Enable Javscript for better performance
கூட்டணிக்கு கொடி கட்டும் தமிழக காங்கிரஸ்: எப்போது கொம்பு முளைக்கும்- Dinamani

சுடச்சுட

  

  கூட்டணிக்கு கொடி கட்டும் தமிழக காங்கிரஸ்: எப்போது கொம்பு முளைக்கும்

  By திருமலை சோமு  |   Published on : 06th May 2017 05:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CONGRESS_PARTY

  காங்கிரஸ் கட்சியின் வரலாறு நம் நாட்டின் சுதந்திரப் போரட்ட வரலாற்றைப் போல் மிக நீண்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்தது, அடையவில்லை என்ற இருவேறு கருத்து உலவும் அதேவேளை திராவிட கட்சிகளின் ஆதிக்கம் மூழ்க தொடங்கி விட்டதாகும் சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில்தான் தமிழகத்தில் தேசிய கட்சிகளின் கடந்த கால அரசியல் பயணத்தை நாம் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசிம் ஏற்பட்டுள்ளது. 

  தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலும் எல்லா கட்சிகளுமே காமராஜர் ஆட்சியை கொண்டு வருவோம் என்று பேசத்தொடங்கி இருப்பது காமராஜர் என்ற தனிப்பட்ட மனிதரின் நேர்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றாலும்  அவர் காங்கிரஸ் கட்சிக்குரியவர் என்ற அடிப்படையில் காங்கிரஸ் பெருமிதம் கொள்ள வேண்டும் என்பதே உண்மை.

  1957-ல் காங்கிரஸ் கட்சி, எதிரிகளே இல்லாமல் கோலோச்சியது. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற கம்யூனிஸ்ட் வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. 1962-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 139 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றிருந்தது. அப்படி திரும்பிய பக்கம் எல்லாம் பட்டொளி வீசி கொடிகட்டி பறந்த காங்கிரஸ் கட்சிக்கு இன்று தமிழகத்தின் உட்கிராமங்களில் மட்டுமல்லாமல் சில நகர்ப்புறங்களிலும் கூட  கொடி கம்பமாவது, இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு 50 ஆண்டுகளாக தோல்வியின் அதளபாதாளத்தில் சென்றிருக்கிறது அக்கட்சி என்பது மிகவும் வருந்ததக்க ஒன்று.
   

  எனினும் இதுகுறித்து எந்த ஒரு சூழலிலும் தமிழகத்தில் உள்ள எந்த காங்கிரஸ் தலைவர்களும் சுயப்பரிசோதனை செய்து கொள்ளவோ மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தமிழத்தில் கொண்டுவர வேண்டும் என்றோ கனவு காண்பதற்கு கூட தயாரக இருப்பதாக தெரியவில்லை.

  அதனால்தான் நீண்ட நெடுங்காலமாகவே திமுகவின் வால்பிடித்துக் கொண்டுச் சென்று கொண்டிருக்கின்றனர் காங்கிரஸார். அதோடு மட்டுமல்லாமல் அடிக்கடி மாநில தலைவர் பதவிக்கு போட்டிப் போட்டுக்கொள்ளும் அவர்கள் யாரும் பொறுப்புக்கு வந்ததும் கட்சியின் வளர்ச்க்கோ, வாக்கு வங்கியை உயர்த்திக் கொள்ளவோ முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளாமல் கூட்டணிகட்சிகளின் புகழ்பாடுவதிலும் அல்லது ஆளும் தரப்பை வசைபாடுவதிலுமே நேரத்தை வீணடிக்கின்றனர். 

  கல்லூரி மாணவர்கள் மத்தியில் காங்கிரஸ் கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதையும் மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் போன்றவற்றின் செயல்பாடுகள் மருந்துக்கும் கூட தமிழகத்தில் நடக்கவில்லை என்பதையும் ஏன் மேலிடம் கவனிக்க தவறுகிறது என்பது புதிராக உள்ளது.  5 விரல்கள் சேர்ந்திருந்தால்தான் கைக்கு பலம், காங்கிரஸ் கட்சியின்  சின்னமான கையில் தமிழகத்தை பொறுத்த வரையில் 5 விரல்களாக இருக்கும் மூத்த தலைவர்களான ப. சிதம்பரம், தங்கப்பாலு,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, மற்றும் வசந்தகுமார் என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்களில் தங்கபாலு, மற்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இருவரும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களாக இருந்துள்ளனர். 

  கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வென்றது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து  திருநாவுக்கரசர் தலைவராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்பு விழாவில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி ஒரு உன்னதமான இடத்தை அடைய வேண்டும். அதற்கு திருநாவுக்கரசருக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காங்கிரசில் கோஷ்டி பூசல் என்று சொல்வதை ஊடகங்கள் வாடிக்கையாக்கிவிட்டது என்றார்.

  ஆனால் அதே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னாளில் ஊடங்களுக்கு பேட்டியளித்த போது திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது என்று கூறினார். இதுதான் இன்றைய தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலையாக உள்ளது. அதேபோல் தங்கபாலு தலைவராக இருந்த போதும், எந்த தலைவர்களும் ஒற்றுமை உணர்வோடு இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு செயல்படவில்லை மாறாக முரண்பட்ட கருத்துக்களை பேசி அவரவர்கள் சொந்த நலன்களை கருத்தில் கொண்டு, அவர்களைச் சார்ந்த நபர்களுக்கு பதவி, பொறுப்பு வாங்கித் தருவதிலுமே கவனம் செலுத்தி வந்துள்ளனர்.

  மேலும் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் மாநிலத் தலைவராக இருந்த போது உட்கட்சியிலும் மற்ற கட்சி தலைவர்களையும் விமர்சிப்பதாக சொல்லிக் கொண்டு பல்வேறு சர்ச்சையில் சிக்கினார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியையும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் குறித்து விமர்சித்ததையும் குஷ்புக்கு கட்சியில் அவர் கொடுத்து வந்த முக்கியத்துவத்தையும் பார்த்து மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாயினர். 

  மத்திய முன்னாள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தில்லி மேலிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த போதும் தமிழக காங்கிரஸ் வளர்ச்சி குறித்து கொஞ்சமும் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்றே மக்கள் கருதுகின்றனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குப் பிறகு 4 மாத இடைவெளிக்குப்பின் திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

  பல்வேறு கோஷ்டிகளுடன் தெருவுக்கு ஒன்றும் திண்ணைக்குக் ஒன்றுமாய் இழுத்துக் கொண்டிருக்க எல்லோரையும் அரவணைத்துச் சென்று அரசியல்தளத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி முன்னிறுத்தப்போகிறார் என்ற கேள்விக்கிடையில் பதவியேற்ற அவரும் இதுவரை  கட்சிக்கு வலுசேர்க்க கூடிய முயற்சிகளையோ, அல்லது திசைக்கொன்றாய் இருக்கும் தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளையோ எடுத்ததாக தெரியவில்லை. 

  காமராஜர் மறைவுக்குப் பின் ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில் கேள்விக்குறியாக இருந்தது. அப்போது நெடுமாறன், சிவாஜி கணேசன், மூப்பனார் போன்ற தலைவர்கள் ஊர் ஊராக சென்று காங்கிரஸாரின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். பெருவாரியான காங்கிரஸார் இந்திரா காங்கிரஸில் இணைவதையே விரும்பினர். மூப்பனாரும் மக்கள் மனநிலை ஒட்டியே முடிவெடுத்தார். வாழும் காமராஜர் என்று பொது மக்களால் அன்புபோடு அழைக்கப்பட்ட கருப்பையா மூப்பனார் பழங்கால காங்கிரஸ்காரர்களை நினைவுபடுத்தும் ஒரு நினைவுச் சின்னமாக வளம் வந்தார். 

  பொது வாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை,வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வந்த அவர் மக்களின் நாடி துடிப்பை உணர்ந்து செயல்பட்டார். ஆனால் இன்றைய தலைவர்களுக்கு தில்லி மேலிடத்தின் நாடித்துடிப்பும் கூட்டணி கட்சிகளின் நாடித்துடிப்பு மட்டுமே முக்கியமாகிவிட்டது.

  அதனால்தான் மக்களை சந்திக்கவோ ஒரு பெரிய அளவிலான மாநில மாநாடு எதுவும் நடத்தவோ அவர்கள் முன்வரவில்லை என்றே பொதுமக்கள் கருதுகின்றனர். இதைப் பார்க்கும் போது தமிழக காங்கிரஸ் கை காட்டிக் கொண்டே மக்கள் மனதை விட்டு நெடுந்தூரம் சென்று கொண்டிருப்பதாகவே தெரிகிறது. 50 ஆண்டுகளை கடந்த தோல்விக்குப் பிறகும் எழுந்து நிற்க நினைக்காத தமிழக காங்கிரஸ் இன்னமும் கூட்டணி சிந்தனையிலும் ஒரு சில இடங்களின் வெற்றிக்கு மட்டுமே பாடுபட்டுக் கொண்டிருப்பது அந்த கட்சியின் அடிமட்ட தொண்டனின் நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  

  தமிழகத்தில் சற்றேரக்குறைய அனைத்துக் கட்சியிலும் ஒரு சுற்று வலம் வந்த திருநாவுக்கரசராவது காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பாடுபடுவார் என்று பார்த்தால் அவரும் தற்போது கூட்டணி விசயத்திலேயே கவனம் செலுத்துவதாக தெரிகிறது. ஆனால் என்ன இந்த முறை கூட்டணி காற்று திசைமாறி வீசுகிறது. 2-ஜி. வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில் தாய்கட்சி பாசம் அவரை இழுப்பது போலும் தில்லி மேலிடத்தின் எண்ணம் போல் கூட்டணி ஒப்பந்ததை மாற்றி அமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

  தமிழக அரசியலின் நிச்சயமற்ற ஒரு தன்மையில் பா.ஜ.க இங்கு காலூன்ற நினைக்கிறது என்று தெரிந்தும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் வாழ்ந்த பூமியில் பாரம்பரியம் மிக்க ஒரு கட்சியான காங்கிரஸ், மீண்டும் மீண்டும் கூட்டணிக்கு கொடிகட்டி கொண்டிருப்பதில் என்ன பெருமை இருக்க முடியும் என்பதை இனியேனும் சிந்திப்பார்களா கதர் கர்த்தாக்கள்.
                                                                                         திருமலை சோமு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai