Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய படிப்பு?: அறிமுகம் செய்யுமா தமிழக அரசு!- Dinamani

சுடச்சுட

  

  பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய படிப்பு?: அறிமுகம் செய்யுமா தமிழக அரசு! 

  By திருமலை சோமு  |   Published on : 09th May 2017 09:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  engineering

  ஏழையானாலும் செல்வந்தன் ஆனாலும் ஒரு தலைமுறையின் வளர்ச்சி ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது அவரவர் கற்கும் கல்வியை சார்ந்தே உள்ளது. இன்றைய கால சூழலில் அனைவரும் தொழில் சார்ந்த படிப்புகளையே படிக்க விரும்புகின்றனர். தொழில் கல்வி ஒன்றுதான்  பொருளீட்டுவதற்குரிய இலகுவான வாய்ப்புகளை வழங்குறது. 

  அதைவிடுத்து சாதாரண கலை அறிவியல் பட்டப்படிப்புகள் எல்லாம் முடித்துவிட்டு வெளியில் வந்தால். சுய திறமையைக் கொண்டே வேலை வாய்ப்பை பெற வேண்டியுள்ளது. அல்லது கிடைத்த வேலையை விதியே என்று ஏற்றுக்  கொள்ள வேண்டிய கட்டாயமாகிறது. ஒரு பணியும் பதவியும் அதன் மூலம் ஈட்டும் சம்பளமுமே சமூகத்தில் அந்த மனிதனை அடையாளப்படுத்தக் கூடிய காரணிகளாகிவிட்ட இன்றைய சூழலில் யாரும் தன் மகனையோ மகளையோ விவசாயம், நெசவு, போன்ற தொழில் செய்ய அனுமதிக்க விரும்புவதில்லை. எல்லோரும் மருத்துவராக வேண்டும் பொறியாளர் ஆக வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர். 

  அதே சமயத்தில் பள்ளிக் கல்வியின் போதே ஒரு மாணவன் தன் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப என்ன மேற்படிப்பை தொடராலாம் என்ற விழிப்புணர்வும் இன்றைய கல்விச்சூழல் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகங்கள் மூலம் அவனுக்கு கிடைத்துவிடுகின்றன. போட்டி நிறைந்த உலகில் தனக்கான இடத்தை எட்டிப் பிடிக்கவும், தன் வாய்ப்பை யாரும் தட்டிப் பறிக்காமல் இருக்கவும் விழிப்புணர்வோடு போராட வேண்டிய அவசியம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அதுமட்டும் அல்லாமல் கிராமப்புறம், நகர்ப்புறம், மாநிலம் தழுவிய வாய்ப்புகள் என்பதையும் தாண்டி இன்று நாடு முழுமைக்குமான ஒரு வாய்ப்பை பெறக்கூடியச் சூழலை அரசு ஏற்படுத்தி வருகிறது. மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது போல, பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

  பொறியியல் படிப்பின் தரம்

  இவற்றிற்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும். நாடு தழுவிய இந்த வாய்ப்பு பணம், இடஒதுக்கீடு எல்லாவற்றையும் தாண்டி ஒரு திறமையான மருத்துவர், பொறியாளரை உருவாக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் பொறியியல் படித்தவர்களே முன்னிலை வகிக்கின்றனர். மேலும் தமிழகத்தின் மூன்றில் ஒரு மாணவர் பொறியியல் படிப்பை 4 ஆண்டுகளில் முடிப்பதில்லை என்பதை பொறியியல் படிப்பின் தரம் குறித்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கல்வி புரட்சியினால் இன்று குக்கிராமங்களிலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு காய்கறி வியாபாரம் போல் மாணவர் சேர்க்கை சந்தைமயமாகிவிட்டது. பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்யும் எந்த ஒரு உற்பத்தியாளனும் அந்த பொருளுக்கான சந்தை வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை ஆய்வு செய்த பின்னரே உற்பத்தி பணியைத் தொடங்குவான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகளை நமது கல்வி முறை உற்பத்தி செய்து அனுப்புகிறது. 

  குறைவான சம்பளத்தில் பணியாற்ற வேண்டிய அவலம்

  இவர்களுக்கான பணி வாய்ப்புகள் அந்த அளவுக்கு இல்லை என்பதை தெரிந்தும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதியை அரசு வாரி வழங்கி இருக்கிறது. இதனால் இன்று எல்லா ஊர்களிலும் காற்றாடிக் கொண்டு இருக்கும் காலி இடங்களை நிரப்ப முடியாமல் தனியார் பொறியில் கல்லூரி நிர்வாகிகள் சந்தைக்கு சென்று மாடுபிடிப்பது போல் மாணவர்களை தேடி அலையத் தொடங்கியுள்ளனர். இதுஒருபக்கம் என்றால்  ஏற்கனவே பி.இ முடித்த மாணவர்கள் பலர் சாதாரண வேலையில் 10 ஆயிரத்திற்கும் குறைவான சம்பளத்தில்   பணியாற்ற வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதை இந்த அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

  தமிழகத்தில் 70 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். இந்திய அளவில் தமிழகம் இதில் முதலிடம் வகிக்கிறது என்பது வேதனையான ஒன்று. தமிழகத்தில்  பொதுப்பணித்துறையில் 700, நெடுஞ்சாலைத்துறையில் 972, மின்வாரியத்தில் 1,650 பொறியாளர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் தற்போது வரை காலியாக உள்ளன. அந்த பணியிடங்களை நிர்ப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பணிவாய்பு ஒருபக்கம் கேள்விகுறியாக ஆனதால் பொறியியல் படிப்பின் மீது இருந்த ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்திருப்பதாகவே கூறப்படுகிறது. 

  தத்தளிக்கும் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் 

  தமிழகத்தில் கடந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மொத்த இடங்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 719. இதில் 85 ஆயிரத்து 664 இடங்களே நிரப்பப்பட்டன. 1 லட்சத்து 7 ஆயிரத்து 55 இடங்கள் காலியாகவே இருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இதுவரை 30 ஆயிரத்திற்கும் குறைவாகவே வந்துள்ளதாக தெரிகிறது. பணிவாய்ப்பு ஒருபக்கம் பிரச்னை என்றால் தனியார் பொறியியல் கல்லூரிகளில் திறமையான ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு வசதிகள், ஆய்வுக்கூடங்கள் சரியாக இல்லாதது இன்னொரு பிர்சனையாக கூறப்படுகிறது. பொறியியல் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தாலும் காலி இடம் இருக்கும் என்பதுதான் உண்மை.  

  தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசியல்வாதிகள் சார்புடைய கல்லூரிகள் எத்தகைய நெருக்கடிகளையும் சமாளித்துவிடும். ஆனால் கல்வியை சேவையாக கருதி பொறுப்பில் எடுத்துள்ள சில நிர்வாகங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் கப்பல் போல் எந்நேரத்திலும் மூழ்கக்கூடும் என்ற அச்சத்தில் செய்வதறியாது தவிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

  கொண்டு வரப்படுமா பதிய படிப்புகள்

  மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு போன்று, பொறியியல் படிப்புக்கு அடுத்த ஆண்டு பொது நுழைவு தேர்வு வந்தாலும்  பொறியில் கல்லூரிகளின் காலி இடங்கள் நிரப்பப்படுமா என்ற ஐயம் உள்ளது. எனவே பொறியியல் கல்லூரிகளில் வாழ்க்கை கல்வியோடு ஒட்டிய, மேலும் கூடுதலாக பிற தொழில் சார்ந்த புதிய படிப்புகளையும் அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே கருதுகின்றனர். 

  தற்போதைய சூழலில் அமெரிக்காவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்களுக்கு விசா மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து, அமெரிக்காவிலும் ஐ.டி. வேலைவாய்ப்புகள் கணிசமாக குறையும் நிலை இருப்பதாக கூறப்படுவாதால் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை விடுத்து இந்த ஆண்டும் கலை அறிவியல் பட்டப்படிப்பை நோக்கி படையெடுத்துள்ளனர். எது எப்படியோ இந்த ஆண்டும் பொறியியல் கல்லூரிகளின் இருக்கைகளும் காற்றாடப்போகிறது என்பதே நிதர்சனம்.
                                                                       - திருமலை சோமு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai