Enable Javscript for better performance
இந்த ஆண்டின் தீபாவளி பூக்கள்!- Dinamani

சுடச்சுட

  

  இந்த ஆண்டின் தீபாவளி பூக்கள்!

  By kirthika  |   Published on : 27th May 2016 09:54 AM  |   அ+அ அ-   |    |  

  மத்தாப்பு, பட்டாசு, வெடிகள், புத்தாடை, இனிப்பு, கொண்டாட்டம் என தீபாவளி வந்து சென்ற பின்பும்... இன்னும் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன, தீபாவளி மலர்கள்! ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு வாசனை! கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்!
  கல்கி பக்.332; ரூ.120 ...................................................................
  லவன் - குசன் ஆகிய இரு குழந்தைகளையும் சீதாதேவி கொஞ்சிக்கொண்டிருக்கும் அட்டைப்படத்தில் தொடங்கி, காஞ்சி மகாசுவாமிகளின் அருளுரை, இந்திரா பார்த்தசாரதியின் "ராமாநுஜர்' நாடகக்காட்சி, தலவிருட்ச மரங்கள் பற்றியும் அவை தொடர்புடைய கோயில்கள் பற்றியும் படங்களுடனான தகவல்கள், திருப்பதி அதிசயங்கள் என ஏராளமான ஆன்மிக விஷயங்களோடு மட்டுமல்லாமல், இதிகாசப் பாத்திரங்களை வைத்து எழுதப்பட்ட சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய ஓர் அற்புத ஆன்மிக மலராக மலர்ந்துள்ளது இவ்வாண்டு "கல்கி' தீபாவளி மலர்.
  ஆனாலும் கலை, கவிதை, கட்டுரை, சிறுகதை, சினிமா, இசை போன்ற பிற துறைகளையும் விட்டுவைக்கவில்லை. கலம்காரி ஓவியர் எம்பெருமான் பற்றிய கட்டுரையும் ஸ்தபதி கனகரத்தினத்தின் நேர்காணலும் இம்மலரை காத்திரமானதாக ஆக்கியிருக்கின்றன. கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை கலாப்ரியாவின் "தண்ணீர் மனம்' மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியனின் "ஒரு கம்பளிப் பூச்சியும் சில பட்டாம் பூச்சிகளும்' ஆகியவை. வண்ணதாசனின் "ஒரு பறவையின் வாழ்வு', வாஸந்தியின் "சீற்றம்' ஆகிய இரண்டும் எளிமையான நேர்த்தியான சிறுகதைகள் ("சீற்றம்' கதைக்காக கேதார்நாத் பின்னணியிலான ராஜராஜனின் ஓவியம் தனித்துக் குறிப்பிடப்பட வேண்டியது).
  சிறுகதைப் பிரிவில் இடம்பெற்றிருந்தாலும் குறுநாவல் என்று சொல்லத்தக்க (கட்டுரை என்று குறிப்பிட்டாலும் பிழையில்லை) அமரர் கல்கியின் "இடிந்த கோட்டை' ஒரு சிறந்த படைப்பு. கட்டுரைகளில், மூத்த அரசியல்வாதி இரா.செழியன் பற்றிய "ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு' கட்டுரையும் ஜப்பான் தமிழறிஞர் நொபொரு கராஷிமா குறித்த கட்டுரையும் தகவல் பெட்டகங்கள். சினிமா குறித்த கட்டுரைகளில் நெய்வேலி பாரதிக்குமார் எழுதியுள்ள "தமிழ் சினிமாவும் சமூகமும்' அறிய வேண்டிய அரிய செய்திகளை உள்ளடக்கிய அருமையான கட்டுரை. சினிமா குறித்த மற்றொரு கட்டுரையான பாரதி எழுதிய "நூறாண்டு தமிழ் சினிமாவில் பெண்கள்' அதிக ஆழமில்லாவிடினும் தமிழ் சினிமா குறித்த ஒரு முக்கியப் பதிவு என்பதில் ஐயமில்லை (நூற்றாண்டு என்பது இந்திய சினிமாவுக்குத்தானே, தமிழ் சினிமாவுக்கு இல்லையே. பின் ஏன் இப்படியொரு தலைப்பு?). கடந்த தலைமுறையினரால் பயன்படுத்தப்பட்டு, இந்தத் தலைமுறையினரால் மறக்கப்பட்டு, இளைய தலைமுறையினரால் வியப்புடன் பார்க்கப்படும் கிராமபோன், டைப்ரைட்டர், லாந்தர் போன்ற பல பொருள்களைப் பற்றிய "சுவடுகள்' கட்டுரையும் நம்மை கர்நாடக மாநிலம் பாதாமிக்கே அழைத்துச் செல்லும்'ஆலயங்களின் சிற்ப சௌந்தர்யம்' கட்டுரையும் சிறப்பாக உள்ளன. காஞ்சி மகாசுவாமிகளின் "ஸ்வாமி என்பது என்ன?' அருளுரை ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.
  கலைமகள் பக்.320; ரூ.150 .......................................................
  இந்த ஆண்டும் கலைமகள் தீபாவளி மலர் பல புதிய பகுதிகளுடன், புதுப்பொலிவுடன் மலர்ந்துள்ளது. மகாபெரியவரின் ஆசியுடன், ""உலகம் ஒரு நாடகம் மேடை' - நாடகத்தின் பல பரிமாணங்களை விளக்குகிறது. நாடக மேடையைத் தொடர்ந்து, மனதில் உறுதியை ஏற்படுத்துகிறது அப்துல் கலாமின் தன்னம்பிக்கைக் கட்டுரையான "உயரே பறப்பது மட்டுமல்ல உன்னத வாழ்க்கை'. கலாம், தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத சில சம்பவங்களை உருக்கமாகப் பதிவு செய்து கண்களில் நீரை வரவழைக்கிறார்.
  நா.மகாலிங்கத்தின் "தலவிருட்சம்', கி.வா.ஜகந்நாதனின் "இன்னமுதை அன்னான்', "துக்ளக்' ஆசிரியர் "சோ'வின் "மனிதனாக வாழ்ந்தவர் ராமர்', சீனி விசுவநாதனின் "சுதேசியத் தீபாவளிச் சிந்தனைகள்', பாக்கியம் ராமசாமியின் "பாவம் ரிஷி பத்தினிகள்' முதலிய ஆன்மிக, தன்னம்பிக்கை, தேசியக் கட்டுரைகள் மலரின் முன் பகுதியை அலங்கரித்துள்ளன.
  ம.செ., வேதா, ஷ்யாம், ஜெயராஜ், நடனம், எஸ்.ஜி. பாஸ்கர், தமிழ், மாயா முதலிய ஓவியர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த சிறுகதைகள் தேவி பாலாவின் "அப்பா எங்கே?' சிறுகதை, நல்ல அம்மாக்கள் தோல்வி அடைவதில்லை என்பதையும், ராஜேஸ்குமாரின் "ஒரு சுட்ட பழமும் ஒரு சுடாத பழமும்' சிறுகதை, வெளிநாட்டு மருமகன் வேண்டும் என்ற பெற்றோரின் மோகத்துக்கு எச்சரிக்கை விடுப்பதாகவும், ஜோதிர்லதா கிரிஜாவின் "அமெரிக்க மருமகள்கள்' தாய்மையின் தவிப்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாகவும், சி.வி.சந்திரமோகனின் "உணர்வுகள் உணரப்படும்போது' சிறுகதை, சீதா முருகேசனின் "ஆண் பார்க்கப் போறோம் வாரீகளா?' சிறுகதை சிந்தனையைத் தூண்டுவதாகவும் உள்ளன.
  ஆன்மிகம், அறிவியல், கதை, கவிதை, கட்டுரை, மொழியியல், கலை, இலக்கியம், வரலாறு, தன்னம்பிக்கை, பயணக்கட்டுரை, இசை, தொழில்நுட்பம், விவசாயம், சினிமா என ஒன்றையும் விட்டுவைக்காமல் பதிவுசெய்திருக்கிறது கலைமகள்! ஒவ்வொரு இல்லத்திலும் அவசியம் மணக்க வேண்டிய மலர்!

  ஆனந்த விகடன் பக்.400; ரூ.120 .........................................
  ஆனந்த விகடன் வார இதழ் வேண்டுமானால் அதன் உள்ளடக்கத்திலும், வெளித்தோற்றதிலும் மாறியிருக்கலாம். ஆனால், அதன் தீபாவளி மலர், மாறாத பாரம்பரியப் பெருமையுடன், புதுமையையும் அரவணைத்துக்கொண்டு வழக்கம்போல் வசீகரிக்கிறது. இயக்குநர் சி.வி. ராஜேந்திரனின் "சிவாஜி டாப் 10', ஸ்டண்ட் இயக்குநர் கே.பி. ராமகிருஷ்ணனின் மகன் ஆர். கோவிந்தராஜின் நினைவலைகளான "எம்.ஜி.ஆர். இட்ட அன்புக் கட்டளை', வீயெஸ்வி தொகுத்துள்ள "ரொமான்டிக் லால்குடி', வைஜெயந்தி மாலா நினைவுகூரும் "வாழ்க்கை தந்த வாழ்க்கை இது' ஆகிய கட்டுரைகள் பழம் பெருமையைப் பேணுகின்றன. அதற்கு இணையாக ஜி.வி. பிரகாஷ் - சைந்தவியின் காதல் சீக்ரெட்ஸ்களைச் சொல்லும் "இசையால் வசமானோம்', கோலிவுட் கிளிகளின் "கிளிக்ஸ்', விஜய் சேதுபதி மனம் திறக்கும் "சினிமாவில் நான் ஒரு துளி' உள்ளிட்ட படைப்புகள் இளமைத் துள்ளலுடன் புதுப் பொலிவு பூணுகின்றன.
  வாசகர்கள் தனியாகப் பிரித்தெடுத்து வணங்க ஏதுவாக இடம்பெற்றுள்ள கடவுளர் திருக்கோலங்களின் தனிப்பக்க ஓவியங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ள வைக்கின்றன. நாஞ்சில் நாடனின் "கடிதடம்' சிறுகதை, படித்து முடித்ததும் வித்தியாசமான வலியுணர்வை ஏற்படுத்துகிறது. பக்க வடிவமைப்பு (லே அவுட்) பிரமாதம்.
  கவர்ச்சி ஓவியர் ஜெ... அடக்கி வாசித்திருக்க, ஸ்யாம் இத்தனை தாராளம் காட்டியிருக்கிறாரே? பத்மவாசனின் கோட்டோவியமும், எழுத்தோவியமும் சிறப்பு. திரைப்படக் கவிஞர் ந. அண்ணாமலையின் தேவதைகள் குறித்த செருகல்கள் வித்தியாசமான உத்தி, அந்தப் படைப்புகளைப் போலவே. ஆன்மிகம், சுற்றுலா, பயணக்கட்டுரை, சினிமா, இசை, விளையாட்டு என படிக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் உள்ள படைப்புகளும் நிறைவைத் தருகின்றன.
  அமுதசுரபி பக்.296; ரூ.120 .......................................................
  அறுபத்தாறாம் ஆண்டைக் கொண்டாடும் அமுதசுரபி மாத இதழ் தற்கால இலக்கியம், பழைய இலக்கியம், கலை, ஆன்மிகம், வாழ்வியல், பொது என்ற ஆறு தலைப்புகளில் தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. கல்கி, பாரதிதாசன், கண்ணதாசன், கி.வா.ஜகந்நாதன், கே.ஆர்.வாசுதேவன், விந்தன், த.நா.குமாரசுவாமி, கி.கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட 17 பிரபலங்களின் எந்த குணம் தங்களைக் கவர்ந்தது என்று அவர்களது வாரிசுகள் தெரிவித்த கருத்துகள் "வாரிசுகள் பேசுகிறார்கள்' என்ற தலைப்பில் சிறப்பான பதிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன. காஞ்சி மகாபெரியவருக்கு கோலம் போடும் கலையும் தெரியும் என்பது சங்கரி புத்திரனின் "கோலம் போடக் கற்றுக் கொடுத்த பரமாச்சாரியார்' கட்டுரை மூலம் தெரிய வருகிறது. "கோலம் போட்டால் அலங்கோலமாக இருக்கக் கூடாது' என்பது பெரியவரின் அட்வைஸ். இருபத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் மலரில் இடம்பெற்றுள்ளன. "...சாற்றுகின்றேன் அம்பிகையே உந்தனுக்கு, சோகத்தில் கனத்துப் போன பருத்தி மாலை, இத்தனை கண்ணீரையும் துடைத்து - எங்கள் தேசத்தின் எளிமையை மீட்டுக் கொடு!' என்று முடியும் சீதா ரவியின் "பருத்தி' கவிதை, மணியம் செல்வனின் ஓவியத்துடன் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது. விக்கிரமன், திருப்பூர் கிருஷ்ணன், வாஸந்தி, இந்துமதி உள்ளிட்டோரின் பத்து சிறுகதைகளும் வெவ்வேறு தளத்தில் அமைந்து வாசிக்க சுவாரசியமாய் உள்ளன. சுவாமி கமலாத்மானந்தரின் "சுவாமி விவேகானந்தர்' கட்டுரை, இன்றைய இந்திய இளைஞர்களுக்கு விவேகானந்தரை கட்டாயம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தொண்ணூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஓவியர் கோபுலுவின் பேட்டி அவரது புகழ்பெற்ற ஓவியங்களுடன் வெளியாகியிருப்பது சிறப்பு. அவர் வரைந்த வித்தியாசமான ஆண்டாள் படம் மலரின் அட்டையை அலங்கரிக்கிறது. நடிகர் பொன்வண்ணன் ஓர் ஓவியராக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
  ஓம் சக்தி பக்.386; ரூ.90 ............................................................
  ரமணர், காஞ்சி மகாபெரியவர்,வேதாத்திரி மகரிஷி, மாதா அமிர்தானந்தமயி உள்ளிட்ட ஆன்மிகப் பெரியவர்களின் அருள் வாக்கோடு தொடங்கும் ஓம் சக்தி தீபாவளி மலர் முழுமையும் வண்ணப்பக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மணியம் செல்வனின் "புத்தனான சித்தார்த்தன்', பத்மவாசனின் "கந்தகோட்டம் முருகன்' என கண்ணிற்கினிய காண்பதற்கரிய படங்கள் மட்டுமின்றி, கருத்துச்செறிவுடன் கூடிய கட்டுரைகளும், கவிதைகளும் மலருக்கு மேலும் மெருகூட்டுவதாய் அமைந்துள்ளன. "அரசியல் அசுத்தமாகிவிட்டது என்று ஏறக்குறைய நாம் அனைவருமே பேசினாலும், அதனைச் சுத்திகரிக்க வேண்டியதும் நமது கடைமைதான் என்பதையும் நாம் உணரவேண்டும், என்று "சட்டமா? தார்மீகமா?' என்ற தனது கட்டுரையில் நா.மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. திருட்டு மரம் வாங்கி செய்த கட்டிலில் வராத உறக்கம், தரையில் பாய் விரித்து படுத்தபோது வருவதாகச் சொல்லும் கவிஞர் சிற்பியின் "வனதேவதை' கவிதை கச்சிதம். பொன்னீலன்,கி.ராஜநாராயணன், ராஜேஷ்குமார், மேலாண்மை பொன்னுச்சாமி, இனியவன் உள்ளிட்ட 12 பிரபலங்களின் சிறுகதைகள் மட்டுமின்றி அவற்றுக்கான ஓவியங்களும் வாசகர்களைப் பேச வைக்கும். மொத்தத்தில் இந்த மலர் தேன் போல திகட்டாத தித்திப்பு என்றால் அது மிகையல்ல.

  விஜயபாரதம் (2 புத்தகங்கள்); பக்.608; ரூ. 150 ...............
  "விஜயபாரதம்' தீபாவளி மலர் இரண்டு புத்தகங்களாக வெளி வந்திருக்கிறது. ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ கணேச பஞ்சரத்தினத்தை தமிழில் வழங்கியுள்ளார் கவிமாமணி மதிவண்ணன். கவிஞர் மா.கி.ரமணன், சமூகசேவகர் கிருஷ்ண ஜெகநாதன், ம.கொ.சி.ராஜேந்திரன் உள்பட 14 பேர் எழுதிய கவிதைகள் மலருக்கு மணம் சேர்க்கின்றன.
  புராதன பாரதத்தில் நீதி நிர்வாகம் குறித்த ஆர்.பி.வி.எஸ்.மணியனின் கட்டுரை, மதமாற்றம் ஒரு மோசடி என்ற மகாத்மா காந்தியின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு காந்திய அறிஞர் லா.சு.ரங்கராஜனும், மகாபாரத சிகண்டி குறித்து தஞ்சை வெ.கோபாலனும், கணிதமேதை ராமானுஜன் குறித்து பருத்தியூர் கே.சந்தானராமனும் எழுதிய கட்டுரைகள் சிந்திக்க வைக்கின்றன. ராஜாஜியின் ஜெயில் டைரி தொடர்பான திருப்பூர் கிருஷ்ணன், மங்கள்யான் குறித்து நெல்லை சு.முத்து, சமுதாய வளர்ச்சியில் சாதிகளின் பங்கு குறித்து பேராசிரியர் இரா.ஸ்ரீநிவாசன் அற்புதமான கட்டுரைகளை எழுதி இருக்கின்றனர்.
  புஷ்பா தங்கதுரை, பாக்கியம் ராமசாமி, சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், நரசய்யா போன்ற பிரபலங்களின் கட்டுரைகளும் மலரில் இடம்பெற்றுள்ளன.
  எழுத்தாளர்கள் அசோகமித்திரன், கெüதம நீலாம்பரன், விமலா ரமணி, ராஜேஷ்குமார், தேவிபாலா உள்ளிட்டோரின் 27 சிறுகதைகள் தீபாவளி மலருக்கு மெருகூட்டுகின்றன.
  மொத்தத்தில் மிகுந்த சிரத்தையுடனும், கவனத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ள இம்மலரில், கடவுளர்கள், மகான்களின் வண்ணப்படங்களும் ஆங்காங்கே மிளிர்கின்றன.

  கோபுர தரிசனம் பக்.400; ரூ.120 ........................................
  விநாயகர் குறித்த தத்துவங்கள், மாதர்களின் பெருமை குறித்த காஞ்சி மஹா பெரியவரின் அருள்வாக்கு, மகான்கள் தொடர்பான ஜஸ்டிஸ் டி.எஸ்.அருணாசலத்தின் கட்டுரை, "பக்திவழியும் ராமகாதையும்' என்ற டாக்டர் சுதா சேஷய்யன் -ஸ்ரீகாந்தின் கட்டுரை, சாந்தோக்ய உபநிஷதத்தில் கூறப்பட்டுள்ளவை தொடர்பான சோவின் கட்டுரை, வள்ளிமலை சுவாமிகள் குறித்த ஜஸ்டிஸ் பி.ஜோதிமணி கட்டுரை, வடலூர் வள்ளலார் பற்றிய நா.மகாலிங்கத்தின் கட்டுரை, குமரகுருபரர் தொடர்பான திருப்பூர் கிருஷ்ணனின் கட்டுரை போன்றவை உள்ளிட்ட அனைத்து கட்டுரைகளும் ஆன்மிக அன்பர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். ஆங்காங்கே இடம்பெற்றுள்ள கவிஞர் வாலி, பா.விஜய் உள்ளிட்டோரின் கவிதைகள் புத்தகத்துக்கு அணிசேர்க்கின்றன. நல்லி குப்புசாமி செட்டியார், நாட்டியத் தாரகை கிருத்திகா சுப்ரமணியம் ஆகியோரின் பேட்டி, பழமொழிகள் பற்றிய ஆத்திச்சூடி ஜெயராமின் விளக்கங்கள், அமெரிக்கர்களின் கர்நாடக இசை ஆர்வம், சங்க கால கொங்கு நாணயங்கள் பற்றிய இரா.கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை, படுதலம் சுகுமாரன், கெüதம நீலாம்பரன் உள்ளிட்டோரின் சிறுகதைகள் ஆகியன மலருக்கு மேலும் மெருகூட்டுகின்றன.
  ஸ்ரீபாஷ்யம் எழுத கூரத்தாழ்வான் உறுதுணையாக இருந்த சம்பவங்கள் ஓவியத்தாலேயே விளக்கப்பட்டுள்ளது கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் உள்ளது.
  பலராலும் அறியப்படாத எஸ்.அம்புஜம்மாள், நீலகண்ட பிரம்மசாரி, கெயிடின் லியோ, வாசுதேவ் பல்வந்த் பட்கே, பாகா ஜதீன், கே.பாஷ்யம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய சிறுகுறிப்பு நெகிழச் செய்கிறது.
  ஆன்மிக அன்பர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவரையும் படிக்கத் தூண்டும் வகையில் மலர் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

  லேடீஸ் ஸ்பெஷல் பக். 265, ரூ.120 ...........................
  ""மலருக்காகத் தலைப்புகளைத் தந்துவிட்டு கட்டுரைகளுக்காகக் காத்திருக்கும் சுகமே தனிதான்'' என்கிறார் லேடீஸ் ஸ்பெஷல் இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவன். வாசகர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் வகையில் 17 சிறுகதைகளும், 17 கவிதைகளும், 9- ஆன்மிகம் சார்ந்த கட்டுரைகளும், பல தலைப்புகளில் 6 கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இதில் அடங்கியுள்ளன. தீபாவளி மலரில் அரசியல் இருக்கக்கூடாது என்ற சட்டம் உள்ளதா என்ன? "தமிழ்நாட்டில் நரேந்திர மோடி' என்ற அரசியல் கட்டுரையும் இந்த மலரில் இடம் பிடித்துள்ளது.
  பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதனின் மகள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பானுமதி ராமகிருஷ்ணா, எல்.ஆர்.ஈஸ்வரி தொடங்கி சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், உன்னிகிருஷ்ணன், அப்துல் கலாம் வரையிலான பிரபலங்கள் மற்றும் திரைப் பிரபலங்களுடன் தன் தந்தையின் அனுபவங்களைச் சுவைபட பகிர்ந்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா குன்னக்குடியின் இசையில் நான்கு அம்மன் பாடல்கள் பாடியுள்ளதையும், பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி முதன்முதலாக அம்மன் பாடல்களைப் பாடியது குன்னக்குடியின் இசையில்தான் என்பதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
  பாக்கியம் ராமசாமி தனது ஐசியூ அனுபவத்தை சுவாரசியமாகத் தொகுத்துள்ளார். மருத்துவமனையில் புறங்கையில் ஊசி ஏற்றப்பட்டு பிளாஸ்டர் போடுவதை நமக்கே தெரியாமல் ஸ்தூபி நட்டுள்ளார்கள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ""ஐசியூ செல்வதற்கெல்லாம் தனி அதிர்ஷ்டம் வேண்டும்'' என்றும் கூறியுள்ளார். ""ஐசியூ என்பது மக்களை பயப்படுத்துகிற வார்த்தையே தவிர, அதைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம்'' என்றும் நிறைவு செய்துள்ளார்.
  திரைப்பட நடிகைகளின் ஆபாச கலர் படங்கள், நடிகைகளின் பேட்டிகள் என்று இல்லாமல் குடும்பத்தோடு அனைவரும் படிக்கும் வகையில் வெளிவந்திருக்கும் இந்த தீபாவளி மலருக்கு பூங்கொத்துகள் கொடுக்கலாம்.

  பாபாஜி சித்தர் ஆன்மீகம் பக். 320; ரூ.120 ..................
  ஆன்மிக அன்பர்கள், வாசக நண்பர்களின் கண்ணோட்டத்துடன் பார்த்தால், இந்த ஆண்டின் மிகச் சிறந்த தீபாவளி மலர் என்ற பெருமையை பாபாஜி சித்தர் ஆன்மீக தீபாவளி மலருக்குத் தரலாம். ஆன்மிக விஷயங்கள் தேனில் ஊறிய பலாச் சுளையாகத் தரப்பட்டுள்ளன. அதிலும் சில தகவல்கள் அபூர்வமானவை. உதாரணத்துக்கு... "உள்ளம் உருகுதையா முருகா...' என்கிற பக்தி ரசம் சொட்டும் பாடலை இயற்றியவர் மரகதவல்லி என்கிற சாதாரண குடும்பப் பெண் என்கிற ருசிகரத் தகவல் இம்மலரில் வெளியாகியுள்ளது. அப்பெண்மணியின் வாழ்க்கையைப் பற்றி ராதா விஸ்வநாதன் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார்.
  இத்துடன் பாரதியார் பாடிய விநாயகர் போற்றி, மகா
  அவதார் பாபாஜி சித்தர் பற்றிய சிறப்புக் கட்டுரை, காலை கண்விழித்தது முதல் இரவு உறங்கப் போகும்வரை என்ன என்ன செய்ய வேண்டும்... அதனால் ஏற்படக்கூடிய உடல்,மன நலன்கள் எவை? என்பது குறித்து "உடல், உள்ளம், ஆலயம்' என்ற தலைப்பில் ஸ்ரீ துர்க்கைச் சித்தர் தீட்டியுள்ள கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.
  பெண்ணெனும் சைவ வித்துக்கள் என்ற தலைப்பில் பெரிய புராணத்தில் அழியா இடம்பெற்ற ஆன்மிக மகளிர் குறித்த செய்திகள், இந்த நூற்றாண்டில் நம்மோடு கலந்து வாழ்ந்த யோகிராம் சுரத்குமார், அறுபத்து நான்கு பைரவர்கள், சீரடிக்கு பாத யாத்திரை, லண்டன் ஈஸ்டஹாம் முருகன் கோயில்... இப்படியாக எண்ணற்ற ஆன்மிக முத்துக்களை அள்ளி அள்ளி தாராளமாக வழங்கியுள்ளனர். அனைவரும் படித்து வாழ்வில் மேன்மையுற உதவும் தீபாவளி மலர் இது.

  சிவஒளி பக்.200: ரூ.80 ................................................................
  மகாசிவராத்திரியுடன் தொடர்புடைய 4 சிவஸ்தலங்கள், ஆணவத்தை அடக்கிய வரலாறு சொல்லும் 8 சிவாலயங்கள், நவக்கிரக கோயில்களின் சிறப்புகள், 65 திருத்தலங்களின் பெயர்க் காரணங்கள் இவற்றுடன் அமெரிக்காவில் ஆஷ்லேண்டில் உள்ள லெட்சுமி கோவில், திருஞான சம்பந்தரின் தாயார் அவதரித்த திருக்கோவில் என சுமார் 100-க்கும் மேற்பட்ட கோவில்களை விவரிக்கும் வகையில் மலர்ந்திருக்கிறது தீபாவளி மலர்.
  "தாயன்பை வெளிப்படுத்தும் தீபாவளி', "நன்மை விளைந்த நன்னாள்', "திருக்கார்த்திகையும் தீபாவளியும் ஒரு திருநாளே' என்ற 3 கட்டுரைகளும் தீபாவளி வந்த கதையை சிறப்பாகச் சொல்லியிருக்கின்றன. திருமூலரின் வாக்கையும், வாழ்வையும் அவர் எழுதிய பாடல்களோடு விளக்கும் ஊனுடம்புக்குள் ஒளிந்திருக்கும் ஈசன் என்ற புலவர் த.தெட்சிணாமூர்த்தியின் கட்டுரை உட்பட மலரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் அவசியம் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவார்ந்த படைப்புகள்.
  தீப வழிபாட்டின் மகத்துவத்தையும், பைரவர் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் கோட்டோவியங்களுடன் விளக்கியிருக்கும் விதம் அற்புதம். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரையின் கவிதை உட்பட 3 கவிதைகள், சிருங்கேரி சுவாமிகள், ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகள் மலருக்கு மேலும் மணம் சேர்த்திருக்கின்றன.

  சண்முக கவசம் பக்.160; ரூ.75 ............................................
  ஆன்மிக மாத இதழான சண்முக கவசத்தின் தீபாவளி மலர் ஆன்மிகத்துடன் இலக்கியச் சுவையும் மேவிய நல்விருந்து படைத்துள்ளது. தொடக்கத்திலேயே சித்தி விநாயகரின் திருவடி போற்றும் மகாகவியின் கவிதை. அடுத்ததாக, விளத்தொட்டி என்ற ஊரிலே தொட்டிலில் வளரும் குழந்தையாக அருள்பாலிக்கும் முருகன் பற்றிய வாகீச கலாநிதி கி.வா.ஜ-வின் அற்புதக் கட்டுரை. கோளறு பதிகத்திலே காளையேறும் சிவபெருமானை "பசுவேறும் பரமன்' என்று திருஞான சம்பந்தர் விளித்திருப்பதன் பொருள் குறித்து கிருபானந்த வாரியார் அளித்திருக்கும் விளக்கம் உண்மையிலேயே இலக்கிய விருந்துதான். பாரதி காலத்தை வென்ற கவி, ஒப்பற்ற தேசிய மகாகவி என்பதைச் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் சிறப்புடன் நிரூபிக்கும் வகையில் வடித்துள்ள அக்காலக் கட்டுரையை மறுபிரசுரம் செய்திருப்பது காலத்திற்கு ஏற்றது, பாராட்டுக்குரியது.
  முருகப்பெருமான் மீது பாவேந்தர் பாடிய அரிய பாடல்கள் ஆச்சரிய ஆன்மிகப் பொக்கிஷம். துன்பங்களிலிருந்து விடுதலை பெற கவியரசர் கண்ணதாசன் எழுதிய கட்டுரை, கம்ப ராமாயணத்திலே வள்ளுவர் பற்றி ரா.பி. சேதுப்பிள்ளையின் கட்டுரை, புலம்பெயர்ந்த தமிழர்களின் கவிமலர்த் தோரணம் போன்ற படைப்புகள் மலருக்கு மேலும் அழகூட்டுகின்றன. அருந்ததி பார்ப்பதன் அறிவியல்பூர்வமான விளக்கம், வட்டத்தூண் வடிவில் நவகிரகங்கள் உள்ளிட்ட சின்னஞ்சிறு தகவல்களும் சீரிய சுவையையும், பயனையும் தருகின்றன. அதேநேரத்தில் ஆதிசங்கரரின் அற்புதப் படைப்பு சுப்பிரமணிய புஜங்கம் கட்டுரையைத் தொகுத்திருப்பதில் இத்தனை அஜாக்கிரதை ஏன்? வந்த பகுதியே மீண்டும் வந்து, கட்டுரையின் பின்பகுதி காணாமல் போயுள்ளதே?

  ஸ்ரீ சாயி மார்க்கம் பக்.126; ரூ.100 ........................................
  ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலரில்... பகவான் ஷீரடி சாயி பாபாவின் கோவில்கள், லீலைகள், அருளாசிகள் பற்றிய செய்திகள் நிரம்பிக் காணப்படுகின்றன. இத்துடன் ஆரத்தி சிறப்பிதழும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஷீரடியில் நான்கு வேளையும் பாடப்படும் மராத்தி ஆரத்திப் பாடல்கள் தமிழில் விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன. கே.வி.ரமணியின் சிறப்புப் பேட்டி, அவரது ஆன்மிக அனுபவங்களுடன் தரப்பட்டுள்ளது.
  ஷீரடியில் பாபா தரிசனம் மற்றும் தங்கும் வசதிக்கான முன்பதிவை ஆன்லைன் மூலம் செய்வதற்கான விவரங்களும், தமிழ்நாட்டு பக்தர்கள் சென்னையில் உள்ள ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் தகவல் மையத்துக்கு நேரடியாகச் சென்று ஷீரடி தரிசனத்துக்கான முன்னேற்பாடுகளை மிக எளிதாக செய்து கொள்வதற்கான வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  கந்த சஷ்டி கவசம் பாணியில் சாயி.கே.குப்புசாமி என்ற அன்பர் ஸ்ரீ ஷீரடி சாயி நாத கவசத்தை இயற்றி உள்ளார். அதைப் பாடி சாயி பக்தர்கள் அவரது அருளைப் பெறலாம். இத்துடன் விமலாரமணியின் தீபாவளி சிறப்புச் சிறுகதை, சரோஜா வாஞ்சி எழுதியுள்ள "ஷிர்டி விஜயம் முதல் விஜயதசமி-மகா சமாதி வரை' என்கிற பாபாவின் வாழ்க்கைத் தொகுப்பு, சாயி என்ற பெயர் முற்காலத்தைய தமிழகக் கடவுளின் பெயர் என்பதை பரவசத்துடன் சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரை, புட்டபர்த்தி சத்ய சாயி, பகவான் ரமணரின் அருளாற்றல்களைப் பற்றிய கட்டுரைகளும் இம்மலரில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. ஸ்ரீ சாயி மார்க்கம் ஆன்மிக இதழை பல ஆண்டுகளாகப் படித்து வரும் கனடாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் க.துரைராஜின் கனவில் பாபா வந்து அருள் பாலித்ததை அவர் விளக்குவதில் இருந்தே ஸ்ரீ சாயி மார்க்கத்தின் பெருமையையும் இம்மலரின் அருமையையும் புரிந்துகொள்ளலாம்.

   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  flipboard facebook twitter whatsapp