Enable Javscript for better performance
சக்தி கொடு: பாபா முத்திரையுடன் விரைவில் ரஜினியின் புதிய பயணம்!- Dinamani

சுடச்சுட

  

  சக்தி கொடு: பாபா முத்திரையுடன் விரைவில் ரஜினியின் புதிய பயணம்!

  By -திருமலை சோமு  |   Published on : 17th May 2017 02:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  baba

  திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்து மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆயினும் அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து திட்டவட்டமான எந்த கருத்தையும் இதுவரை சொல்லவில்லை என்றாலும் ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலுவாக சொல்லி வருவதை நாம் கவனிக்க வேண்டும்.

  இந்த உலகம் ஒரு நாடக மேடை நாம் எல்லாம் அதில் நடிகர்கள் என்று தத்துவமேதை சேக்‌ஷ்பியர் சொல்வது போல் இறைவன் இன்று என்னை ஒரு நடிகனாக வைத்திருக்கிறான். நாளை நான் என்னவாக ஆகவேண்டும் என்பது அந்த இறைவன் கையில் உள்ளது என்பதையே அவர் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

  இந்த உலகில் அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது என்பதை துல்லியமாக கணித்துச் சொல்ல நம்மால் முடியாத நிலையில் நாம் எல்லோருமே நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை ஒத்துக் கொள்கிறோம். அந்த வகையில் அப்படி ஒரு சக்திதான் தன்னை இயக்குகிறது. எனவே நான் அரசியலுக்கு வருவது குறித்தும் அந்த சக்திதான் தீர்மானிக்கும் என்றே ரஜினி சொல்கிறார்.

  இதையேதான் அவர் நடித்த அருணாச்சலம் படத்தில் ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான் என்று பஞ்ச் டைலாகாக பேசி இருப்பார். ஆனால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பும் பேச்சும் நீர்த்துப் போகாமல் இருக்கிறது என்று சொன்னால் அவர் அரசியல்வாதியாக மாறுவதற்கான விதி இருப்பதாகவே நம்பப்படுகிறது. 

  இதுவரை அதற்கான கால சூழல் வரவில்லை என்று சொல்லி தப்பித்துக் கொண்டிருந்த ரஜினியால் இனியும் அவ்வாறு தப்பிக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் தமிழ்நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் சூழல் நிலவி வருவதால் ஒரு நேர்மையான, பிரபலமான ஆளுமை மிக்க தலைவரை அடையாளம் காண வேண்டிய அவசியம் இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் காமராஜர், அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற வலிமையான தலைவர்களை கண்ட தமிழகம் இப்போது அதேபோன்று அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தலைவரை காணமுடியாமல் இருக்கிறது. 

  அப்படி ஒரு தலைவரை அடையாளம் காட்டும் அளவுக்கு "சோ" மாதிரியான ஒரு அரசியல் ஞானியோ, விமர்சகர்களோ கூட இப்போது இல்லை. காலத்தின் போக்கில் நதி போல ஓடிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் வாழ்வில் திருப்பம் என்பது எதிர்பாராமல் நிகழ்ந்து விடும். ஆனால் ரஜினியின் திரை வாழ்வில் வேண்டுமானால் அப்படி ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கும்.  

  அரசியல் வாழ்வை பொறுத்தவரையில் 1996 சட்டப் பேரவைத் தேர்தலில் ‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’ என சொல்லி, தி.மு.க. மற்றும் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு பகிரங்கமாக முதன்முதலில் ஆதரவு தெரிவித்தார். அப்போதிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவார், வரவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் குரல் ஒலிக்க தொடங்கியது.

  ஆனால் இதுவரை வந்தபாடில்லை. என்றாலும் வரமாட்டேன் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. என்பதால் தற்போதைய சூழலில் பா.ஜ.க ரஜினியை அரசியலுக்கு வரவழைக்க திட்டம் தீட்டியுள்ளது. அவர் பா.ஜ.க பக்கம் போய் விடாமல் இருப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முயற்சி எடுத்து வருகிறது. 

  இந்நிலையில்தான் ரஜினிகாந்த் ரசிகர்களுடனான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் அவர் பேசும் போது:- அரசியலுக்கு வந்தால் நியாயமாக இருப்பேன்; பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு இருப்பவர்களை என் பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன்.1996-ல் நான் ஆதரித்த கூட்டணியை வெற்றி பெற செய்தீர்கள். நான் நாளை எப்படி ஆக வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிப்பார். நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று என் தலையில் எழுதியிருப்பதாக நீங்கள் நினைத்தால் ஏமாந்து விடுவீர்கள் என்று கூறினார்.

  இதுவே அவர் அரசியலுக்கு வருவார் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக உள்ளது. ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்குவாரா, அல்லது பா.ஜகவுடன் இணைந்து செயல்படுவாரா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். எனினும் ரசிகர்கள் சந்திப்பு மேடையில் தாமரை மேல் பாபா முத்திரை பதித்தது போல் படம் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும் போது அவர் பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படவே வாய்ப்பிருப்பப்தாகவும் அவ்வாறு பா.ஜ.கவில் அவர் இணைந்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 

  அதே சமயத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்று கேட்டால் நீண்ட நெடுங்காலமாக பேசப்பட்டு வரும் நதி நீர் இணைப்பு சாத்தியப்படக்கூடும் அதற்கான அழுத்ததை அவர் கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் கடுமையான தண்ணீர் பிரச்னை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இது ஒன்றுதான் வழி.

  நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் மிகவும் பாதிக்கப்படப் போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எல்லாம் பல ஜீவநதிகள் ஓடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் ஜீவநதி எதுவும் இல்லை. நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே கூறியுள்ளார். 
   
  அதுமட்டும் அல்லாமல் அவரது சமூக அக்கறை பற்றி சொல்ல வேண்டுமானால் 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி உதவி கொடுத்த ஒரே நடிகன். 1992 ல் ஏற்பட்ட காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக மாநிலத்தில் வசித்த தமிழர்கள் மீது கன்னடர்கள் தாக்குதல் நடத்தினர். அப்போது   கன்னட மக்களுக்கும் அம்மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்ததோடு அங்கு தாக்கப்பட்ட தமிழர்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் நிதியுதவிகளை தன் சொந்த செலவில் வழங்கினார். அதுமட்டுமல்ல, 'பாதிக்கப்பட்ட தமிழர்கள் என்னைத் தேடி வந்தால் அவர்களுக்கு உதவி செய்ய என்னுடைய இல்லம் எப்போதும் திறந்திருக்கும்' என்று கூறினார். 

  இது ஒன்றே ரஜினி தமிழ் மக்கள் மீது கொண்ட நேசத்திற்கான சான்று. பதவி ஆசை இல்லாததால் தான் இன்று வரை அவர் அரசியலுக்கு வருதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். ஆனால் அவரின் ஆதரவை பெற்று 1996ல் ஆட்சியப் பிடித்த திமுகவினர் நன்றியை மறந்து, ரஜினி அரசியலுக்கு இதோ வருகிறேன்... அதோ வருகிறேன் என 30 ஆண்டுகாலமாக பூச்சாண்டி காட்டுகிறார் என்று கூறியுள்ளனர்.

  மேலும் அவர் ஜெயலலிதாவை எதிர்த்து தாக்கு பிடிக்க முடியாமல் தொழில் முடங்கிப் போய்விடும் என அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தார். அன்று நாம் ஆதரிக்காமல் இருந்தால் அவரது நிலைமையே வேற.. இன்றும் பிழைப்புக்காக ஏதோ பாடுகிறார்.. என திமுகவின் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பிழைப்புக்காக எதையும் செய்யும் மனிதராக ரஜினி இருந்திருந்தால் 1996ம் ஆண்டே அவர் தன் செல்வாக்கை பயன்படுத்தி புதிய கட்சி தொடங்கி அப்போதே   மாபெரும் வெற்றி பெற்றிருந்திருப்பார். 

  எம்.ஜி.ஆர் எப்படி தன் திரைபடங்களில் மக்கள் நல சிந்தனைகளை முன்வைத்து மக்கள் தலைவராக உருவானாரோ அதுபோல் ரஜினி தன் படங்கள் எல்லாவற்றிலும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்படாதவராகவே தன்னை காட்டிக் கொண்டு வந்துள்ளார். அது உண்மையாக இருப்பதால்தான் புகழும் பதவியும் தேடி வந்த போதெல்லாம் அதை எதிரே நின்று சிரித்து வரவேற்கிறார். தன் தலைக்கு மகுடமாக அதை அணிய விரும்பியதே இல்லை. இப்படி ஒரு தலைவன்தான் தற்போதைய சூழலில் தமிழ் நாட்டுக்கு தேவை என்றால் மிகையில்லை.

  மேலும் இன்றைய சூழலில் தமிழக அரசியலில் ஜாதி மத, மொழி, இனத்துக்கு அப்பாற்பட்ட ஆளுமை மிக்க தலைவராக ஒருவரைக் கூட  நம்மால் அடையாளம் காண முடியாத நிலையில் ரஜினியை அப்படி ஒரு தலைவனாக நாம் அடையாளம் காட்டுவதில் தவறு ஒன்றும் இல்லை என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அவருக்கான வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப்போவது ரஜினியின் ரசிகர்களோ இன்று எதிர்ப்பு அலைகளை வீசுபவர்களோ மட்டும் இல்லை. எல்லா தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்துதான் ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.

  காமராஜர் போல் அண்ணா போல், கருணாநிதி போல், எம்.ஜி.ஆர். போல், ஜெயலலிதா போல், ஒரு தலைவர் இங்கு இல்லையே என்று தேடித் திரியும் மக்களுக்கு தற்போது உள்ள பல்வேறு அரசியல் உத்தமர்களுக்கு நடுவில் ரஜினியும் ஒருவாய்ப்பாக இருந்துவிட்டுப் போகட்டுமே..!
                                                                           - திருமலை சோமு

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai