். தவிர நினைத்த வகையில் காட்சிகளை திரைக்குள் கொண்டு வர பேராற்றல் கொண்டவர்களால் மட்டுமே முடியும். அவ்வகையில் மிஷ்கின் ஒரு பிசாசு என்றே சொல்லலாம். கலையின் தீவிரமும் தேடலும் இருக்கும் ஒரு கலைஞன் தான் நினைத்தது நடக்கும் வரை ஓயமாட்டான். ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ திரைப்படத்தை எவ்வித சமரசமும் இன்றி தனக்குத் தான் நேர்மையாக எடுத்த விதத்தைப் பற்றியும் மிகவும் சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார். திரைப்படத்தின் ஒவ்வொரு ஷாட்டையும் எப்படி யோசித்து தொழில்நுட்பத்தின் உதவியாலும் நடிப்பாற்றாலாலும் உயிர் கொடுத்துள்ளார் என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் விளக்கியுள்ளார். தொழில்நுட்பம் சார்ந்தும், திரைக்கதையின் அமைப்புக் குறித்தும் உண்மைத்தன்மையுடன் எழுதப்பட்ட இப்புத்தகம் திரைப்படக் கலையை கற்ற விரும்புவோருக்கு பைபிளாக இருக்கும் என்பதில் எள் அளவிலும் சந்தேகமில்லை.

  படம் இயக்கும் போது சாவகாச மனநிலையில் நிச்சயம் யாராலும் இருக்க முடியாது. ஆனால் இந்தப் புத்தகத்தை எழுதும் போது ஒரு அமைதியான மனநிலையில் மிஷ்கின் எழுதியுள்ளார் என்பது புரிகிறது. சில காட்சிகளை எடுக்கபட்ட பிரயத்தனங்களை விடவும், எழுதும் போது சுலபமாக அவரால் கடந்து போய்விட முடிகிறது. இந்த அவருடைய எளிமைதான் அனைத்து வகை பார்வையாளர்களையும் கவர்ந்திருக்கிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் அழுத்தமான திரை மொழியும் சரி அணுகுமுறையும் சரி பார்வையாளனை பலவிதமான மனநிலைக்குள் இழுத்துச் சென்றுவிடும். அதிர்வும் அவநம்பிக்கையும், வாழ்க்கையின் மீதான அதிருப்தியும், போதாமையும், இழப்பும், நம்பிக்கையும், பிரார்த்தனையும், சரண் அடைதலும்  என பலவித உணர்வு நிலைக்குள் தள்ளி பிரமிக்க வைத்துவிடும். ஒரு படைப்பாளியாக மிஷ்கினின் புதிய அலை திரைப்படங்கள் திரை அனுபவத்தை அடுத்த நிலைக்கு உயர்த்துபவையாகவே உள்ளன.

  திரைப்பட ஆக்கத்தின் போதான புகைப்படங்களும், ஓவியங்களும் திரையாக்கம் பற்றிய கட்டுரைகளும் இப்புத்தகத்தின் முன் பாதியில் தந்துள்ளார்கள். இரண்டாம் பகுதி முழுக்க திரைப்படத்தின் வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையான பேசுமொழியில், படிப்பவர்களின் கரங்களைப் பிடித்து மெள்ள இது தான் இதுவே தான் என்று தெள்ளந்தெளிவாக விளக்குகிறார் இயக்குனர். பொறுப்புமிக்க ஆசானாக திரைக்கதை அறிய விரும்பும் வாசகனுக்கு உற்ற நண்பனாக சக படைப்பாளியாக மிஷ்கின் உருமாற்றம் அடைந்துள்ளார். உதாரணமாக காட்சி எண் 60, 62, 63, 64 பற்றிய விளக்கம். Paid killer பற்றிய நுட்பமான தகவல்கள். ‘காலையில் செய்தித் தாளை திறந்து பார்த்தால், ஒவ்வொரு நாளும், நாட்டின் ஏதோ ஒரு மூலையில் கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கிண்றன. கொலைகள் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்பொழுது அந்த மனிதர்கள் யார்? அவர்கள் எப்படி இச்சூழலுக்கு இசைந்து வேலை செய்கிறார்கள்? என்ற கேள்விக்கெலலம் பதில் இந்தக் காட்சியில் இருக்கும். ‘நாம் யாரிடம் காசு வாங்குகிறோமோ, அவர்களுக்கு உண்மையாக இருக்கவேண்டும்’ என்பது போல அந்த Paid Killer சொல்வதற்கு, உடனே வுல்ஃப் ‘அப்ப நாம என்ன மிஷினா?’ என்று கேட்கிறான். ‘ஆம், நாம் மெஷின் தான். நமக்கென்று இதயம் கிடையாது, ஆசை கிடையாது, சராசரி மனிதனுக்குண்டான உணர்வுகள் கிடையாது. ஆசை கிடையாது. நாமெல்லாம் உலோகக் குப்பை’ என்பதாக அந்த Paid killer-ன் உரையாடல் இருக்கும்.

  திரைப்படத்தைப் பொருத்தவரையில் படம் நன்றாக இருந்தது அல்லது இல்லை என்ற இரண்டு நிலைப்பாடுகள் மட்டுமே ஒரு பார்வையாளன் தேர்ந்தெடுப்பான். ஆனால் அதே ஒரு புத்தகமாக வெளியிடப்படும் போது தான் பார்க்கத் தவறிய காட்சியை எழுத்தில் வாசிக்கும் போது மீண்டும் திரைக்குச் சென்று பார்த்து தன் புரிதலை சரி படுத்திக் கொள்ளும் ஒரு நல்வாய்ப்பினைப் பெறுகிறான்.படைப்பின் பெருவெளி எண்ணற்ற சாத்தியங்களை ஒரு வாசகனுக்கு அள்ளி வழங்குகிறது. நம்முடைய கருத்தாக்கங்களும் ஊகங்களும் எதிர்ப்பார்ப்புகளும் மீறி எழுத்தாளனுடைய ஆளுமைக்குள் தன்னை அறியாமல் இளைப்பாரிவிடுவான் ஒரு நல்ல வாசகன். அவ்வகையில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கதையை எப்படி திரையாக்கினார்கள் என்பதை விரிவாகவும் ஆழமாகவும் விளக்கும் முயற்சியில் முழுமையாக வெற்றியடைந்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

  பேசாமொழி பதிப்பகத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது அவர்கள் புத்தகத்தை வடிவமைக்கும் விதம். தமிழில் திரைப்படங்கள் குறித்து அதிக புத்தகங்கள் வருவதில்லை. தமிழ் சினிமா வரலாற்றில் இதுதான் முதல்முயற்சி. உலக அளவில் புகழ்பெற்ற சினிமா புத்தகங்கள் போல தரமான புத்தகத்தை வழங்கிய பேசாமொழிக்கு பாராட்டுக்கள். புத்தகத்தை பார்த்தவுடன் அதை கையில் தொட்டவுடன் உடனே இந்தப் புத்தகத்தை வாங்கலாம் என்ற எண்ணம் மனதில் ஏற்படும் விதமாக அழகாக வடிவமைத்துள்ளார்கள். இப்புத்தகத்தைப் படித்து முடித்ததும் மிஷ்கின் எனும் கலைஞனின் மீதான மரியாதை கூடுகிறது.  சில வரிகளை படிக்கும்போது மனத்துக்குள் இனம் தெரியாத வலியும் மீளமுடியாத துயரும் கவிகிறது. மனசாட்சியை உலுக்கும் படைப்புக்களே காலத்தால் மிச்சம் வைக்கப்படுகின்றன. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் அப்படியானதொரு திரைப்படம். அதன் திரையாக்கம் குறித்த காரண காரணிகளை தெரிந்து படிக்கும் போது இன்னொரு தடவை ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தின் வெற்றி அதுவே என நினைக்கிறேன்.

  புத்தகம் கிடைக்கும் இடம் - பேசாமொழி பதிப்பகம், #1, ஸ்ருதி அபார்ட்மெண்ட், காந்தி நகர், முதல் குறுக்குத் தெரு, அடையாறு, சென்னை-600 020. பக்கங்கள்: 624. விலை: ரூ.600/-

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp