இறைவனைப் பற்றிய அன்பரின் மனக்கருத்தை எடுத்துரைக்கும் பாடல்கள் இவை. பதிகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதில் ஆறு பாடல்கள் மட்டுமே உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
245
பாடலின்பம்
காணும்அதுஒழிந்தேன், நின் திருப்பாதம் கண்டு கண் களிகூரப்
பேணும்அதுஒழிந்தேன், பிதற்றும்அதுஒழிந்தேன், பின்னை, எம் பெருமானே,
தாணுவே, அழிந்தேன் நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்
காணும்அதுஒழிந்தேன், நீ இனி வரினும் காணவும் நாணுவனே.
*
பால்திருநீற்று எம் பரமனை, பரம்கருணையோடும் எதிர்ந்து
தோற்றி மெய்அடியார்க்கு அருள்துறை அளிக்கும் சோதியை, நீதிஇலேன்
போற்றி என் அமுதே என நினைந்து ஏத்திப் புகழ்ந்து அழைத்து அலறி என் உள்ளே
ஆற்றுவனாக, உடையவனே, எனை ஆவ என்றுஅருளாயே.
பொருளின்பம்
நிலைத்துநிற்கும் எங்கள் பெருமானே,
நான் உன்னைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன், உன்னுடைய திருவடிகளைக் கண்டு, கண்கள் மகிழ்ச்சியடைய, உன்னைப் போற்றுவதை நிறுத்திவிட்டேன், பிதற்றுவதை நிறுத்திவிட்டேன், உன்னை நினைந்து உருகும்தன்மையை விட்டுவிட்டேன், என்னுடைய அற்பகுணத்தால் உன்னைத் தரிசிப்பதையும் நிறுத்திவிட்டேன்,
(எனினும்,) சிவபெருமானே, நீ (எனக்கு அருள் செய்வாய்,) என்முன் தோன்றுவாய், அப்போது உன்னைப் பார்க்க நான் கூசுவேன்.
*
பால் போன்ற வெண்மையான திருநீற்றை அணிந்த பரமனை, மிகுந்த கருணையோடு எதிரில் தோன்றி உண்மையான அடியவர்களுக்கு அருள்வழியைக் காட்டுகிற சோதிவடிவானவனை நான் வணங்க வேண்டும்,
நான் நீதியில்லாதவன்தான், எனினும், அவனைப் போற்ற வேண்டும், ‘என் அமுதே’ என்று நினைத்துப் புகழ்ந்து, அழைத்து, அலறி, நான் ஆறுதல் பெற வேண்டும்,
சிவபெருமானே, என்னை அடிமையாகக் கொண்டவனே, என் நிலையைக் கண்டு, ‘அடடா!’ என்று பரிதாபம் காட்டு, எனக்கு அருள்செய்.
சொல்லின்பம்
காணும்அதுஒழிந்தேன்: காண்பதை நிறுத்திவிட்டேன்
களிகூர: மகிழ்ச்சியடைய
பேணும்: பேணுதல் / போற்றுதல்
பின்னை: பிறகு
தாணுவே: ஸ்தாணுவே / நிலைத்துநிற்பவனே
நின் நினைந்து: உன்னை நினைத்து
புன்மைகள்: இழிவுகள்
வரினும்: வந்தாலும்
நாணுவனே: கூச்சப்படுவேனே
பால் திருநீறு: பால்போல் வெண்மையான திருநீறு
எதிர்ந்துதோற்றி: எதிரே தோன்றி
அருள்துறை: அருள்வழி
ஏத்தி: புகழ்ந்து
ஆற்றுவன்: ஆறுதல் அடைவேன்
உடையவனே: என்னை அடிமையாகக் கொண்டவனே
ஆவ: அடடா / அந்தோ / பரிதாபப்படுதல்